சனி, பிப்ரவரி 20, 2010

பெரியார் சன்னதியும் அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகளும்

தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் கிரந்தம் தமிழுக்குத் தேவையா? என்ற இழையில், இழைக்குச் சற்றும் தொடர்பில்லாமல், திருக்குறள் கடவுள் வாழ்த்து, கடவுள் மறுப்பு வாதம் பற்றி நண்பர்கள் வேந்தன் அரசும், ஜெயபாரதனும் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.  இந்த ஆட்டம் அவ்வப்போது வெவ்வேறு களங்களில் வருவதுதான் என்றாலும்,  ஜெயபாரதனின் கீழ்க்காணும் கூற்று என்னைக் கொஞ்சம் உசுப்பி விட்டுவிட்டது.

சி. ஜெயபாரதன் எழுதினார்:


கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு !  இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.

அந்தத் தொடரில் தொடர்ந்து நான் எழுதியவற்றை இந்த வலைப்பூவிலும் பதிக்கிறேன்.

இது சற்று அலுப்புத் தட்டும் வாதம்.

கடவுள் மறுப்பு வாதங்கள் தொன்மையானவை.  வேத காலத்திலிருந்தும், பௌத்த, சமண காலத்திலும், மிகவும் கூர்மையான அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.  சார்வாக, லோகாயத எண்ணங்கள் தலைமையானவை.  ஆசீவகர்கள் சிந்தனையும் தமிழ்நாட்டிலும் வேரூன்றி இருந்திருக்கிறது.

ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை  அளவிட முடியும்.  அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும். 

உயிர் வேறு, ஆன்மா வேறு.

உயிர் இருக்கிறதா இல்லையா என்று எளிதில் கண்டறிய முடியும்.  உயிரைக் கொடுக்க முடியாவிட்டாலும், எடுக்க முடியும்.

பகுத்தறிவுவாதிகள் இவற்றை எதிர்ப்பதில்லை.  எதிர்ப்பதாக நீங்கள் கூறுவதால் உங்களுக்குப் பகுத்தறிவுவாதம் பற்றி ஏதும் தெரியாது என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

கடவுள் என்ற பொதுக்கருத்து வேறு,  ஒவ்வொரு சமயங்களும் காட்டும் விதப்பான கருத்து வேறு.

மரங்களையும், நாகங்களையும், கற்களையும், குளங்களையும்,
மழையையும், காற்றையும், இடியையும், மின்னலையும், கடலையும்,
ஆற்றையும் வ்ழிபடுவது வேறு.  இந்தப் பேரண்டத்தைப் படைத்ததாகக்
 கருதப் படும் சக்தி என்பது வேறு.

இயற்கைப் பொருள்களை வழிபடும் மனிதன், அந்தப் பேராற்றல்
கொண்டிருக்கக் கூடிய மாபெரும் படைப்புக் கடவுளின் ஒரு பகுதியை
 வழிபடுகிறான் என்பதெல்லாம் சப்பைக் கட்டு.

தனக்கு இடைஞ்சல் தரக்கூடிய ஆற்றல்களுடன் சமரசம் செய்ய முயல்வது 
மனிதனின் இயல்பு.

அரசனுடன், அமைச்சனுடன், அரசியல் வாதிகளுடன், எதிரியுடன் சமரசம்
செய்து கொள்வதுபோல, மரத்துடன், கடலுடன், மற்ற சக்திகளுடன் 
சமரசம் செய்ய முயல்வது மனித இயல்பு.

ஏதோ ஒன்றைக் கொடுத்தால், தனக்கு வேண்டிய ஒன்றைத் தரும் சக்தி என்ற அளவில் மட்டும் பேரம் செய்ய முயல்பவன் மனிதன்.
அது செல்வமாக இருக்கலாம், மறு பிறவியாக இருக்கலாம், சுவர்க்கமாக இருக்கலாம், ஆனால், தன்னைத் தந்தோ, அல்லது ஏதாவது தானத்தைத் 
தந்தோ, தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சக்தியைத்
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் மனிதனுக்குச் சமயங்கள் அந்தச் சமரசம் செய்ய வழிவகுக்கின்றன.
அத்தகைய சமயங்களுக்குள் இருக்கும் பொய், புளுகு, மனிதனுக்கு எதிரான கொள்கைகள் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் மனித இயல்புதான்.

