செவ்வாய், பிப்ரவரி 16, 2010

இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை - மறுபதிவு

 இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றி மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்மன்றம் மடற்குழுவில் உரையாடிக் கொண்டிருந்தோம் (பார்க்க: இந்திய ஊடகங்களின் மீது வழக்கமான ஒரு குற்றச்சாட்டு ).  அப்போது நான் எழுதியதை, நண்பர்களின் பரிந்துரையை ஏற்று, சில மாற்றங்களுடன், இங்கே மறு பதிவு செய்கிறேன்.


 ++++++++++++++++++



இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றிச் சென்ற சில ஆண்டுகளில் இந்து நாளேடு ஒரு தொடர் வெளியிட்டிருந்தது.  ஆங்கில ஊடகங்களில் வேலை செய்பவர்கள் பொதுவாக மேட்டுக்குடி மக்கள் (elite families) என்றும், ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்தவர்கள் என்றும், சாதாரண பொதுமக்கள் பற்றிய மேட்டுக்குடி சிந்தனை உடையவர்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

குறிப்பாக இட ஒதுக்கீடு பற்றிய செய்திகளிலும், அன்புமணி ராமதாஸ் பற்றிய செய்திகளிலும், தீவிர வலதுசாரி சாய்மானத்துடன் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  ஆனால், பொதுமக்களிடையே, குறிப்பாகத் தென் மாநிலங்களில் இட ஒதுக்கீடு பற்றி நடுவணரசு கொள்கைகள் எல்லாம் முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கில் வந்தவை. இதில் என்ன பெரும் கூப்பாடு என்று தென் மாநில மக்களுக்குப் புரியவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.

அதே போல், ஈழத்தமிழர்கள் வதைபடும் செய்திகள், மலேசியத் தமிழர்கள் பற்றிய செய்திகள், இவை எல்லாம் ஆங்கில ஊடகங்களில் சார்புத் தன்மையோடே பார்க்கப் படும்.  குறிப்பாக, ஈழத்தமிழர் பற்றிய செய்திகளில், ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக நாளேடுகள் ஈழத்தமிழர் வீழ்வதைக் கண்டு கொள்ளவில்லை. அப்படிக் கண்டு கொண்டால் சிங்களவர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  ஆனால், தமிழ் நாளேடுகளும், வார இதழ்களும் (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) தமிழர் வதைபடுவதைப் பற்றிப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.  பெருநீரோட்ட நாளேடான தினமணி இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.  அதே குழுமத்தைச் சேர்ந்த ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏனைய ஆங்கில ஊடகத்தின் சார்பைத்தான் எதிரொலித்தது.

இதே போல் அரசு நடத்தும் அனைத்திந்திய வானொலியிலும் சார்புத் தன்மை தெரிந்தது.  தமிழ்ச் செய்திகள்  ஓரளவு ஈழத்தமிழர் பற்றிய செய்திகளை ஒலிபரப்பின.  ஆங்கிலச் செய்தியில் அவ்வளவாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றாலும், நாளேடுகளை விட, ஏனைய ஆங்கில ஊடகங்களை விடக் கூடுதலாகவே செய்திகளை ஒலிபரப்பினார்கள்.

என் டி டிவி போன்ற ஊடகங்கள், தமிழர் வீழ்ச்சியை தீபாவளி போல் கொண்டாடினார்கள்.  புலிகள் வீழ்ச்சி மட்டுமல்ல, மலேசியத் தமிழர்கள் கைது செய்தியும் ஆங்கில ஊடகங்களுக்குக் கொண்டாட்டத்தையே தருவன.  இவர்களைப் பொருத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகக் கப்பலேறிப் போனவர்கள்.  அவர்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாது. 

ஆஸ்திரேலியாவில் பொறுக்கித் தனமாக நடந்து கொண்ட இந்தியர்கள் செருப்படி வாங்கிய போது இந்திய ஊடகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள்.  அமெரிக்காவில் தொடர்ந்து பல தெலுங்கர்கள் கொலை செய்யப்பட்டது இவர்கள் கவனத்தை ஈர்த்தது.  ஆனால் தமிழனுக்கு ஆதரவாக ஒரு மூச்சு கூட விட மாட்டார்கள்.

