அண்மையில் மேலை நாட்டு நிறுவனங்களின் சின்னங்களையும் பெயர்களையும் தனித்தமிழில் எழுதி அழகு பார்க்கும் தன்மையைப் பார்க்கிறோம். இதைத் தம் தமிழ்த்தொண்டாய்க் கருதுபவர்கள் ஒரு புறம். இவர்களுக்கு யூனிகோடு, யூ-டுயூபு, பே-பேல், ஃபயர்ஃபாக்ஸ், ஃபேஸ்புக் என்ற பெயர்களைத் தமிழ்ப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கரைபுரண்டோடும் மொழிப்பற்று. இந்தப் பற்றாளர்கள் சீர்மைக்குறி, தந்திறந்திரை, அளி-நட்பே, நெருப்புநரி, முகநூல் என்ற பெயர்களை இட்டுக் கட்டி ஆளுகிறார்கள்.
இந்தத் தமிழ்ப்படுத்தல் படுத்துகிறது என்று ரவுண்டு கட்டி அடிக்கும் தமிழ்மரபு அணியினர் சிலர் மறுபுறம்.
இப்படி வணிக நிறுவனங்களின் பதிவு பெற்ற பெயர்களையும், சின்னங்களையும் மொழிபெயர்க்கலாமா? இதைப் பற்றிச் சீனாவில் வணிகம் செய்யும் மேலை நாட்டு நிறுவனங்களும், சீனர்களும் ஏற்கனவே நன்கு சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.
உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கப் பணிக்குழுவின் முதல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கலைச்சொல் வல்லுநர்களோடு இணைந்து செயலாற்றியதால் சொல்கிறேன். பொதுவாக ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரப் பெயர்களையும் சின்னங்களையும் (brand) மொழி பெயர்ப்பது (translate) இல்லை. ஒலி பெயர்ப்பது (transcribe) உண்டு, சில நேரங்களில் குறிபெயர்ப்பது (transliterate) உண்டு.
தமிழ் மொழியின் இலக்கணவிதிக்கு உட்பட்டு அந்தப் பெயர்களைத் தமிழில் எழுதலாமே ஒழிய அவற்றை மொழிபெயர்க்கும் உரிமை அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு. மைக்குரோசாப்டு, மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் என்று எழுதினால் நாம் எந்த விளம்பரப் பெயரைக் குறிப்பிடுகிறோம் என்று மற்றவர்களுக்கும் விளங்கும். மைக்ரோசாப்டு என்ற பெயரை “நுணுக்கு மென்மை” என்று இலங்கை சர்வேஸ்வரன் கிண்டலுக்காக மொழிபெயர்த்தது போன்ற பெயர்ப்புகள் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிப் பணம் செலவழித்து, அரும்பாடு பட்டு உருவாக்கும் விளம்பரச் சின்னங்களாக முடியாது. ஃசெராக்ஸ் (ஜெராக்ஸ், செராக்சு), கூகிள் (கூகுள், கூகுல், கூகில், கூக்’ல்) போன்ற பொருளற்ற விளம்பரப் பெயர்களை மொழி பெயர்க்கவே முடியாது. அதனால் சில விளம்பரப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து விட்டு மற்றவற்றை ஒலிபெயர்ப்பது என்பது முறையாகாது.
டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகிறது. அதனால், டுவீட்டு என்பதற்குப் பகராக ‘கீச்சு’ என்ற சொல்லைத் தமிழில் ஆள்வது பொருத்தம். ஆனால், டுவிட்டர் தமது பெயரைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் நாம் அதற்கு என்ன தமிழ்ப் பெயர் இட்டாலும், அது அந்த நிறுவனத்தையோ, அதன் விளம்பரப் பெயரையோ குறிப்பிடாது.