"குற்றம் செய்தால் கண்ணைக் குத்தும் சாமி"  என்று மிரட்டும் சமயத்துக்கு எதிராக நான் சாமிக்குற்றம் செய்கிறேன் பார், என்னை அந்தச் சாமி என்ன செய்து விடும் என்று எதிர்த்துக் காட்டுவது பகுத்தறிவுதான்.

ஏ மனிதனே, உன்னைப் பிறப்புக்கு முன்னரே அடிமைப் படுத்தும் அமைப்புகளை நீ ஏற்க வேண்டியதில்லை.  உன் கருவிலேயே உனக்குப் பூட்டிய விலங்குகளை நீ உடைத்தெறி.  உன்னை அடிமைப்படுத்தும் எந்த அமைப்புகளையும் நீ ஏற்க வேண்டியதில்லை.

உன்னைப் பிறப்பிலேயே ஒரு தெய்வம் அடிமை எனச் சொல்கிறது என்றால், அது தெய்வமே இல்லை.  அதை நீ அச்சமின்றி எதிர்க்கலாம் என்று கலகக்குரல் கொடுப்பது பகுத்தறிவுவாதம் என்றால், அது மனிதநேயத்துக்கு ஏற்றதே.

தெய்வம், கடவுள் என்ற கொள்கைகள் எல்லாம், மனிதனிடமிருந்து தோன்றிய கருத்துகள்.  அவை உண்மையா பொய்யா என்று அறிய முடியாத கருத்துகள்.  யாரும் தன்னந்தனியே தன் இல்லத்துக்குள் தனக்குப் பிடித்த கடவுளை வணங்குவதைப் பற்றிச் சற்றும் கவலைப் படுவதில்லை.

ஆனால், கடவுளின் பெயரால், சமயத்தின் பெயரால், மனிதனைத் தாழ்த்தி, அவனுக்கு விலங்கிடும் அமைப்புகள் எவையையும் எதிர்ப்பதில் தவறே இல்லை.

கடவுள் கண்ணைக் குத்துவதில்லை என்பதைப் பகுத்தறிவுவாதிகள் அன்றாடம் காட்டிக் கொண்டே இருந்தாலும், நம்புபவர்கள் பலர் மாறுவதில்லை.

தம் இருப்பிடத்தை இடி, மின்னல், மழையிலிருந்தோ, மனிதரின் செயல்களிடமிருந்தோ காப்பாற்றக்கூட முடியாதவர் ஒரு வல்லமை படைத்த கடவுளா என்று கேட்பதில் தவறில்லை.

பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும்
பகுத்தறிவுவாதிகள்தாம்.

"வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே!
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பிவிடாதே நீ வெம்பிவிடாதே!"

என்ற பாடலின் கருத்தை யார்தான் மறுக்கவியலும்?

"கடவுளை மற, மனிதனை நினை"  என்ற வாக்கின் மனிதநேயத்தை யார்தான் வெறுக்க முடியும்?
சிறு பிள்ளைத் தனமான வாதங்கள் அலுப்புத் தட்டுபவை.
இதற்கு விடையாக ஜெயபாரதன் எழுதினார்:
On 2/20/10, சி. ஜெயபாரதன்  wrote:
விஞ்ஞானம் நுழைய முடியாத பிரபஞ்சத்தின் தோற்றமும், அதன் பிறப்பின் காரணமும் விளைவுகளும் கடவுளைப் போல் ஊகிப்புகளே. 

நான் எழுதினேன்:
 ஆம்.  பிற்காலத்தில் தரவுகள் இந்த ஊகிப்புகள் பிழையானவை என்று காட்டினால், அறிவியல் சற்றும் தயங்காமல் தம் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.


ஆனால், கடவுள் சொன்னார், முனிவர்கள் எழுதினார்கள் என்று சொல்லும் சமயங்கள் தாங்கள் சொல்லியவற்றை மாற்ற முடியாது.
உலகைக் கடவுள் இப்படித்தான் படைத்தார், இத்தனை நாளில் 
படைத்தார் என்று எழுதியவர்களால், அறிவியல் அளவைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.  டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையோடு சமரசம் செய்து கொள்ள முடியாது.  டைனசோர்களையும், பெரும்பழங்கால உயிரினங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
உலகம் தட்டையானது, ஆமையின் முதுகில் மிதப்பது என்று சொன்னவர்களால், உருண்டையான உலகுடன் சமரசம் செய்துகொள்வது கடினம்.

