மேடவாக்கத்தில் உள்ள பாவலரேறு தமிழ்க்களம் தனித்தமிழ் ஆர்வலர்களின் கோட்டை. பெருஞ்சித்திரனார் பெயரில் அமைந்திருக்கும் இந்த மன்றத்தில் பல தமிழ்ப் புலவர்களும், தமிழுணர்வாளர்களும் அவ்வப்போது கூடி தனித்தமிழ் வளர்த்தல், தமிழுக்கு வரும் இடர்ப்பாடுகள் களைதல் பற்றி ஆய்ந்து வந்திருக்கின்றனர். எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அலசல்களை வெவ்வேறு கோணங்களில் இம்மன்றம் அலசியிருக்கிறது.
தற்போது தமிழ் யூனிக்கோடு (ஒருங்குறி) குறியீட்டில் கிரந்த முன்மொழிவுகளைப் பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்க்களத்தார் அதைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன் தமிழுக்கு வந்திருக்கும் மிகப் பெரும் இடையூறாக அதைக் கருதியுள்ளனர். சிக்கலின் கருப்பொருளாக அவர்கள் கருதுவது “கணினியில் தமிழ்மொழிக்காக உருவாக்கப் படும் ஒருங்குறி இட அமைப்பில் 26 கிரந்த எழுத்துகளும் தமிழில் இடம் பெற வேண்டும் என்று குறுக்கு வழியில் சிலர் தமிழ் எழுத்து அமைப்பில் புகுத்தப் பார்ப்பது” என்பதே.
“தமிழர்க்கு எட்டாத தொலைவிலேயே தமிழ் கெடுக்கப் படுகிறது. தமிழறிஞர் பலருக்கு இப்போது கணினித் தமிழில் அறிமுகம் குறைவு. கணினி அறிஞர் பலர் தமிழில் பற்றும் ஆர்வமும் அக்கறையுமில்லாதவர்களாக உள்ளனர். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ’சர்மா’ போன்ற காஞ்சி மடத்தவர் நுழைந்து குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். மொழியறிவு பெற்ற தமிழர்களும், கணினியறிவு பெற்ற தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழைக் காக்க வேண்டிய காலம் இதோ வந்து விட்டது.” என்று சொல்லி, தமிழறிஞர்களும் கணினியறிஞர்களும் ஒருங்கே கலந்து கொள்ளும் கருத்துரையாடல் நிகழ்ச்சியை தமிழ்க்களம் கூட்டியது.
|
தமிழ்க்களத்தில் மீனன் கிரந்தத்தை எதிர்த்துப் போர்க்குரல் கொடுப்பவதைப் பேரா. இறையரசன், பேரா. பொன்னவைக்கோ, பூங்குன்றன் பார்க்கிறார்கள். |
அழைப்பிதழில் எனக்குத் தெரிந்து இருந்த ஒரே கணினி அறிஞர் முன்னாள் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ அவர்கள் மட்டுமே. ஏனையோர் பேரா. இறையரசன் போன்ற தமிழ்ப்புலவர்கள் மட்டுமே.
ஒருங்குறி பற்றி அரைகுறையாகப் புரிந்து கொண்டு இதைப் பற்றி எழுதுபவர்கள் ஏராளம். ஏற்கனவே தினமணியில் வந்த தவறான செய்தி மற்றும் பலர் பல்வேறு முறையில் இதைப் பற்றி எழுதுவதால் குழம்பிப் போய் இருப்பவர்கள் பலர். இதில் தமிழ்ப்புலவர்கள் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஏற்கனவே திரு ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவின் ஆய்வையும், செறிவையும், உள்ளடக்கத்தையும் நான் பாராட்டி எழுதி இருந்தது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
ஸ்ரீரமணஷர்மா இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்திருந்தார். ஒன்று கிரந்த எழுத்துகளைத் தரப்படுத்துவது என்பது. இரண்டாவது தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில் எழுந்த 26 புதுக்குறியீடுகளைக் கொண்டு வடமொழிக்குத் தேவையான வர்க்க எழுத்துகள், துணையெழுத்துகளை ஒருங்குறியில் தரப்படுத்துவது என்பது. அவரது கிரந்த முன்மொழிவு மிகச் சிறப்பாக இருந்தாலும், அதில் திரு. நாக. கணேசன் வலியுறுத்துவது போல தமிழ் எழுத்துகளை எ, ஒ, ழ, ற, ன, மற்றும் தமிழ் உயிர்மெய்க் குறியீடுகள் ெ, ொ ஆக வடமொழியில் இல்லாத இந்த ஏழு குறியீடுகளை ஏற்றுவதைப் பட்டும் படாமல் ஆதரித்திருந்தார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் முன்பே துணைவேந்தர் ராஜேந்திரன் கூட்டத்தில் சொன்னது போல, திரு ஷர்மாவுக்கும் கிரந்தக் குறியீடுகளில் தமிழ் எழுத்துகள் தேவையில்லை என்ற கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனால், தமிழ் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து எழுத வேண்டிய தேவை இருக்கும்போது தொழில்நுட்பச் சிக்கல்களால் அவ்வாறு எழுத இயலாதே என்றார். அதை அப்புறம் பார்ப்போம்.