அதே போல், முகநூல், முகச்சுவடி, முகப்புத்தகம், மூஞ்சிபுக்கு, என்ற பெயர்கள் எவையுமே ஃபேஸ்புக் நிறுவனத்தைக் குறிப்பிடாது. ஆனால், பேஸ்புக், பேச்புக், பேச்’புக், பேசுபுக்கு, ஃபேசுபுக்கு, என்ற எல்லா ஒலிபெயர்ப்புகளுமே அந்த நிறுவனத்தைக் குறிப்பிடுவதுதான். முகநூல்.வணி (or mukanool.com or muganool.com ) என்ற பெயரை இன்று யாராவது பதிந்து கொண்டால், அதை எதிர்த்து ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக வழக்குப் போட்டாலும், செல்லுமா என்று சொல்ல முடியாது. ஆனால், பேச்சுபுக்கு என்ற பெயரை மற்றவர்கள் பதிவு செய்யக் கூடாது என்று சொன்னால் நீதிமன்றங்களால் அதை மறுப்பது கடினம்.
பே-பேல் சேவையின் பெயரை மொழிபெயர்க்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு. (It is not பே-பால் pay paul though it is more popular in Tamil. That name would remind one of the phrase "to rob Peter to pay Paul."). அதைச் சிலர் அளிநட்பே என்று பெயரிட்டு அழைக்கலாம். ஆனால், அப்படிப் பட்ட பெயரைத் தொழில்நுட்ப மன்றங்களும் அமைப்புகளும் அறிக்கைகளில் சேர்ப்பதற்கு முன்பு அது குறைந்தது பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.
ஒரு விளம்பரப் பெயரை மொழிபெயர்க்கலாமா, குறி பெயர்க்கலாமா, ஒலி பெயர்க்கலாமா என்ற தெரிவுகள் அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உரியவை. சில மொழிகளில் மொழி பெயர்ப்பு தேவை. சீனாவில் மொழி பெயர்த்தால் ஒழிய மக்கள் ஒரு விளம்பரப் பெயரை ஏற்க மறுக்கலாம். ஆங்கிலம் தெரிந்த வேறு சில நாடுகளில் ஆங்கிலப் பெயர்களுக்கு இருக்கும் மவுசு தமிழில் மொழி பெயர்த்தால் இல்லாமல் போகலாம். “எடுத்துக்கோ ராசா” என்று சொல்லும் இடியாப்பக் கடைக் கிழவியே “டேக் இட் ராசா” என்று பேசும் விளம்பரம் வெற்றி பெறும்போது தமிழில் மொழி பெயர்ப்பதால் மூல நிறுவனத்தின் பிராண்டுக்கு இருக்கும் புகழையும் அடையாளைத்தையும் வைத்து விற்கும் வாய்ப்பை இழந்து மேலும் செலவு செய்து புதிய அடையாளத்தைப் பரப்பத் தேவைப் படலாம். எந்த வணிக நிறுவனமும் இப்படி அசட்டுத்தனமாகச் செலவு செய்து ஏற்கனவே இருக்கும் பெயரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
சீன மொழியில் கோகோ கோலா என்ற வணிகப் பெயரைச் சீன எழுத்துகளில் எழுதத் திணறிய நிறுவனத்தின் சிக்கல்கள் பற்றிய சுவையான செய்திகளை “Branding in China: Global Product Strategy Alternatives" என்ற கட்டுரையில் காணலாம்.
இங்கே சீனர்கள், அரபு மக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.
சீன நாட்டு மக்கள் தம் தொன்மையான மொழி, பண்பாடு பற்றிப் பீடும் பெருமையும் கொண்டவர்கள். அமெரிக்க, ஆங்கிலேயப் “பன்னாட்டுப் பண்பாட்டு”ச் சூழலை ஏற்று அடி பணியாமல், தம் மொழியையும், பண்பாட்டையும், பெருமையையும் உயர்த்திப் பிடிப்பவர்கள். இது தென்கிழக்காசியாவில் பிற இன, மொழி, பண்பாடுகளோடு, ஆங்கில/அமெரிக்க ஆளுமைக்கு அடிபணிந்து வாழும் நாடுகளில் உள்ள சீன மக்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை.
