சனி, ஜூன் 05, 2010

எழுத்துச் சீரழிப்பு பற்றிய சிந்தனைகள் - 1

அண்மைக்காலத்தில் எழுத்துச் சீரழிப்பு முயற்சிகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது போலத் தோன்றியது. இரவும் பகலும் விழிக்காமல் உலகெங்கும் உள்ள மடற்குழுக்கள், வலைப்பூக்கள், என்று எல்லா இடங்களிலும் இடையறாது சீரழிப்புப் பரப்புரை செய்து வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று அமைதியானார்கள்.  பின்னணியில் மும்முரமாகச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்கின்றன என்று செய்திகள் வேறு.  எனினும், சீரழிப்பை எதிர்த்து மலேசியாவில் குரல் கொடுத்திருந்த இளங்குமரனார் தமிழகம் திரும்பியதில் இருந்து புதுவை வலைப்பதிவர் சிறகம் சீரழிப்பை எதிர்த்து ஒரு மாநாடு கூட்ட முடிவு செய்தது. மே மாதம் 16 ம் நாள், ஞாயிறன்று ”தமிழ் எழுத்து வடிவ மாற்றம் - எதிர்ப்பு மாநாடு” என்ற தலைப்பில் மாநாடு கூட்ட ஏற்பாடுகள் தொடங்கின.

தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டியில் சீரழிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த பதிவர்களை அவர்கள் தொடர்பு கொண்டார்கள்.  வாஷிங்டன் சங்கரபாண்டி, கனடா பேராசிரியர் செல்வகுமார், அரேபியாவிலிருந்து நாக. இளங்கோவன், மலேசியாவிலிருந்து சுப. நற்குணன்,  சென்னையிலிருந்து இராம.கி. ஐயா அவர்கள், மற்றும் நான் வலைப்பூவுலகிலிருந்து கலந்து கொண்டோம்.  பூவுலகிலிருந்து செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்,  புதுச்சேரி பேராசிரியர்கள் ம. இலெ. தங்கப்பா, மற்றும் நா. இளங்கோ ஆகியோரும் மற்றும் புதுவைப் பதிவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

ஞாயிறு காலையில் கூட்டம் திரட்டுகிறார்களே, அதிலும், எழுத்துச் சீரழிப்பு போன்ற சற்று நுட்பமான கருத்தாயிற்றே, கடற்கரைக்கு அருகே கூடுகிறார்களே,  கூட்டம் திரளுமா என்ற ஐயம் இருந்தது என்னவோ உண்மைதான்.  சான் பிரான்சிஸ்கோவில் கூட்டம் கூட்டினால், அவ்வளவு காலையில் கூட்ட மாட்டோம்.  ஞாயிறன்று சோம்பலாக எழுந்து, காலையில் தொலைக்காட்சி முன்னால் அமெரிக்கக் கால்பந்தாட்டத்தைப் பார்க்க உட்காருபவர்களை வலுக்கட்டாயமாகத் தமிழ்க் கூட்டத்துக்குக் கூட்டி வருவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால், புதுச்சேரித் தமிழர்கள் மொழியார்வமும், சமூகப் பார்வையும் கொண்டவர்கள்.  தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால் அவர்கள் விழிமலர்கள் வேலாகும், வாளாகும் தன்மை கொண்டவர்கள்.  என்ன இருந்தாலும் பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த மண்ணல்லவா!  அப்படித்தான் இருக்கும்.



பல கருவித் தடங்கல்களுக்கு நடுவிலும் கூட்ட்த்தை இனிதே தொடங்கினர்.  இளங்குமரனார் ஐயா தொகுத்த ”தமிழ் வடிவ சீர்திருத்தமா, சீரழிப்பா” என்ற நூலை வெளியிட்டனர்.  நமக்குத் தெரியாத பல அரிய கருத்துகளைத் திரட்டியுள்ளது இந்த நூல்.  தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய நூல். மாநாட்டில் நடந்த பல செய்திகளைப் புதுவை வலைப்பதிவர் சிறகம் நன்றாகத் தொகுத்துள்ளது.

கூட்டத்தில் நான் சொன்ன சிலவற்றை இங்கே பகிர்ந்து கொண்டு எனது சிந்தனைத் தொடரைத் தொடங்குகிறேன்.

முதலில், சீர்திருத்தம் தேவையா என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

என்று வள்ளுவர் சொன்னது போல நடுநிலைமையுடன் இதை ஆய்வோம்

சீர்திருத்தம்
  • ஏன் தேவை, 
  • என்ன சீர்திருத்தம் தேவை, 
  • யாரெல்லாம் இதை வலியுறுத்துகிறார்கள், 
  • ஏன்
என்று பார்ப்போம்.

தமிழ் எழுத்துகள் தெய்வீக எழுத்துகள் என்று நாம் சொல்லவில்லை.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து  பண்ணுறத் தெரிந்தாய்ந்த தமிழ் எழுத்துக்குச் சீர்திருத்தம் தேவையே இல்லை என்றும் நாம் வாதிட வரவில்லை.

பழைய காலத்தில் சீர்திருத்தம் செய்திருக்கிறார்கள்.  அவை என்ன, சரியா தவறா, அவற்றை ஏற்றிருக்கலாமா என்றும் பார்ப்போம். எப்போது சீர்திருத்தம் தேவை என்றும் ஆய்வோம்.

பின்னர் எப்போது சீர்திருத்தம் தேவையில்லை என்றும் பார்போம்.  சீர்திருத்தம் தேவை என்போர் கூறும் காரணங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

வரிவ்டிவச் சீர்திருத்தம் குறித்து அரசியல் தலைவர்கள் என்ன கூறினார்கள் என்பதையும் கருத்தில் கொள்வோம்.

பின்னர் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வோம்.

1 கருத்து:

செல்வா சொன்னது…

ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம், மணி, தொடருங்கள்!