சனி, நவம்பர் 28, 2009

புலந்திரும்பலின் சிக்கல்கள்

புலந்திரும்பலின் சிக்கல்கள்

அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியத் தலைமை அமைச்சர் முனைவர் மன்மோகன் சிங், இந்திய அமெரிக்கர்களையும், புலம் திரும்பி இந்தியாவில் வந்து பணியாற்றுமாறு வேண்டிக் கொண்டார்.

ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலை ஆராய்ச்சியாளர் விவேக் வாத்வாவின் ஆய்வின்படி அடுத்த ஐந்தாண்டுகளில் நூறாயிரத்துக்கும் மேலான இந்தியக் கொடிவழியினர் இந்தியாவுக்குத் திரும்பக்கூடும் என்கிறது.

இன்றைய நியூ யார்க் டைம்ஸ் செய்தி, கொஞ்சம் பொறுங்கள், இது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை என்று அமெரிக்காவுக்கு ஆறுதல் அளிக்கிறது.

ஏறத்தாழ ஒரு தலைமுறை (மூன்று பத்தாண்டு கால) அமெரிக்க வாழ்க்கைக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய எனக்கு இந்தச் செய்திகள் என்னைப் போன்றோர் பற்றியவை என்பதால் ஆர்வத்துடன் படித்தேன்.

புலந்திரும்பும் இந்தியர்களை வரவேற்பதாக இந்தியப் பிரதமர் சொன்னாலும், அது வெறும் வாய் வார்த்தை மட்டுமே. திரும்புபவர்களுக்கு என்று தனியாக சீன அரசு செய்வது போன்ற உதவி எதையும் எதிர்பார்க்கக் கூடாது. சுங்கத் தீர்வைகள், இறக்குமதி சலுகைகள் போன்ற சில சலுகைகள் இருக்கலாம். அவையும்கூட, புலம் திரும்பும் இந்தியர்களுக்கு என்ற தனிப்பட்ட சலுகைகள் ஏதுமில்லை. மற்ற எவரையும் போல, உங்கள் வருங்காலத்தை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா இப்படி விட்டேற்றியாக நடந்து கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எப்படிப்பட்ட சலுகைகள் எவரை ஈர்க்கும் என்று சிந்தித்து அந்தத் திறமைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் அளவுக்கு அரசுத் துறைகள் சிந்திக்கும் திறனற்றவை. அப்படியே சிந்தித்தாலும், ஏற்கனவே வசதியுடன் வாழும் புலம்பெயர் இந்தியர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது அரசியல் ரீதியில் சிக்கலானது. சீன அரசுக்கு இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை.

இந்திய அரசு, புலம்திரும்பும் இந்தியர்களின் "தேச பக்தி", "குடும்பப் பிணைப்பு" அல்லது "லாப நோக்கு" என்ற இவற்றை மட்டுமே நம்பியிருக்கிறது. தேசபக்திக்காக இந்தியா திரும்புவார்கள் என்று நினைத்தால், இன்று வலைப்பூவுலகில் பக்கம் பக்கமாக நாட்டுப் பற்றைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே மூட்டை கட்டிக் கொண்டு இந்தியா வந்திருப்பார்கள். அதெல்லாம் வலைப்பூவில் மார் தட்டுவதோடு சரி. உண்மையில் பச்சை அட்டை கிடைக்க வாய்ப்பின்மை அல்லது குடும்பப் பற்று காரணங்களால் திரும்புபவர்களே கூடுதல்.

அண்மைக்காலத்தில் லாப நோக்கு கருதியும் பல இந்தியர்கள் புலம் திரும்புகிறார்கள். உண்மையில் புலம் திரும்புகிறார்கள் என்பதை விட இரு புலம் கொள்கிறார்கள் என்பதே பொருந்தும். அமெரிக்கக் குடியுரிமையும், கடல்கடந்த இந்தியக் குடியுரிமையும் கொண்டவர்கள் இரு நாடுகளிலுமே வாழ முடியும், வணிகம் செய்ய முடியும். இந்த வகையினருக்குச் சிக்கல்கள் அவ்வளவாக இல்லை. குடும்பத்தை அமெரிக்காவிலும், கும்பெனியை இந்தியாவிலும் கொண்டு வாழ முடியும்.