ஆனால், ஷர்மாவின் இன்னொரு முன்மொழிவான 26 புதுக் குறியீடுகளை நீட்டித்த தமிழ் என்ற பட்டியலில் கூட்டுவதை நான் முன்னரே யூனிகோடுவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்த்திருக்கிறேன். அதை http://www.infitt.org/pressrelease/UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf என்ற சுட்டியில் பார்க்கலாம்.
இதை அறியாத சில தமிழ்ப் புலவர்கள், ஷர்மாவின் முன்மொழிவை நான் பாராட்டியதை வைத்துக் கொண்டு, தன் தாயைக் கொல்ல வருபவருடைய தங்கக் கத்தியைப் பாராட்டும் “உட்பகைவன்” என்று என்னைச் சில மடலாடற்குழுக்களில் சாடத் தொடங்கி விட்டார்கள். தினமணிக்குத் தவறான செய்தியைக் கொடுத்ததே நான் தான் என்றே முடிவுக்கு வந்து விட்டார்கள். TACE16 குறியீடு தமிழக அரசுத் தரமாக வேண்டும் என்று பத்தாண்டுகளாக உழைத்தவர்களில் நானும் ஒருவன். அது தெரியாதவர்களாம் மட்டுமே இப்படிப் பட்ட புரளிகளை நம்ப முடியும். தமிழ்ப்புலவர்களுக்குக் கணினித் தமிழ் மட்டுமல்ல, கணினித் தமிழ் வரலாறும் தெரியாது. அவர்கள் கண்ணோட்டத்தில் ”மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்பவர்கள் “உட்பகைவர்கள்.”
இந்த நிலையில் தமிழ்க்களம் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இருந்தேன். ஆனால்,
நண்பர் இராமகி அவர்களோ, இது தனித்தமிழ் வளர்க்கும் நல்லோர் கூட்டம். அவர்களுக்குத் தொழில்நுட்பத்தை விளக்கி உண்மையைச் சொல்ல வேண்டும். இல்லையேல் ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்கள் அவர்களை மேலும் குழப்புவார்கள். அதனால், நீங்கள் கட்டாயம் ஆற்றவேண்டிய தமிழ்ப்பணி இது என்று அன்புக் கட்டளையிட்டார். எங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு, TACE16 குறியீடு, கிரந்தத்தில் தமிழ் எழுத்து எதிர்ப்பு என்று பல கருத்துகளில் இணைந்து செயலாற்றி வருகிறோம். இராமகி அவர்களின் வியக்கத்தக்க தமிழ் நடை பலரைப்போலவே என்னையும் ஈர்ப்பது. அவரது ஆழ்ந்த தமிழ்ப் பற்றும், தமிழைப் பற்றி மாற்றுத்தடத்தில் சிந்திக்கும் திறனும், கலைச்சொல்லாக்க ஈடுபாடும் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. அவர் சொல்லை ஏற்று அழையாத விருந்தாளியாய் தமிழ்க் களக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்.
கூட்டம் காலம் தாழ்த்தியே தொடங்கினாலும், தலைமை விருந்தினர் பேரா. பொன்னவைக்கோ வேறு நிகழ்ச்சியில் இருந்து வந்து சேர மேலும் நேரம் ஆகும் என்பதால், முதலிலேயே பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. விழா அமைப்பாளர் பூங்குன்றன் அவர்களின் தொடக்க உரையிலேயே அவர்களுக்கு இதைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், இதன் முழு விவரத்தையும் ஒரு சில நிமிடங்களில் கூற வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொண்டேன்.
