திங்கள், மே 15, 2023

லாலான் முள்ளும் லப்பர்க் கொட்டையும் - படைப்பிலக்கியத்தின் வெற்றி

லாலான் முள்ளும் லப்பர்க் கொட்டையும் - படைப்பிலக்கியத்தின் வெற்றி
மணி மு. மணிவண்ணன்

தமிழின் மிகப்பெரும் புலவர்கள் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொல்லும்போது அது ஒரு கரை காண முடியாத கடல் என்று மலைப்பார்கள். அதெல்லாம் அவர்கள் சங்க இலக்கியங்கள், காப்பியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பே சொன்னது. உ. வே. சா. அவர்களின் "என் சரித்திரம்" நூலில் இப்படியொரு குறிப்பு வரும்.

அப்படிப்பட்ட கரை காண முடியாத கடலில், படைப்பிலக்கியங்களில் கொண்டாடப்படுபவை பாவினங்கள்தாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை பாடல்களுக்கே உண்டு. அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தும் தன்மையெல்லாம் குறுகத்தரித்த குறள் வெண்பாவினால்தான் முடியும்.

செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கும் சுவையே தனி. தமிழின் சான்றோர் இலக்கியங்களைப் படிப்பதில் ஒரு கூடுதல் சுவை உண்டு. அவை நம் முன்னோர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், மாந்த இயல்பை நம் உள்ளத்தைத் தைக்கும் வகையில் சொன்னதும் அந்தச் சுவையைக் கூட்டும்.

சொல் வளம், பொருள் வளம் நிறைந்து கிடக்கும் அந்தக் கருவூலத்தைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டும். பாடல்களை, கவிதைகளைப் படிப்பது கூட ஒரு கலை. படிப்பவர்களின் பின்புலத்தைப் பொறுத்து, அவருடைய கல்வி, பட்டறிவு, வாழ்க்கையில் அவர் நிலை என்பவற்றைப் பொறுத்து, பிற மொழிகளிலும் அவர் என்னென்ன படித்துச் சுவைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து இது ஆளுக்கு ஆள் மாறும். இதில் கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசு, என்றெல்லாம் நாம் வழங்கும் பட்டங்கள் நமக்குப் பெரிதாகத் தோன்றலாம். ஆனால் பிறர் அவற்றை ஏற்க வேண்டியதில்லை.

பண்டைத் தமிழிலக்கியம் என்னை ஈர்த்த அளவுக்குத் தற்காலத் தமிழிலக்கியம் ஈர்த்ததில்லை. அதிலும் பாரதி, பாரதிதாசன் கவிதைகளைத் தாண்டிப் பிற கவிதைகளைச் செப்பிடு வித்தைகளைப் பார்ப்பது போல் பார்த்துக் கடந்திருக்கிறேன். ஆனாலும், அவ்வப்போது ஒரு சில கவிதைகள் என் உள்ளத்தைத் தைக்கத் தவறவில்லை.

எப்போதாவது சில சமயத்தில் ஒரு சில கவிதைகள் என்னை உலுக்கி விடும். நெஞ்சின் ஆழத்தில் அவை உறங்கிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது விழித்தெழுந்து வாழ்க்கையைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மீண்டும் மீண்டும் சீராய்வு செய்யத் தூண்டும். இன்று வேறு எதையோ பற்றி எழுதிக் கொண்டிருந்த போது, மங்கிக் கொண்டிருக்கும் என் நினைவுக் கிடங்கிலிருந்து இந்த வரிகள் விழித்தெழுந்து என்னை உலுக்கின.

"லாலான் முள்ளு டிங்கின்னுதே! லப்பர்க் கொட்டை டப்புன்னுதே!"
இது மலேசியாவின் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தொகுத்த "மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" என்ற நூலில் இடம் பெற்ற ஒரு கவிதையின் சில வரிகள். அடிக்கடிப் புரட்டிப் படிக்கும்போதும் மேற்கோள் காட்டும்போதும் எளிதாகக் கண்டுபிடிக்க வசதியாக இருப்பதற்காக, அந்த நூலின் பல பக்கங்களில் அடிக்கோடிட்டு, பக்கம் குறிக்கும் ஒட்டுத்தாள் இட்டு, அடையாளச் சுட்டிகளைப் பாதுகாத்திருந்தேன். சென்னை வெள்ளத்தில் நான் இழந்த கருவூலங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் இன்று என் நினைவுக்கு வந்த வரிகள் என் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து முகிழ்த்தவை.

நான் மேற்கோள் காட்டிய "கவிதை"யை எழுதியவர், கல்வியறிவு அவ்வளவாக இல்லாத ஒரு தோட்டத் தொழிலாளி. தன் தாய்மண்ணில் வாழ முடியாத நிலையில், விற்பனையாளர்கள் பொன் கொழிக்கும் நிலம் என்று கற்பித்த மலாயாவுக்குச் செல்வம் தேடிக் கப்பலேறிய பலருள் அவரும் ஒருவர். எண்ணற்ற கனவுகளைச் சுமந்து சென்ற அவர், மலாயாவில் எதிர்கொண்ட உணர்வுகளை இந்த இரண்டு வரிகள் அவரது உள்ளத்தைப் பிழிந்து சாறாக்கித் தந்து விடுகின்றன.