இந்தியாவில் குப்பை கொட்டுவதற்குத் தனித் திறமை வேண்டும். இது அமெரிக்காவைப் போன்ற சட்டங்களை மதிக்கும் நாடு அல்ல. அதைப் புரிந்து கொள்ள அரசாங்கத்துடனோ, அரசியல்வாதிகளுடனோ பழக வேண்டியதில்லை, சாலை விதிகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்து ஒன்றே போதும். சிவப்பு விளக்கு, நிறுத்தப் பலகை, ஒரு வழிப்பாதை, ஒழுங்கைகள், சாலைக் கோடுகள், குறுக்குச் சுவர்கள் என்று எவற்றையும் மதிக்காத மக்கள், சட்டம் என்பது பொதுநலத்துக்கு என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப் படுவதில்லை.

வீதியோரங்களில் கோவில் கட்டுபவர்கள், ஆற்றங்கரைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் குடிசை போடுபவர்கள், கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், ஆறுகளையும், ஓடைகளையும், ஏரிகளையும், குளங்களையும் சாக்கடையாக்குபவர்கள், ஆற்றுப்படுகைகளிலும், ஏரிப்படுகைகளிலும் பட்டா போட்டு அடுக்கு மாடி வீடு கட்டுபவர்கள் என்று பொதுமக்களே சட்டங்களைப் பொருட்படுத்தாமல் இயங்கும்போது நீதித்துறையையும், காவல்துறையையும், அரசியல்வாதிகளையும், குற்றம் சொல்லி என்ன பயன்? பேரா. ரகுநாதன் சொல்வதுபோல் இந்தியர்கள் தனிவாழ்க்கையில் அறிவாளிகள், பொதுவாழ்க்கையில் மூடர்கள். ( 'Indians Are Privately Smart and Publicly Dumb')

இந்தியர்களில் பலர் சட்டம், ஒழுங்கு, விதிகள் இவற்றைப் பின்பற்றுவதில்லை என்பது ஒன்றும் புதிய செய்தியில்லை. இது குறைந்தது 600 ஆண்டுகளாகவாவது இருக்கும் நிலை. எப்போது அந்நியர் ஆட்சிக்குக் கீழ் வாழ வேண்டியிருந்ததோ, அப்போதே, அரசாங்க விதிகளை எப்படி நெகிழ வைக்க வேண்டும் என்பதை அறிவதுதான் பிழைப்புக்கு வழி வகுப்பதாக இருந்திருக்க வேண்டும். சரி, இப்போதுதான் அந்நியர் ஆட்சி இல்லையே என்று வாதிக்கலாம். ஆனால், பல்வேறு சாதி, மதம், கொள்கைகளால் பிளவுண்ட மக்களுக்கு இராமன் ஆண்டாலும் சரி, இராவணன் ஆண்டாலும் சரி, ஆள்பவர்கள் அந்நியர்கள் என்றே தோன்றுகிறதுபோலும்.

ஆனால், எல்லோருமே இப்படிப்பட்டவர்களில்லை. இந்தியாவிலும் பலர் நேர்மையானவர்கள். சட்டம், விதிகளை மதிப்பவர்கள். உண்மையில், இப்படிப் பட்டவர்களும் இருப்பதால்தான் இந்தியா ஓரளவுக்காவது இயங்குகிறது எனலாம். ஆனால், மக்கள் நலத்துக்காக எந்தச் சட்டங்களை, எந்த விதிகளை, எப்போது ஓரளவுக்கு நெகிழ்விக்க வேண்டும் என்பது தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு விதிகளைப் பின்பற்றுபவர்களும் உண்டு. இதய வலியால் துடித்துக் கொண்டிருக்கும் பேருந்துப் பயணியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்காமல், ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறுத்திப் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஓட்டுநருக்கு ஒரு விதி, பயணிக்கு ஒரு விதி.

புலம் திரும்புபவர்களுக்கும் கலாச்சார அதிர்வு காத்திருக்கிறது. அலுவலக நெறிமுறைகள் அமெரிக்கா போல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்தியாவின் முறைகளுக்குப் புலம் திரும்புபவர்கள் ஆயத்தமாக வேண்டும். என்ன இருந்தாலும், இந்தியாவும் அமெரிக்காவும் அந்நிய நாடுகள்தாமே!

அமெரிக்காவில் நெடுநாள் வாழ்ந்தவர்களுக்கு அமெரிக்கக் கலாச்சார இயல்புகள் தம்மை அறியாமல் இருப்பது வெளிநாட்டில் வாழ வரும்போதுதான் புரியும். புறத்தில் இந்தியன் அகத்தில் அமெரிக்கனாக இருப்பது இந்தியர்களுக்கும் குழப்பம் அளிப்பது. இந்தியாவில் எதுவும் திட்டப்படி நடப்பதில்லை. ஆனால், மிகவும் நெருக்கினால், தலைகீழாக நின்றாவது வேலை நடந்துவிடும். புலம் திரும்பும் இந்தியர்கள் இந்தியாவில் சமாளிப்பது எப்படி என்று யாரும் இதுவரை எந்த நூலும் எழுதியதாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மற்றபடி நியூ யார்க் டைம்ஸ் நாளேட்டில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நடவடிக்கைகள் எல்லாம் உண்மைதான். வேலைக்குச் சேருவேன் என்று சொல்லிவிட்டுச் சேரும் நாளன்று சாக்குச் சொல்லி வேறு வேலைக்குப் போவது போன்ற செய்திகள் முதன்முறை நமக்கு நடக்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதனால், சேருவார்களா மாட்டார்களா என்ற சோதனையைச் சேரும் வரை செய்துகொண்டுதான் இருக்க வேண்டும். சேராமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற மாற்றுத் திட்டத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

அதே போல் அமெரிக்க முறைப்படி வாயில் வந்ததை உடனடியாகக் கொட்டி விடக்கூடாது. உங்கள் ஒவ்வொரு சொல்லும் எடை போடப்படும். எப்போது, எங்கே, யாரிடம், எதை, எப்படிச் சொல்வது என்பது ஒரு தனிக்கலை. இது இன்னும் படிநிலைச் சமுதாயம்தான். மறக்கக் கூடாது. நியூ யார்க் டைம்ஸில் குறிப்பிட்டுள்ள திரு அய்யாதுரைக்கு அது தெரியவில்லை போலிருக்கிறது.

ஆனால், புலம்திரும்பும் இந்தியர்கள் நினைத்தால், நினைத்த நேரத்தில் தம் பெரிய குடும்பத்தோடு உறவாடலாம். பல தலைமுறைகள் ஒன்றாய்க்கூடிக் கொண்டாடுவது என்பது வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்குக் கனவுதான். கலாச்சார அடையாளங்கள் இங்கே இயல்பாக வருபவை. தாய்மொழி எங்கும் நிறைந்திருக்கிறது, கொச்சை கலந்திருந்தாலும்! இளைய தலைமுறையால் எதையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். வழிபாட்டுத்தலங்கள், கலாச்சாரச் சின்னங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், பண்டிகைகள், நண்பர்கள் குழாம் என்று வாழ்க்கையை நிறைவாக வாழலாம். ஊருக்கும் நம்மால் இயன்றதைச் செய்யலாம். இது போதாது என்றால், புலம்பெயர் தேயத்தில் வாழ்வதே நல்லது.

11 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

பின்னூட்டம் - சோதனை

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

[தமிழ் உலகம் மடற்குழுவில் வந்த கருத்து.]

இந்தியாவில் பணம்,சமூகத்தகுநிலை ஆகியவற்றிற்கான மதிப்பு மிகுதி.
நடந்துவருகின்ற கவிஞனை விட மகிழ்வுந்தில் வந்திறங்கும் கவிஞன் கொண்டாடப்படுகிறான். ஓய்வுபெற்ற பேராசிரியரைவிட ஓய்வுபெற்ற துணைவேந்தருக்கு மதிப்பு மிகுதி. இப்படிப் பல காட்சிகளை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

இத்தகைய நிலையை புலம்பெயர்ந்தோரால் பொறுத்துக்கொள்ளவோ இதனையே அவர்களும் பின்பற்றவோ முடியுமா?
'ஒப்புடையோரிடம் காழ்ப்பு' அதாவது Peer envy என்னும் பண்பும் உங்களுக்கு ஒரு தடைக்கல்லாக விளங்கலாம்.

புலம்பெயர்ந்து வரும் பொறியாளர் தாயகப்பொறியாளரால் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவத்ம் இத்தகைய சமூகநோயால்தான்.

புலம்பெயர்ந்தோரை இந்திய அரசு அழைப்பதும் அவர்கள் கையில் இருக்கும் டாலர்களுக்காகத் தான். அவர்களுக்கு எத்தகைய சலுகையையும் இந்திய அரசு கனவிலும் வழங்காது.

சூடு சுரணை மானம் மரியாதை என்பவற்றையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு இந்தியா வருவது என்றால் வாருங்கள்.

தன்மானம் உங்களுக்குப் பெரிது என்றால் இரட்டைக் குடியுரிமை வாங்கிக்கொள்ளுங்கள்.

இங்கே ஒரு பண்பாட்டுப்புரட்சி ஏற்படுத்த உங்களால்
முடிந்ததைச் செய்யுங்கள்.உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தியரைத் தேர்ந்தெடுத்து வழிநடத்தி இங்கே ஒரு பண்பாட்டுப்புரட்சி நடத்துங்கள்.
உங்களுக்கு உடனடியாக அதனால் பயன் ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் இந்தப் பண்பாட்டுப்புரட்சி வெற்றிபெற்றபின் உங்கள் சந்ததியினர்,அடுத்த தலைமுறையினர் இந்தியாவுக்கு வருவதற்கு
வழிபிறக்கும்.

செய்வீர்களா?

அன்புடன்,
மறைமலை

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

பேராசிரியர் மறைமலை அவர்களுக்கு,

பின்னூட்டம் அளிக்கும்போது 2400 சொற்களைத் தாண்டினால் ஏதோ சிக்கல் இருக்கும்போல் இருக்கிறது. அதனாலோ என்னவோ, உங்களால் இங்கே பின்னூட்டம் இட முடியவில்லை.

பண்பாட்டுப் புரட்சி ஒன்று இங்கே ஏற்கனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்க, மேலைநாட்டுப் பண்பாட்டுகளை அப்படியே வடிகட்டி, பன்னாடை போல் கழிவை நிறுத்திக்கொள்ளும் பண்பாடு!

ஆங்காங்கே, முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் நல்ல பண்பாடு இந்த மண்ணிலிருந்தே முகிழ்த்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன்.

இது மிகப் பெரிய நாடு. இதில் பல்வேறு சிந்தனை, கலாச்சார ஓடைகள், பல சமயம் ஒன்றுக்கொன்று முரணானவை, ஒரே நேரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

எது பெருநீரோட்டம் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

அன்புடன்,

மணி

Ravichandran Somu சொன்னது…

16 ஆண்டுகள் பாஸ்டன்,சிங்கப்பூர் வாழ்க்கைக்குப் பிறகு அடுத்த ஆண்டு புலந்திரும்பி சென்னையில் செட்ட்டில் ஆகலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். மிகவும் பயணுள்ள கட்டுரை எனக்கு! நன்றி!

//புலம் திரும்பும் இந்தியர்கள் இந்தியாவில் சமாளிப்பது எப்படி என்று யாரும் இதுவரை எந்த நூலும் எழுதியதாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்.//

எழுத்து துறையில் நல்ல அனுபவம் உள்ள தாங்கள் உங்கள் அனுபவங்களைக்கொண்டு ஒரு புத்தகம் எழுதலாமே. என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

//அதே போல் அமெரிக்க முறைப்படி வாயில் வந்ததை உடனடியாகக் கொட்டி விடக்கூடாது. உங்கள் ஒவ்வொரு சொல்லும் எடை போடப்படும். எப்போது, எங்கே, யாரிடம், எதை, எப்படிச் சொல்வது என்பது ஒரு தனிக்கலை.//

நான் இந்தியாவிற்கு விடுமுறைக்கு ஒவ்வொரு முறையும் வரும்போது உறவினர்களிடம் பேசும்போது என் மனைவி அடிக்கடி என்னிடம் கூறுவது “அமெரிக்காவில் பேசுவது மறி உளறி கொட்டாதீர்கள். சாதாரணமாகச் சொல்வதையும் மக்கள் உள் குத்து, சைடு குத்து வைத்து பேசுவதாக சொல்வார்கள்”