கலிலியோவைத் தண்டித்தது சமயக் கொள்கை.  பின்னர் அசடு வழிந்து சமரசம் செய்து கொண்டு சமாளித்துத் தொடர்கிறது.

பல சமயங்களால் அது முடிவதில்லை.

அறிவியலில் எதுவுவே மாற்ற முடியாத அடிப்படைக் கொள்கையில்லை.  சார்ல்ஸ் நூட்டனும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், சார்ல்ஸ் டார்வினும் இறைத்தூதர்களல்லர்.  மனிதர்கள்.  அவர்கள் கோட்பாடுகளுகளைத் தகர்த்தெறியும் தரவுகள் கிடைத்தால், அறிவியல் அவர்களைப் புறக்கணிக்கத் தயங்காது.

அதுதான் சமயச் சிந்தனைக்கும், அறிவியல் சிந்தனைக்குமுள்ள அடிப்படை வேறுபாடு.

 நண்பர் ஜெயபாரதன் சற்றுப் பொறுமை இழந்து எழுதினார்:

On 2/20/10, சி. ஜெயபாரதன்  wrote:
////பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்///
சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?
கடவுளுக்குக் கலைக் கோவிலான மதுரை மீனாட்சி ஆலயத்தைப் பீரங்கி கொண்டு பிளப்பவர் அடி முட்டாள்கள் !!!!
கடவுளை நம்பாதவர் மூர்க்கராய்ப் பீரங்கி கொண்டு ஏன் தாக்கப் போகிறார் ?
கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையார் சிலையை ஏன் உடைத்துக் காட்டினார் ?  
பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையாரை ஒழித்தாரா ?


அதற்கு என் விடை:

நீங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள்.  தற்கால நெடுந்தொடர் பாணியில் கேட்டால் "இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த் தெரியலை?"

பெரியார் என்று சீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும், மதுரை மீனாட்சி ஆலயத்தையும் பீரங்கி கொண்டு பிளந்தார்?!

பகுத்தறிவுப் பெரியார் உடைத்த பிள்ளையார் சிலையை விடக் கூடுதலாக ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகளை இன்று மக்கள் வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் கடலில் கொண்டு போய்க் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலருக்கு அது ஒரு நாள் கூலி வேலை. பலருக்கு அதில் பக்திப் பரவசம்.

பெரியார் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார்.

செருப்பு மாலை அணிவித்த பெரியார் கிட்டத்தட்ட நூறு வயது வாழ்ந்து விட்டதால், பிள்ளையாருக்குச் செருப்பு மாலையும் உகந்தது போலும் என்று ஆத்திகர்கள் கருதிக் கொண்டனர்.

யாரோ ஒரு ஆத்திகப் பெரியார், நாத்திகப் பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

"பக்தன் ராமனை மறந்தாலும், ராமசாமி மறக்க மாட்டார்.  பிள்ளையாருக்கு பக்தன் பூசை செய்யவில்லையென்றாலும், ராமசாமி செருப்புமாலை போடுவார்.  ஒவ்வொரு நொடியும் கடவுளைப் பழிக்கிறேன் என்று சொல்லி மறக்காமல் கடவுள் பெயரை நாவில் கொண்ட இவர் ஒரே பிறவியில் மோட்சம் அடையும் பாக்கியம் பெற்றவர்."

பெரியாரை இப்படியும் பார்க்கலாம் என்று அப்போதுதான் தெரிந்தது.

அதைப் பற்றியும் பெரியார் பொருட்படுத்தவில்லை.

இந்து சமயத்தில் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.

எல்லா சமயங்களிலும் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.

பெரியார் இயக்கமும், எந்த அரசியல் இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்து சமயம் தனக்குள்ளே இருந்து கொண்டு தன்னைச் சீர்திருத்த முயன்ற எல்லோரையும் விழுங்கிக் கொண்டு விட்டது.  சித்தர்கள் செய்யாத விளையாட்டா?  இராமானுசர் செய்யாத சீர்திருத்தமா?  கடைசியில் அவரும் எல்லோரையும் போல இன்னொரு கடவுள்.  பரிவார தேவதை. ஏவ்வ்வ்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாத, ஆட்டம் காணாத சமய மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தை அர்த்தமிழக்கச் செய்தன.

இதை விவேகானந்தர் உணர்ந்திருந்தார்.