சீனர்களைப் போலவே தம் மொழி, பண்பாடு, சமயம், இனம் பற்றிப் பீடும் பெருமையும் கொண்ட இன்னொரு குடியினர் அரபு மக்கள். ஆங்கில, அமெரிக்க ஆளுமைக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், தம் மொழி, பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காத மரபினர். இதனாலோ என்னவோ, வேற்றுமொழி விளம்பரங்களை அரபு மொழிக்குப் பெயர்ப்பதில் மொழி, பண்பாடு, சமய மரபுகளோடு உடன்படாமல் செய்வதால் விளம்பரங்கள் விளங்காமல் குழப்பத்தை விளைவிக்கின்றன என்று 97% அரபு மக்கள் கருதுவதாக ஒரு தரவு தெரிவிக்கிறது.
தமிழர்களில் பலருக்குத் தம் மொழி, பண்பாடு, தொன்மை பற்றிய பெருமை இருப்பினும், ஒரு சில அண்மைக்காலத் தன்னந்தனித் தமிழர்களின் கேலிக்கூத்தான நடவடிக்கைகளாலும், அமெரிக்க, ஆங்கில, இந்தியப் பண்பாட்டுக் கலவையின் அழுத்தமான ஆளுமையாலும், பிறமொழி, பிற பண்பாடுகளுக்கு அடி பணிந்து கிடந்த வரலாற்றாலும், தனித்தமிழ்ப் பெயர்கள் பீடு தரும் பெயர்கள் என்ற கம்பன் கால நிலை சரிந்து நெடுங்காலமாகிவிட்டது.
தனித்தமிழ் என்பது மொழியல்ல. அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை. அது சிறப்பு நடை, மிடுக்கு நடை, ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல நூற்றாண்டுகளாகின்றன. கல்வெட்டுகளின் தொடக்கத்திலிருந்தே, உரைநடைத் தமிழ் கலப்படத் தமிழாகவே இருந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இவற்றை எல்லாம் புறக்கணிப்பது என்பது தமிழ் மொழி, பண்பாடு இவற்றின் வரலாற்றில் ஒரு கூறைப் புறக்கணிப்பதற்கு இணையானது.
தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும் சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி விட்டன. பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும், பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆளும் மேல்தட்டுக் குடும்பங்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, ஆங்கிலோ-தமிழில் பேசி, ஆங்கிலோ தமிழ்ப் பெயர்களைத் தம் நிறுவனங்களுக்குச் சூட்டி மகிழ்வதை தொலைக்காட்சி நிறுவனங்கள் நமக்கு அன்றாடம் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தனித்தமிழ் அரசியல் பின்னணியில் ஆட்சிக் கட்டில் ஏறிய குடும்பங்களின் வழித்தோன்றல்கள் என்றாலும், தனித்தமிழைப் புறக்கணித்து, ஒரு புதிய மணிக்கோரல் (தமிழும் இங்க்லிஷும் கலந்த மணிcoral) நடையைப் போற்றி வளர்ப்பவர்கள்.
மேலை நாட்டு ஆங்கில விளம்பரப் பெயர்களை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதியில்லாமல் தமிழில் பெயர்ப்பதற்கு முற்படுவதற்கு முன்பு, தமிழகத்தில், தனித்தமிழ் இயக்கத்தின் வழித்தோன்றல்கள் தோற்றுவித்த நிறுவனங்களின் விளம்பரப் பெயர்களை அவர்களே தமிழில் மொழி பெயர்த்து அல்லது தனித்தமிழ்ப் பெயர் சூட்டி அழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு சில மேலைநாட்டுப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து எழுதுவது என்பது தனித்தமிழ் இயக்கம் என்பது போலித்தனமான அரசியல் கூத்து, வேறு ஏதும் கையில் கிடைக்கவில்லை என்றால் தமிழர்களின் பார்வையைத் திருப்புவதற்கான ஒரு மேஜிக் டிரிக், மந்திர தந்திரம், மாயாஜாலம், செப்பிடு வித்தை என்ற குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.
> மொழி ஆளுமை / மொழிப் பற்று / இனப் பற்று என்பது அவரவர் தனிக்கருத்து.
>
> அன்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனாலேயே
> அடைப்புக்குறிக்குள் அளிநட்பே(paypal) என்று எழுதுகிறோம்.
>
> மொழி உணர்வைப் போற்ற வேண்டும் என்று கூறவில்லை. தூற்றாமலாமாவது இருக்கலாமே :(
ஜனவரி 1, 2025
2 வாரங்கள் முன்பு