ஒருங்குறி என்ற யூனிகோடு (Universal Encoding system not Uniform Encoding) உலகின் எல்லா எழுத்துகளையும் உள்ளடக்க முயலும் குறியீட்டு முறை. இதில்
வெவ்வேறு தட்டுகள் உள்ளன. அடித்தட்டு (BMP - Basic Multilingual Plane) வாழும் மொழிகளின் எழுத்துகளை உள்ளடக்கியது. துணைத் தட்டுகள் (SMP - Supplementary Multilingual Plane) பண்டைய எழுத்துகள், இசை மற்றும் கணக்குக் குறியீடுகள் போன்றவற்றை உள்ளடக்கியவை.
தமிழ் எழுத்துகள் அடித்தட்டில் உள்ளன. ஏனைய இந்திய எழுத்துகளைப் போன்ற கட்டமைப்பில் 128 கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக் கட்டத்தில் வர்க்க எழுத்துகளுக்கான இடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. இதில் யாரும் எதையும் திணிக்க வரவில்லை. இரண்டு கிரந்த முன்மொழிவுகளும், இப்போது இருக்கும் யூனிகோடு தமிழை எந்த விதத்திலும் மாற்ற முன்வரவில்லை. இவற்றால் இன்றைய தமிழுக்கு எந்த வித இடையூறும் இல்லை. இல்லவே இல்லை. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் வீண் கற்பனைதான் வளரும்.
ஸ்ரீரமணஷர்மாவின்
நீட்டித்த தமிழ் முன்மொழிவு 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழில் திணிக்க முன்வருகிறது என்று சொல்வது பிழை. ஆறாம் நூற்றாண்டில் தென்னகத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் புழங்கி வந்த கிரந்த எழுத்து முறை, தேவநாகரியின் ஆதிக்கத்தால் கிட்டத்தட்ட மறைந்தே போய் விட்டது. தேவநாகரியும் கிரந்தமும் தெரியாதவர்களுக்கும் தமிழ் எழுத்துகளிலேயே வடமொழியின் வர்க்க ஒலிகளையும், தமிழில் இல்லாத உயிரெழுத்துகளையும் குறிப்பிடுவதற்காக, மேற்குறிகள் அல்லது கீழ்க்குறிகள் போன்ற துணைக்குறிகளை வைத்து எழுதும் முறை (க,க²,க³,க⁴,த,த²,த³,த⁴...) 20ம் நூற்றாண்டில் எழுந்தது. காஞ்சி மடத்தால் பரப்பப் பட்ட இந்த எழுத்து முறையில் அம்மடத்தின் நூல்கள் வெளிவந்துள்ளன. இதைத் தற்கால மணிப்பிரவாள எழுத்து முறை எனலாம். இவை பெரும்பாலும் தமிழ் எழுத்துகள்தாம். (பெரும்பாலும் என்று ஏன் சொல்கிறேன் என்றால், தமிழில் இல்லாத, ஆனால் வடமொழிக்கு வேண்டிய குறியீடுகளையும் ஷர்மா கேட்டுள்ளார்.) ஆனால், இங்கே (க,க²,க³,க⁴,த,த²,த³,த⁴... என்று காண்பது போல மேற்குறியிட்ட எழுத்துகளைத் தற்போதுள்ள யூனிகோடு முறையிலேயே எழுதலாம். ஆனால், தா², தோ² போன்ற உயிர்மெய் எழுத்துகளை எழுதும்போது இந்த மேற்குறி த என்ற அகரமேறிய உயிர்மெய்யெழுத்தின் மேல் இல்லாமல், துணைக்கால் அருகே இருப்பது குழப்பத்தைத் தரும் என்கிறார் ஷர்மா.