காந்தி கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டிருந்தார்.  கேரளாவின் தீண்டாமைக் கொள்கைகளை ஒரு பைத்தியக்கார விடுதியென அவர் கருதியது இதற்கு ஒரு காட்டு.

பெரியார், அப்படிப் பட்ட மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டினார். அவர் கொள்கைகளை மூலைக்கு மூலை முழங்கத் தொடங்கிய காலத்தில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வீதி இருந்தது.  பிராம்மணாள் மட்டும் சாப்பிடலாம் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.  சில விடுதிகளில் "பிராம்மணர்கள் சாப்பிடும் இடம்" என்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.

நாட்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் மாநாடுகளிலும் கூட சாதிகள் தனித்தனியாகச் சாப்பிட வசதி செய்திருந்தார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் நடத்திய குருகுலத்தில் பிராம்மணர்கள் மற்ற சாதியினரிடம் இருந்து விலகி இருந்தனர்.

நாட்டுக்கு விடுதலை வேண்டுமென்றால், விடுதலை வேண்டுபவர்கள் தமக்குள்ளே இத்தனை பாகுபாடு பார்த்தல் சரியா என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.  பாரதியாரும் அதையேதான் கேட்டார்.

ஆனால், பெரியாருக்குக் கிடைத்த விடை, அவருக்கு வேறு பாதையை வழி வகுத்துக் கொடுத்தது.

இன்று பிராம்மணர்கள் சாப்பிடுமிடமோ, பிராம்மணாள் விடுதியோ இல்லை.

அன்று ஒடுக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கப் பட்ட பல சாதியினர் இன்று வாழ்வுத்தரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.

தீண்டத்தகாதவர் என்று புறக்கணிக்கப் பட்ட சாதியினர் நடத்தும் சைவ உணவு விடுதிகளில் இன்று பிராம்மணரும், பலரும் அன்றாடம் சாப்பிடுகிறார்கள்.

அன்று எல்லோரும் சாதிப் பெயரைப் பட்டம் போல ஒட்டிக் கொண்டிருந்தனர். 

இன்று சாதிப் பெயரை ஒட்டிக் கொள்ளும் வழக்கம் வெகு குறைவு.

அன்று தீண்டத்தகாதவர், கீழ் சாதியினர் என்று கருதப் பட்டவ்ர்களைப் பள்ளிகளுக்குள்ளேயே விட மாட்டார்கள்.  இன்று அப்படிப்பட்ட சாதிகளில் தோன்றியவர்கள் நாட்டை ஆளுகின்றனர்.

இதற்கெல்லாம் அடி கோலியவர் பெரியார் என்று பலர் போற்றுகின்றனர்.

தமிழ்நாடு இயல்பாக எடுத்துக் கொள்ளும் பல முன்னேற்றச் சிந்தனைகள் இன்றும் வடநாட்டில் நடைமுறைப் படுத்த முடிவதில்லை.  தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்கள் சமூகத்தில் உயர்ந்த அளவுக்கு வட மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகாரில் இல்லை.
அதனால்தான், உத்தரப்பிரதேசத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துப் போற்றினார்கள்.

பெரியார் கொள்கைகளை ஏற்காதவர்கள்கூட அவரது வாழ்நாளில் அவர் தூண்டிய மாற்றங்களை வரவேற்கிறார்கள். 

இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள், இந்து சமயம் பெரியாரை ஒரு பெரும் பக்தனாக, இந்து சமயத்தைத் திருத்த கடவுள் அனுப்பிய அரக்கனாக வழிபடுவார்கள்.

புத்தரை அப்படித்தான் இந்து சமயம் ஓர் அவதாரமாக எடுத்துக் கொண்டு பௌத்தத்தை ஸ்வாஹா செய்தது.  ஆதிசங்கரரையே ஒரு "ப்ரசன்ன பௌத்தர்" (மறைவான புத்த பிக்கு) என்று சிலர் குற்றம் சாட்டவில்லையா?  மகாயான பௌத்த சமயத்துக்கும் சங்கரரின் அத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு ஒன்றும் பெரிதில்லை என்றார்கள் பல வைதீக அறிஞர்கள்.

எம்பெருமான் தடுத்தாட் கொண்ட பெரும் பக்தன் என்று பெரியாருக்குச் சன்னதிகள் வைத்து அதற்கு அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகள் வைத்து, தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளைக் கோவில்களாக்கினாலும் வியப்படைய மாட்டேன்.