மலாயாக் காடுகளில் இரபர் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற அவர் காலணி இல்லாமல் நடந்த போது அவர் காலில் தைத்த லாலான் முள்ளை நினைவு கூர்கிறார். இரபர் தோட்டத்தில் தரையில் கிடக்கும் இரபர் கொட்டைகள் அவ்வப்போது வெடித்தது, எண்ணற்ற கனவுகளைச் சுமந்து வந்த தம் நெஞ்சே வெடித்ததைப் போன்று உணர்கிறார்.

இந்தக் கவிதையின் தாக்கம் அதன் மொழி வளத்தால் வரவில்லை. யாப்பின் செழுமையால் இல்லை. ஓர் எளிய தொழிலாளி தான் பட்ட வேதனையை இந்தச் சொற்களால் பல பத்தாண்டுகள் கழித்தும் அந்தத் தோட்டத்தைப் பற்றித் தெரியாத என்னைப் போன்று வசதியுடன் வாழும் மெத்தப் படித்த இன்னொரு தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறார்.

அந்தக் கவிதையைப் படித்த சில ஆண்டுகள் கழித்து மலேசியாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 2001 தமிழ் இணைய மாநாட்டின்போது பினாங்குத் தீவுக்குச் சென்றிருந்தேன். அங்கே என்னை அழைத்துச் சென்றவர் மருத்துவர், தமிழறிஞர் செயபாரதி அவர்கள். அவர் ஓர் இரபர் தோட்டத்திற்குள் என்னை அழைத்துச் சென்ற போது அவரிடம் இந்த "லப்பர்க்கொட்டை" பற்றிக் கேட்டேன். அவர் இரபர் தோட்டத்தின் தரையில் இருந்து சில இரபர் கொட்டைகளை எடுத்துக் கொடுத்தார். அந்தத் தோட்டத் தொழிலாளியின் கவிதையின் நினைவாக அந்த "லப்பர்க் கொட்டைகளை" அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றேன்.

படைப்பிலக்கியத்தின் நோக்கமே இதுதான். இடம், காலம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதன் தன் அடிமனதில் உணருவதை அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொருவருக்குக் கொண்டு சேர்ப்பதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றி.
படைப்பிலக்கியத்தின் நோக்கமே இதுதான். இடம், காலம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதன் தன் அடிமனதில் உணருவதை அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொருவருக்குக் கொண்டு சேர்ப்பதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றி.

அந்தக் கவிதை என் உள்ளத்தை இன்றும் ஆழத் தைக்கிறது. தமிழ் மண்ணில் பிறந்த ஒரு தமிழரை, அவர் போன்ற பல தமிழர்களை, இந்த மண் கைவிட்டிருக்கிறது. அவரைப் போன்ற ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் மலாயா, சிலோன், பிசித்தீவுகள், மொரீசியசு தீவுகள், ரெ யூனியோன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என்று உலகெங்கும் சிதறினார்கள். கப்பல்களில் ஏறி வணிகம் செய்ய அவர்கள் செல்லவில்லை. தங்கள் அடிப்படை வாழ்வை உறுதி செய்ய வேறு வழியே இல்லாமல் சென்றார்கள். அவர்கள் தங்களைக் கொத்தடிமைகளாய் விற்றுப் பிழைக்கச் சென்ற கதையை அவர்களுடைய தாய்மண்ணே மறந்து விட்டது. இனிமேலும் இப்படி ஓர் இழிவு தம் மக்களுக்கு வரக்கூடாது என்று எந்தத் தலைவர்களும் உறுதி எடுத்ததாகத் தெரியவில்லை.

இது ஏதோ சென்ற நூற்றாண்டுகளின் கதை மட்டுமல்ல. தங்கள் வாழ்விடத்தை விட்டுப் புலம்பெயரும் தமிழர்கள் கதை இன்னும் தொடர்கிறது. அது யாழ்ப்பாணமாக இருந்தாலும் சரி, அடையாற்று ஆற்றங்கரையாக இருந்தாலும் சரி, அந்த இழப்பின் வலியும், அவர்கள் எதிர்கொள்ளும் புதிய வாழ்க்கையின் இழிவும் நம் நெஞ்சைத் தைக்க வேண்டும். அதை நம் வாழ்நாளில் இன்னும் நடக்க விடுகிறோமே என்று நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

படைப்பிலக்கியத்தின் தன்மை அதுதான். அதன் பாடுபொருள் உலகளாவியது. அந்த லப்பர்க் கொட்டை தமிழர்களைப் பற்றியது மட்டுமல்ல. இன்றும் பிழைப்பு தேடி தமிழகத்துக்கு வரும் பிகாரிகளைப் பற்றியது மட்டுமல்ல. குண்டு வீச்சிலிருந்து தப்பிச் செல்லும் உக்கிரயீனாவின் மக்களைப் பற்றியது மட்டுமல்ல.

கருத்துகள் இல்லை: