எழுத்துச் சீரழிப்பு முயற்சிகளை நான் எதிர்த்து வந்திருக்கும் வரலாறு தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு “ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. “ என்ற தலைப்பில் இணைய வரலாற்றின் தொல்பழங்காலத்துச் சிரிப்புத் துணுக்கு ஒன்றை அனுப்பி வைத்தார். அதில் ஆங்கிலம் எப்படி ஒரு சில எழுத்துகளை மாற்றிய பின்பு ஜெர்மன் மொழி போல் ஆகிவிடுகிறது என்பதை நகைச்சுவையாக எழுதியிருப்பார்கள்.
சிரிப்புதான். ஆனால், இதிலும் ஒரு நுட்பம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இது ஜெர்மானியர்களைக் கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தாலும், உண்மையில் ஆங்கிலம் ஒரு ஜெர்மானியக் கிளைமொழிதான் என்பதை மறக்கக் கூடாது.
ஆங்கிலத்தில் கிரேக்க, லத்தீன வேர்ச்சொல்களைக் களைந்து எடுத்து பழைய
ஆங்கிலமொழிக்குப் போவோம் என்று யாரேனும் தனி ஆங்கில உணர்வாளர்கள் முயல்வார்களே ஆனால், அது கிட்டத்தட்ட ஜெர்மன் போல்தான் இருக்கும்.
இருப்பதிலேயே மிகப் பழைய ஆங்கில இலக்கியம் பத்தாம் நூற்றாண்டுக்கு
முன்னர் எழுந்த பெஓவுல்ஃப் (beowulf) என்பது. இத்தனைக்கும், அதில்
கிரேக்கமும், லத்தீன வேர்களும் கலந்துதான் உள்ளன. அதன் மூல வடிவைப்
பார்க்க http://www.humanities.mcmaster.ca/~beowulf/main.html என்ற சுட்டியில்
old text என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் பழைய ஆங்கில வடிவில் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் அது இப்படித்தான் இருக்கும்:
Ða wæs on burgum Beowulf Scyldinga,
leof leodcyning, longe þrage
folcum gefræge (fæder ellor hwearf,
aldor of earde), oþþæt him eft onwoc
heah Healfdene; heold þenden lifde,
gamol ond guðreouw, glæde Scyldingas.
ðæm feower bearn forð gerimed
in worold wocun, weoroda ræswan,
Heorogar ond Hroðgar ond Halga til;
leof leodcyning, longe þrage
folcum gefræge (fæder ellor hwearf,
aldor of earde), oþþæt him eft onwoc
heah Healfdene; heold þenden lifde,
gamol ond guðreouw, glæde Scyldingas.
ðæm feower bearn forð gerimed
in worold wocun, weoroda ræswan,
Heorogar ond Hroðgar ond Halga til;
பதினான்காம் நூற்றாண்டின் சாசர் இயற்றிய கேன்டர்பரி டேல்ஸ் என்ற இலக்கியம் இடைக்கால ஆங்கிலத்தில் இருக்கும். அதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள இயலும்.
Whyt was hir smok and brouded al bifore ...
Her filet brood of silk, and set ful hye:
And certainly she hadde a lecherous ye
She was ful more blisful on to see
than is the new pear tree
ஆங்கிலம் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளின் தொல்லிலக்கியங்களை இன்று வாழும் அவர்கள் கொடிமரபினர் புரிந்து கொள்ள முடிவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்ற கோட்பாட்டை
ஆழமாகப் பின்பற்றியதாலோ என்னவோ, பல மொழிகளின் தன்மை மிகவும் மாறியதால் மூல மொழி கிட்டத்தட்ட வேற்று மொழியாகவே மாறி அடையாளம் தெரியாமல் போய் விட்டிருக்கிறது.
ஆனால், தமிழ் அப்படி அல்ல. மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வந்திருந்த போதிலும், தொன்மைத் தமிழ் வியக்கத் தக்க வகையில் தொடர்ந்து வருகிறது. பத்தாம் நூற்றாண்டுத் தமிழை மட்டுமல்ல, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழையும் நம்மில் பலரால் படிக்க முடிவது மட்டுமல்ல புரிந்து கொள்ள முடிவதும் தமிழின் தொடர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
என்ற சங்கப் பாடலை நாம் பள்ளியில் படிக்கிறோம். இதைப் படிக்கும்போது சங்கத் தமிழில் முறையான பயிற்சி இல்லாமலேயே நம்மால் அச்சொற்களை அடையாளம் காண முடிகிறது. பொருளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அண்மையில் நடந்து நிறைவேறிய செம்மொழி மாநாட்டின் கருப்பொருள் பாடலே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றுதான் தொடங்குகிறது! ஈராயிரம் ஆண்டுத் தொடர்ச்சியுள்ள பாடல் வரிகள் நம்மை இன்னும் ஈர்க்கின்றன.
வள்ளல் பாரியின் பறம்புமலையைத் தமிழ் வேந்தர் மூவரும் சூழ்ந்து முற்றுகையிட்டு அவரை வென்ற நிலையில், பாரியின் இரண்டு பெண்களும் பாடியதாக வரும் பாடல் இதோ:
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
இதில் வரும் சொற்கள் கவிதை நடையில் இருந்தாலும், இன்றும் வாழும் வரிகள். ஓரளவு பயிற்சியில் இதைப் படித்தால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாடல் நம் உள்ளத்தைப் பிழியும்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
என்ற (குறைந்தது) 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளை எந்த உரையும் இல்லாமலேயே நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. பல திருக்குறள்களை நாம் பேருந்துகளில் பார்க்கிறோம். “வாயில் தோறும் வள்ளுவம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலங்களின் வாயில்களிலும் ஒரு திருக்குறள் அதன் தெளிவுரையோடு பொறித்து வைத்திருக்கிறார்கள்.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்ணகை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
என்ற பாடலை மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்கள் பாடிக்
கேட்டிருக்கிறோம். அது (குறைந்தது) 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையின் வரிகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நதியில் விளையாடிக் கொடியில்
தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
என்ற கண்ணதாசனின் திரைப்படப் பாடல் 1960களின் தொடக்கத்தில் பட்டி தொட்டியெல்லாம் முழங்கிய பாடல். இன்றும் மக்கள் கேட்டு மகிழும் பாடல்.
அண்மையில் வந்த இருவர் என்ற படத்திலும்,
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
என்று வரும் பாடலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரிமகளிர் வரிகளை எடுத்தாண்டு இருந்தாலும், மக்களால் புரிந்து கொண்டு அதைக் கேட்டு மகிழ முடிகிறது.
இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களையும் நம் சூழலில் வாழும்
மொழியாகப் படிக்க முடிகிறது என்பதற்கு மட்டுமல்ல அந்த மொழி, பண்பாட்டின் தொடர்ச்சி நம்மிடையே இன்னும் வாழ்கிறது என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டு.
கடந்த 1500 ஆண்டுகளில் தமிழைச் சுற்றி எண்ணற்ற தாக்கங்கள். தமிழ்
மன்னர்களின் வீழ்ச்சி. பண்பாட்டுக் கலப்புகள். பிற மொழிகளின்
தாக்கங்கள். ஆனால் தமிழை அரசர்கள் மட்டுமின்றி மக்களும் போற்றி வளர்த்ததன் அடையாளமே இந்தத் தொடர்ச்சிக்கு அடிப்படை.
அதனால்தான், பல்லவர் ஆட்சியில் கல்வெட்டு மொழி கிரந்த எழுத்துகளில் வடமொழியாக இருந்தாலும், பக்தி இலக்கியங்களில் கிரந்தக் கலப்பே இல்லாத தமிழே வழங்கியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டச் சங்க காலம் தொடங்கி, 12ம் நூற்றாண்டின் கம்ப ராமாயணத்துக்கும் பின்னர் வரை, பிறமொழிச் சொற்களை ஏற்றாலும் வேற்று ஒலிகளையோ, எழுத்துக்களையோ ஏற்காமலேயே தமிழ் இலக்கியம் தழைத்திருந்தது.
தமிழ் மன்னர்களின் வீழ்ச்சி, வேற்று மொழிகளின் ஆட்சி, புலவர்களை ஆதரிக்கப் புரவலர்கள் இல்லாத நிலை என்று எத்தனையோ சிக்கல்களை எதிர் கொண்டிருந்தாலும், தமிழ் இன்றும் தொடர்கிறது.
இருப்பினும், 1500 ஆண்டுகளில் மொழியில் மாற்றம் ஏற்படுவதும் தவிர்க்க
இயலாததொன்று. பழைய உரைகளைப் படிப்பதற்கும் பழைய செய்யுள்களைப்
படிப்பதற்கும் ஓரளவுக்காவது பயிற்சி தேவை. நமக்கு நன்றாகத் தெரிந்தது
போல் இருக்கும் பாடல்களையும் பண்டைக் காலப் பண்பாட்டோடு புரிந்து
கொள்வதற்கும் பயிற்சி தேவை. இலக்கண இலக்கியங்களைப் புரிந்து
கொள்வதற்கும் பயிற்சி தேவை.
இணையம் வளர்ச்சியினால் தமிழில் பயிற்சியும் பட்டமும் பெற்றவர்கள்
பெரிதும் தமிழ் மடலாடற்குழுக்களுக்குள்ளும், வலையிலும் வலம் வரும்போது, அவர்களது பயிற்சியில் பயின்றதைப் பலருக்கும் பகிர்ந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் இணைய முன்னோடிகள் பலருக்கும் இருந்தது.
ஆனால், அப்படிப் பட்டம் பெற்ற வெகுசிலரே பண்டைத் தமிழ் நூல்களை இன்றைய தமிழருக்கும் அறிமுகப் படுத்தித் தமிழைப் பரப்பும் பணியில்
ஈடுபடுகின்றனர். தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் எண்ணற்ற செய்திகள்
உள்ளன. சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், நாளும் ஒரு பாடல் என்று விளக்கிக் கொண்டே போகலாம். தமிழில் பட்டம் பெறாத எழுத்தாளர்கள்
சுஜாதாவும், ஜெயமோகனும் எழுதிய அளவு கூட தமிழ்ப் புலவர்கள் எழுதி நான்
பார்த்ததில்லை.
உண்மையான தமிழ்ப் பணி தமக்குத் தெரிந்த தமிழைப் பகிர்ந்து கொள்வதுதான். தமிழ்ப் புலவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது குறைந்தது அவ்வளவுதான். ஆனால், தமிழில் பட்டம் பெறாதவர்களும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து கருத்துப் பரிமாறிக் கொள்ள இணையம் வழி காட்டுகிறது என்பதில் நமக்கு ஆறுதல். இந்த இணையப் பரிமாற்றம் இருப்பதால்தான், புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழின் விழுதுகளாக இயங்க முடிகிறது.
தொன்மைத் தமிழின் தொடர்ச்சியால்தான், வட்டார வழக்குகளால் சிதறுண்டு கிளைமொழிகளாய்த் துண்டாகாமல், நம் உரைநடைத் தமிழால், பொதுமொழி வழக்கால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருடனும் ஊடாட முடிகிறது.
எழுத்துகளை மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்களும், புதிய ஒலிகளைக் கூட்ட வேண்டும் என்று முயல்பவர்களும் அத்தகைய “சீர்திருத்தங்கள்” தொன்மைத் தமிழின் தொடர்ச்சியின் ஆணி வேரையே பெயர்த்தெடுத்துவிடும் என்பதைப் பற்றிக் கவலைப் படுகிறார்களா எனத் தெரியவில்லை.
எபிரேய மொழியை மீட்ட யூதர்களும், வடமொழியை வாழ வைக்க முயலும் இந்திய அரசும், இந்தத் தொன்மையின் தொடர்ச்சி அறுந்தால் மீட்பது எவ்வளவு கடினம் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள். காளிதாசனின் ஒப்பற்ற காவியங்களை மூல மொழியிலேயே படித்துச் சுவைக்கக் கூடியவர்கள் குறைவு. ஆனால், எத்தனை இன்னல்களுக்கு நடுவிலும், கம்பன் விழா கொண்டாடித் தமிழை வளர்க்கும் ஈழத்தமிழர்களோடு, புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கம்பனை இன்றும் கொண்டாடுகிறோம். சிலப்பதிகார நாட்டிய நாடகங்கள் நம்மை இன்னும் ஈர்ப்பவை. சங்கப் பாடல்களின் செறிவை தற்காலப் புதுக்கவிதைகளும் எட்டவில்லை.
நம் முன்னோர்கள் நமக்கு ஒரு பெரும் கருவூலத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், பழையதை விடப் புதியதன் மேல் நமக்குள்ள ஈர்ப்பால் நம் மரபைப் புறக்கணிக்கிறோம். மரபின் அருமை தெரிந்தவர்களுடன் பழகி வரலாறு கற்றுத் தந்த பாடங்களையும் மறக்காமல் இருப்போமாக.