நானும் இந்த ஆங்கில நாளேடுகளைப் பார்த்துச் சலித்துப் போய்விட்டேன்.  அவற்றில் விளம்பரம் செய்யும் எவரையும் நான் ஆதரிப்பதில்லை.  இருக்கும் சந்தாவையும் நிறுத்தி விட்டு முழுக்க முழுக்கத் தமிழ் நாளேடு மட்டும் படிக்கிறேன்.  இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த ஆங்கிலச் செய்தியையும் நான் பார்ப்பதில்லை.  தமிழனைப் பற்றி அக்கறையுடன் செய்தி வெளியிடாத எவருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை.  வலையில் அமெரிக்க நாளேடுகள் வருவதால், உலகச் செய்திகளுக்கு அவற்றை மட்டுமே நம்பியிருக்கிறேன்.  இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சான் ஓசே மெர்க்குரி நியூஸ் இவற்றில் வெளியாகும் செய்திகள் ஓரளவுக்கு நம்பகமானவை.

சிங்களவரின் இன வெறியாட்டம் பற்றிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமென்றால் அமெரிக்க, இங்கிலாந்து ஊடகங்களைத்தான் நீங்கள் நாட வேண்டும்.  இந்தியாவில் அதைப் பார்க்க முடியாது.  இனி மேல் இந்திய ஆங்கில ஊடகங்கள் மனித உரிமையைப் பற்றி நாயாய்க் குரைத்தாலும் அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

அதே நேரத்தில் தமிழ் ஊடகங்களைப் பற்றியும் எனக்கு வருத்தம் உண்டு.  சுனாமி சமயத்தில் வேலை மெனக்கெட்டு உடனுக்குடன் சன் டிவி வரவழைத்தேன்.  ஆனால், சுனாமி பற்றி அவ்வப்போது, துள்ளல் மகிழ்ச்சிக் குரலோடு இத்தனை பேர் சாவு என்று கான்வென்ட் கன்னிகள் புன்னகை செய்தார்களே ஒழிய, வழக்கமான நெடுந்தொடர் குப்பைகளும், குத்தாட்டங்களும் மட்டுமே ஒளி பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் நாளேடுகளோ, பிணங்களை அள்ளிக் குவிப்பதை முழு வண்ணப் படங்களோடு வெளியிட்டு மகிழ்ந்தனர்.  இவர்களின் எவனாவது தன்னுடைய தாய் தந்தையர், உடன் பிறந்தார், குழந்தைகளை அப்படிப் படம் காட்டி வெளியிட்டிருப்பானா?  அதென்ன ஊரார் பிணங்களை மட்டும் போட்டுக் காட்டும் காட்டுமிராண்டித்தனம்?

அதே போல் எப்போது யார் துன்பப்பட்டாலும் குத்தாட்டம் மட்டும் குறையாது.  தமிழ் மக்களுக்கு சீரியல் தொடர் இல்லையென்றால் தலல வெடித்து விடும்.

சீ, இப்படியும் இருக்கிறார்களே ஊடகங்களில் என்று நம்மை நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

எந்த மேலைநாட்டு ஊடகமாவாவது செப்டம்பர் 11ல் இறந்தவர்களின் பிணங்களைப் படம் பிடித்துப் போட்டார்களா?  அவர்களுக்குத் தம் மக்களை எப்படி மதிப்பது என்று தெரியும்.

நம்மை நாமே மதிக்கவில்லை என்றால் எப்படி ஊரானிடம் மதிப்பை எதிர்பார்க்க முடியும்?

2 கருத்துகள்:

Vassan சொன்னது…

மாற்றந்தாய் நாட்டுப் பக்கம் அடியெடுத்து வைக்காமலிருக்க மற்றுமொரு காரணம்; முன்னரே தெரிந்தவொன்றே என்றாலும் மேலும் உறுதிகொள்ள தூண்டுகிறது உங்கள் பதிவு.

நிற்க.

வலைப்பூக்களில் கண்ட மு.கருணாநிதியை பாராட்டும் ஒரு நிகழ்ச்சி- திரைப்பட உலகினரின் கூத்து போன்ற நிகழ்வுகள் மட்டுமே இந்தியா நாட்டின் ஊடக கயமையை 2ம் இடத்து அவலத்தில் வைக்கின்றன.

எப்படி என்.ராமின், சோ.ராமசாமியின் சஞ்சிகைள்/தாளிகைகள் விற்பனை குறையாமல் இன்னும் வந்து கொண்டுள்ளன என்பது வியப்பும், வருத்தமும் கலந்த நினைப்பைத் தருகிறது.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

பேரா. இந்திரா பார்த்தசாரதி டிவிட்டரில் எழுதியது:

Eeepaa @murugumani ஆங்கில், தமழ் ஊடகங்கள் பற்றி நீங்கள் கூறியிருப்பதை வரவேற்கிறேன். அமெரிக்காவின் கலாசார ஆதிக்கத்துக்கு ஊடகங்கள் சான்று
9:31 AM Feb 17th from web in reply to murugumani