இந்தச் சிக்கலுக்குக் காரணம் யூனிகோடு குறியீடு அல்ல, ஆனால், அதை இயக்கும் செயலிதான் என்று நிறுவினார் மலேசியாவின் முத்து நெடுமாறன். அது மட்டுமல்லாமல், இது தனி எழுத்து முறையல்ல. இது ஒரு குறி மாற்று முறை. தமிழ் எழுத்துகளில் வடமொழி ஒலியை மட்டுமல்லாமல், அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் வழங்கும் எழுத்துகளான (F, Q, Z) போன்ற பிறமொழிகளுக்கும், ஏன் பன்னாட்டு ஒலிக் குறியீடுகள் பலவற்றிற்கும் கூடத் தேவையான மீக்குறிகள், மேற்குறிகள், துணைக்குறிகளைத் தமிழ் எழுத்துகளுடன் இணைத்து எழுதலாம். இதற்கு என்று ஒரு துணைக்குறிப் பட்டியல் அமைப்பது வேறு, வடமொழிக்காக மட்டும் வர்க்க ஒலிகளுக்காகத் தமிழ் எழுத்து என்ற பெயரில் இடம் ஒதுக்குவது என்பது வேறு. இத்தகைய வாதங்களை என்னுடைய மறுப்புக் கடிதத்திலும், கனடா பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் கடிதத்திலும் காணலாம்.
இத்தகைய மறுமொழிகளையும் கருத்தில் கொண்டு, யூனிகோடு நுட்பக் குழுவின் தென்னாசியத் துணைக்குழு, நவம்பர் 1க்கு முன்னரே ஷர்மாவின் “நீட்டித்த தமிழ்” முன்மொழிவை ஏற்க மறுத்துப் பரிந்துரைத்திருந்தது. ஷர்மாவின் இந்த முன்மொழிவை எதிர்த்து உலகெங்கும் வாழும் பல தமிழர்கள் யூனிகோடு நுட்பக் குழுவுக்குக் கடிதங்கள் எழுதியிருந்தாலும், இவை அனைத்தும் யாரோ தவறான பரப்புரை செய்ததால் புரியாமல் எழுதப்பட்டவை என்று யூனிகோடு நுட்பக் குழுவினர் அவற்றை ஒதுக்கி விட்டதாக அறிகிறேன்.
காஞ்சி மடத்தின் ஷர்மா 26 கிரந்த எழுத்துகளைத் திணிக்க வருவதை எதிர்க்க அங்கு கூடியிருந்தவர்களுக்கு இந்தச் செய்தி ஏமாற்றத்தைத் தந்திருக்க வேண்டும். கூட்டம் அமைதியாக என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது.
பிறகு கிரந்தம் பற்றிப் பேசத் தொடங்கினேன். கிரந்த எழுத்து முறை என்பது வடமொழி ஒலிகளை எழுதத் தென்னகத்தில் பல்லவர் காலத்தில் தோற்றுவிக்கப் பட்ட முறை. தென்னிந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு எழுத்து முறை. பல்லாயிரக் கணக்கான பல்லவ, சோழ, பாண்டிய அரசர்கள் மற்றும் சிற்றரசர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிரந்தத்திலோ அல்லது கிரந்த எழுத்துகள் கலந்தோ எழுதப் பட்டிருக்கின்றன. இவற்றில் தமிழர்களின் வரலாற்றுச் செய்திகள் பொதிந்திருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளின் படங்கள் பல இன்னும் பதிப்பிக்கப் படவில்லை. எவையுமே இன்று வரை கணினியில் ஆய்வுக்காக எழுத்து அறியும் வகையில் எண்ணிமப் படுத்தப் படவில்லை.
இந்திய அரசின் கிரந்த முன்மொழிவு இக்குறையைத் தீர்க்க எழுந்த முன்மொழிவு. இந்திய அரசின் முன்மொழிவு பல ஆண்டுகளாய்ப் பல அறிஞர்கள் எழுதிய முன்மொழிவுகளின் ஒருமித்த முன்மொழிவு. இதில் முதலில்
நாக கணேசன் எழுதிய முன்மொழிவில்தான் தமிழ் எழுத்துகள் சேர்க்கப் பட்டன. அதைச் சேர்த்ததற்கு கணேசன் கூறும் காரணம் தமிழ் எழுத்துகள் ஏற்கனவே திவ்வியப் பிரபந்தம் போன்ற நூல்களை வெளியிடுவதற்காக கிரந்த எழுத்து முறையில் வழக்கில் இருப்பவை என்பதாம். எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் தமிழ் எழுத்துகளை எழுதக் கிரந்தத்தில் வரிவடிவம் இருந்தது என்று கணேசன் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கேற்ற சான்றுகள் அவர் முன்மொழிவில் இல்லை.