//ஆனால், புலம்திரும்பும் இந்தியர்கள் நினைத்தால்,...... நிறைவாக வாழலாம். ஊருக்கும் நம்மால் இயன்றதைச் செய்யலாம்.//

இந்த ஆசைகள்தான் நான் இந்தியா திரும்ப வேண்டும் என்ற் எண்ணத்திற்கு தூண்டுகோல்கள்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Yazhini சொன்னது…

'தென்றல்' இதழில் நீங்கள் எழுதிவந்த புழைக்க்டை பக்கங்களை நினைவூட்டுகிறது இந்த வலைப்பூ ! தாயகம் திரும்புவோருக்கு வழிகாட்டி(புத்தகம்) இருந்தால் நல்லதுதான்.

30 வருடத்திற்கு பிறகு சென்ற நீங்கள் என்னென்ன கலாச்சார அதிர்வுகளை சந்தித்தீர்கள் ? எழுதவும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

ரவிச்சந்திரன்,

புலம்திரும்புவோர் கையேடு என்பது நல்ல கருத்து. அதைத் தன்னந்தனியாக ஓர் ஆள் எழுதுவதற்குப் பதிலாக, பல புலம் திரும்பியோரின் பட்டறிவுகளைப் பதிவு செய்வது நல்லது என நினைக்கிறேன். ஒவ்வொருவரின் சூழலும், அனுபவமும் வேறுபடும். இந்தியாவில் வேலை செய்வது எப்படி என்று அமெரிக்கர்களுக்கான நூல்கள் சில இருக்கின்றன. அவற்றையும் படித்துப் பார்க்க வேண்டும்.

சிங்கப்பூர் வந்து விட்டீர்கள் இல்லையா! தமிழ்நாடு கொஞ்சம் எளிதுதான்!

துணிந்து இறங்குங்கள்! இது நீங்கள் பிறந்த நாடு. இதில் தாக்குப் பிடிக்க முடியாதா என்ன? :-)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அன்புள்ள யாழினி,

தென்றல் புழைக்கடைப் பக்கத்தை நினைவூட்டியதாக எழுதியதற்கு நன்றி! அதை நிறுத்தி மூன்றாண்டுகளாகின்றன. ஒவ்வொரு மாதமும், ஒரு பக்கத்துக்குள், ஒரு படத்துக்கும், தலைப்புக்கும் இடைவெளி விட்டு, குறட்பாப் போலச் செறிவோடு சொல்ல வேண்டிய கட்டுப்பாடு அச்சு இதழுக்கு எழுதும்போது இருக்கிறது. எழுத்தை எண்ணி எழுத வேண்டும்!

வலைப்பூவில் அந்தக் கட்டுப்பாடு இல்லை. அதனால் பழையபடிச் செறிவோடு எழுதுவதற்கு இன்னும் கொஞ்சம் எழுதிப் பார்க்க வேண்டும்.

கலாச்சார அதிர்வுகள் பற்றித் தொடருவேன். இது ஒரு முன்னுரை மட்டும்தான்!

அன்புடன்,

மணி

Unknown சொன்னது…

புலம்திரும்பியோர் அனுபவங்களை நூலாய் இடுவது சிறப்பு.

உதயமூர்த்தி பல கனவுகளோடு புலம் திரும்பினார். அவர் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.

அவர் சில நூல்களாவது எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது.

ஆயினும் இன்று நிலை வேறாக இருக்கலாம். பலரின் அனுபவத் தொகுப்பாக ஒரு நூல் வந்தால் சிறப்புதான்.

Manuneedhi - தமிழன் சொன்னது…

புலம் பெயர்ந்தோர், தாயகம் திரும்ப எண்ணுவோர் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை. நன்றி!

அதிகாலை நவின் - அமெரிக்கா

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் புகாரி,

புலம் பெயர்ந்தோர் மட்டுமல்ல,
புலம் திரும்புவோர் அனுபவங்களிலிருந்தும் இலக்கியம் பிறக்கும். புலம் திரும்புவோர் கையேடு மட்டுமல்லாமல், இலக்கியப் படைப்புகளையும் எதிர்நோக்கலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,

மணி

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அதிகாலை நவீன்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி,

அன்புடன்,

மணி