வியாழன், அக்டோபர் 28, 2010

பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?

கடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.

மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196

http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html

இந்தப் பெருவெடிப்பு தமிழ்நாட்டின் ஏனைய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததோ இல்லையோ, இது போன்ற செய்திகளைப் பார்த்து நேயர்களுக்குச் செய்திகளை முறையாகத் திரட்டித் தரும் தமிழின் தலை சிறந்த வானொலியான பிபிசி தமிழோசையின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெகதீசன், தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா என்ற தலைப்பில் இந்தச் சர்ச்சை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதன் சுட்டி இதோ:

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101028_unicodetamil.shtml

இது தொடர்பாக திரு ஜெகதீசன் என்னுடன் தொடர்பு கொண்டு ஒரு செவ்வியைப் பதிவு செய்தார். முழுச் செவ்வியின் சுட்டியும் இதோ:


http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/10/101028_unicodegranntha?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1




அவர் எனது கருத்துகளில் சிலவற்றை பிபிசி தமிழோசை முகப்பில் பதிவு செய்துள்ளார்:

செய்தி (நன்றி பிபிசி):

”தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்த சர்ச்சைகுறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வுரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.”

தற்காலத் தொழில்நுட்பம் பற்றிய சிக்கல் ஒன்றை, எல்லோருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகப் பேசுவதற்கு நல்ல தமிழ்ப் பயிற்சியும் பட்டறிவும் தேவை.  பேரா. வா. செ. குழந்தைசாமி அவர்கள் எத்தகைய சிக்கலான நுட்பச் செய்தியையும் தங்குதடையில்லாமல் ஆற்றொழுக்குப் போல, அதே நேரத்தில் ஒரு மிடுக்கான அரச நடைத் தமிழில் பேசுவதில் வல்லவர்.  பல முறை அவரது பேச்சுக்களைக் கேட்டு வியந்திருக்கிறேன்.  சில முறை அவரது பேச்சுக்களை வானொலிக்காகப் பதிவு செய்திருக்கிறேன்.  அவரது ஆற்றல் எனக்கு இல்லை என்றாலும், அவரது பேச்சுக்களைக் கேட்டதன் தாக்கத்தினால், இந்தச் செவ்வியில் என்னால் ஓரளவுக்குப் பேச முடிந்தது.  இந்த செய்தியை முன் பின் கேட்டிராதவர்களுக்கு நான் சொன்னது புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

இந்தச் சிக்கலைப் பற்றி விவரமாக எழுதிப் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

செவ்வியைக் கேட்பவர்கள் நான் சொன்ன கருத்துகளைப் பற்றி மறுமொழியை இங்கே பதிவு செய்தால் மகிழ்வேன்.

4 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

நண்பா புழக்கடைப் பக்கம் என்று தான் வரவேண்டும். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

புழை என்பது பல தவறான அர்த்தம் கொண்டது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

உங்கள் பேட்டி மிகவும் அருமை. தமிழில் தொழில்நுட்பம் குறித்து ஆற்றொழுக்கான நடையில் இவ்வளவு சிறப்பாக யாரும் பேசிக் கேட்டதில்லை. பேட்டி எடுத்தவரும் மிகவும் பொருத்தமான கேள்விகளைக் கேட்டார்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

@ஜோதிஜி,

புழக்கடை என்பது பேச்சுவழக்குச் சொல். அது புழைக்கடை என்ற செந்நடைச் சொல்லிலிருந்து வந்தது. சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேரகராதியைப் பாருங்கள்:

புழக்கடை puḻa-k-kaṭai : (page 2792)

புழக்கடை puḻa-k-kaṭai
, n. < புழை +. See புழைக்கடை. Colloq.

--
புழைக்கடை puḻai-k-kaṭai : (page 2795)


புழைக்கடை puḻai-k-kaṭai
, n. < id. +. 1. Backyard, open space behind a house and attached to it; rear gangway; வீட்டின் பின்வாயிற் புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் (திவ். திருப்பா. 14). 2. Last sluice of a tank; கடை மடை. புழைக்கடைப் புனலலைத் தொழுகும் (சீவக. 1614). 3. Small gate; நுழைவாயில். (இலக். அக.)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

@இரவிசங்கர்,

பாராட்டுக்கு நன்றி. தமிழில் தொழில்நுட்பம் பற்றி நண்பர் முத்து நெடுமாறன் பேசிக் கேட்க வேண்டும். ஆங்கிலத்திலும், தமிழிலும், இணையாக மிக அழகாகப் பேசுவார்.

பிபிசி ஜெகதீசன் நீங்கள் கூறுவது போல மிகப் பொருத்தமான கேள்விகளைக் கேட்டார். தமிழ் இணையம், ஒருங்குறி இவற்றின் பின்னணியை நன்றாகத் தெரிந்தவர். அவரது நேயர்களுக்கு எது தேவையோ அதையும் அவர் மிக நன்றாகவே அறிந்திருந்தார்.