கணேசனின் முன்மொழிவில் பிழைகள் மலிந்திருந்தன என்று கருதிய
ஸ்ரீரமணஷர்மா, தாமே ஒரு கிரந்த முன்மொழிவை எழுதினார். இதில் வடமொழிச் சமய நூல்களை பொருளும் ஒலிப்பும் மாறாமல் கிரந்தத்தில் கொண்டு வரத் தேவையான தொழில் நுட்பங்களை விளக்கி இருக்கிறார் ஷர்மா. கணேசன் கூறியதைப் போல் தமிழ் எழுத்துகளைக் கூட்டுவதை ஏற்றுக் கொண்டாலும், அவை தமிழ்ப் பெயர்களைக் குறி பெயர்ப்பதற்காக என்றால் அவை தேவை இல்லை என்கிறார் ஷர்மா.
கிரந்த எழுத்துகளில் தமிழைச் சேர்ப்பதால் என்ன கேடு விளையலாம்?
கிரந்த எழுத்துகளிலேயே தமிழை எழுத முடிந்தால் மெல்ல மெல்ல தமிழ் எழுத்துகள் வழக்கொழிந்து போய் கிரந்தம் மேலாதிக்கம் செலுத்த, தமிழில் பிறமொழிச் சொற்கள் எண்ணற்ற வந்து கலந்து போய், சேரர் தமிழ் மலையாளமாகத் திரிந்தது போல, இன்றைய தமிழும் இன்னொரு மலையாளமாகத் திரிந்து விடலாம் என்று பலர் அஞ்சுகின்றனர். தமிழ் எழுத்துகளில் கிரந்த வர்க்க எழுத்துகள் கலந்து போய் மணிப்பிரவாளம் மீண்டும் உயிர்தெழுந்து தனித்தமிழை அழிக்கலாம் என்று இன்னொரு அச்சமும் உள்ளது.
|
கிரந்த எழுத்துகளில் குறளும், பெயரும், கிரந்த நெடுங்கணக்கும் |
கிரந்த முன்மொழிவின் சிக்கல்கள் தமிழ் எழுத்துகளுக்கு அல்ல. இந்தியாவிலேயே மிக எளிமையான தமிழ் எழுத்துமுறையைக் கை விட்டு விட்டு மிக மிகச் சிக்கலான கிரந்த எழுத்து முறையை ஒட்டு மொத்தத் தமிழர்களும் எடுத்துக் கொள்வார்கள் என்பது வீண் மிரட்சி. இதன் உண்மையான சிக்கல் என்னவென்றால் இவற்றால் தோன்றக் கூடிய வரலாற்றுக் குழப்பமும், சிதைவும் தான். தமிழுக்கு என்று தனி எழுத்து இருந்த வரலாறேகூட மறையக் கூடும். இருக்கும் கல்வெட்டுகளையெல்லாம் வேலை மெனக்கெட்டுக் கற்சுரங்கங்களுக்காக வேட்டு வைக்கும் தமிழன் தன் வரலாற்றுக்கும் சேர்த்துதான் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த முட்டாள்தனத்தோடு இந்த் ஒருங்குறிச் சிக்கலும் சேர்ந்தால் வரலாற்று ஆவணங்களில் உள்ள செய்திகள் மறையலாம். ஆனால், தமிழ் இன்னொரு மலையாளமாக மாறக்கூடும் என்ற அச்சம் எனக்கு இல்லை.
இந்த கிரந்த முன்மொழிவைப் பற்றி விரிவாக அலசி நுட்பக் கருத்துகளை யூனிகோடு நுட்பக் குழுவுக்கு வைக்க வேண்டும் என்றால், நமக்குத் தேவையானவர்கள் - யூனிகோடு நுட்பத்தை அறிந்தவர்கள், கிரந்த எழுத்துகளைப் பற்றி நன்கறிந்தவர்கள், கிரந்தத்தில் வடமொழி எழுதுவதைப் பற்றி அறிந்தவர்கள், கல்வெட்டுகளில் கிரந்தம், தமிழ், ஏனைய தென்மொழிகள் பற்றி அறிந்தவர்கள், மொழியியல் வல்லுநர்கள் என்பவர்களே. தமிழ் மட்டும் தெரிந்தவர்களால் இந்த முன்மொழிவுக்குத் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் மறுமொழி சொல்வது அரிது.
தப்பித் தவறி இந்த இரண்டு முன்மொழிவுகளுமே யூனிகோடுவின் தரமாகி விட்டாலும் கூட, நாம் எச்சரிக்கையுடன் இருந்தால் தமிழுக்குக் கேடு ஏதும் வருவதைத் தவிர்க்கலாம் என்று என் பேச்சை விரைவாக முடித்தேன்.