6 கருத்துகள்:

nayanan சொன்னது…

//
எம்பெருமான் தடுத்தாட் கொண்ட பெரும் பக்தன் என்று பெரியாருக்குச் சன்னதிகள் வைத்து அதற்கு அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகள் வைத்து, தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளைக் கோவில்களாக்கினாலும் வியப்படைய மாட்டேன்.
//

எங்கள் மானமிகு வீரமணிசாமியையும், காவிரித்தாய் சமூகநீதி காத்த மாதர்குல மாணிக்கத்தையும் பரிவாரத்தில் சேர்க்காமையை கண்டிக்கிறேன் :-)

நண்பர் மணிவண்ணன்,

தமிழ்மன்றத்தில் ஒரு உறுப்பினர் கூறினாற்போல இதனைப் பலரும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு செய்யலாம். அருமையான விளக்கங்கள்.

ஒரு யோசனை: இதனை 2/3 வினாக்களுக்கு விடையாக்கி, தீட்டி "ஊடாடு வினாக்கள்" (FAQ) போன்று ஆக்கிவையுங்கள்.

செயபாரதன் போன்று ஆயிரக்கணக்கான
பாரதர்களுக்கு பதில் சொல்லப் பயன்படும்.

மற்றவர்களுக்கு இது பயன்பட்டாலும்
செயபாரதருக்கு மட்டும் இது பயன்படவே படாது. அவர் இப்ப இதை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒரு இடத்தில் மீண்டும் இதே கதையை ஆரம்பிப்பார்ர் :-))))

அன்புடன்
நாக.இளங்கோவன்

Govind Karup சொன்னது…

irandu perum , peesunga peesunga pesi kitte irunga.... naanga padikkirom...

Unknown சொன்னது…

//அன்று ஒடுக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கப் பட்ட பல சாதியினர் இன்று வாழ்வுத்தரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.

தீண்டத்தகாதவர் என்று புறக்கணிக்கப் பட்ட சாதியினர் நடத்தும் சைவ உணவு விடுதிகளில் இன்று பிராம்மணரும், பலரும் அன்றாடம் சாப்பிடுகிறார்கள்.//


This happened in places where EVRs influence had not not been there as well.The problem with half witted periyarists is that they attribute everything good that happened to evr when in reality EVR was an ignorant and raving and ranting lunatic who preached hatred and violence to an audience that lapped it up;just like rabid and pathologically insane guys like Hitler and Bin Laden did to their respective audience.

மறைமலை இலக்குவனார் சொன்னது…

அன்புமிக்க மணிவண்ணன்,
இணையத்தில் இப்போது அதிகம் உலா வரமுடியவில்லை.இன்றுதான் உங்கள் இடுகையைக் கண்டேன்.முதிர்ர்சியும் பொறுப்புணர்வும் அறிவியற்பாங்கான
வாதமும் கொண்ட தங்கள் இடுகை பெரிதும் பரப்பப்படவேண்டிய விழுமிய கருத்துகளின் தொகுதி.
பெரியாரின் கொள்கைபரப்பல் எட்டாத இடங்கள் இன்றும் மூடநம்பிக்கையின்
உறைவிடங்களாகவே திகழ்கின்றன.

மறைமலை இலக்குவனார் சொன்னது…

ஓர் எடுத்துக்காட்டு குறவிழைகிறேன்.1970-இல் உசுமானியாப் பல்கலைக்கழகத்தில் என் தந்தையார் பணியாற்றியபோது அங்கு நிலவிய சாதிவெறியையும் மேல்சாதியைச் சாராதவர்களிடம் காணப்பட்ட தாழ்வுமனப்பான்மையையும்
மிக வருத்தத்துடன் கூறியுள்ளார்."What can I do?I am a Sudra" என்று மனச்சலிப்புடன் ஒரு பேராசிரியர் கூறியது கேட்டு மிகவும் மனம்நொந்துவிட்டார் என் தந்தையார்.

மறைமலை இலக்குவனார் சொன்னது…

இன்றைக்கும் IIT க்களும் IIM களும்
யாருடைய் கூடாரங்களாகத் திகழ்கின்றன?முனைவர் வசந்தா போன்றவர்கள் கொடுமை கண்டு போராடிவரவில்லையா?இவற்றை நயனன்,சின்னப்பெண் ஆகியோர் அறியவில்லையா?