மேலும் கூட்டத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறேன். ஆனால், இதற்கிடையில் “மணிப்பிரவாளத்துக்கு மறுவாழ்வா” என்ற தலைப்பில் தமிழுணர்வாளர்கள் செவ்வாய், நவம்பர் 23 அன்று கூடவிருக்கிறார்கள்.
பொதுவாக இது போன்ற தொழில் நுட்பத் தொடர்பான கூட்டங்களில் பொது மக்களுக்குத் தொழில் நுட்பச் செய்திகளை விளக்குபவர்களுக்குத் தொழில் நுட்பப் பின்னணி இருப்பது நல்லது. ஏற்கனவே தினமணியில் தவறான செய்திகள் வந்தது பலரையும் குழப்பியிருக்கிறது. தொழில்நுட்பம் புரியாதவர்கள் இதை மேலும் குழப்பிக் கொள்ள நேரிடும்.
குறைந்தது, இதைப் பற்றிப் பேசுபவர்கள் யூனிகோடு நுட்பக் குழுவிடம் அளிக்கப் பட்ட கிரந்த முன்மொழிவுகளை முற்றிலும் படித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நுட்பக் குழு இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது, ஏனைய அறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள், இந்த முன்மொழிவுகள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் என்ன, நிறைவேறினால் உண்டாகும் தொழில் நுட்பத் தாக்கம் இவற்றைப் பற்றித் தெரிந்து பேசுவது நல்லது.
இதில் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும்.
BMP, SMP என்ற இரண்டுக்கும் என்ன வேறுபாடு, எங்கே தமிழ்க் குறியீடுகள் உள்ளன, எங்கே முன்மொழியப் பட்ட குறியீடுகள் போகும், இவை இரண்டையும் கலக்க முடியுமா கூடாதா என்று தெரிய வேண்டும். நீட்டித்த தமிழ் என்றால் என்ன? அதன் உருவம் எப்படி இருக்கும்? அது வந்தால் என்ன நடக்கும்? வராவிட்டால் யாருக்கு என்ன குறை?
கிரந்த முன்மொழிவில் தமிழ் எழுத்துக்கள் ஐந்தையும், தமிழ் உயிர்மெய்க் குறிகள் இரண்டையும் சேர்க்க வேண்டும் என்று முன்மொழிந்தது யார்? அவர் அதற்கு என்ன சான்றுகள் காட்டியிருக்கிறார்? தமிழ் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அவர் முன்மொழிந்தது போல் முழுக்க தமிழ் எழுத்துகளுக்கு இணையான எழுத்துகளைக் கொண்டு முழுக்க கிரந்த எழுத்துகளிலேயே அச்சாகியிருக்கிறதா? அவர் மேற்கோள் காட்டும் “சம்ஸ்கிருத கிரந்த லிபி சபா” சென்னையில் எங்கே இருக்கிறது? அவர்கள் உண்மையிலேயே தமிழ் எழுத்துகளைக் கிரந்தக் குறியீடுகளில் அச்சிடுகிறார்களா?
மணிப்பிரவாளத்தில் இன்னும் யாரேனும் எதையேனும் அச்சிடுகிறார்களா? இருந்தால் எதற்காக? மணிப்பிரவாளத்தில் என்னென்ன பழைய நூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் இருக்கின்றன? அவற்றில் என்ன செய்திகள் உள்ளன? இவற்றால் தமிழுக்கும், தமிழனுக்கும் என்ன கிடைக்கும்?
வேள்விக்குடி செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், என்றால் என்ன? அவை எந்த எழுத்துகளில் உள்ளன? தமிழ்நாட்டிலும், கேரளத்திலும், மற்றும் ஆந்திரத்திலும், கருநாடகத்திலும் உள்ள தமிழ், தமிழர், தமிழ் மன்னர் பொறித்த கல்வெட்டுகள் எந்தெந்த மொழிகளில், என்னென்ன எழுத்துகளில், எந்தெந்தக் குறியீடுகளில் உள்ளன?
அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் எண்ணிமப்படுத்த (digitize)
ஒப்பந்தம் செய்துள்ளபடி எடுத்திருக்கும் 100,000 கல்வெட்டுப் படிகளில் எவ்வளவு கிரந்த எழுத்துகளில் உள்ளன, எவ்வளவிற்றில் கிரந்தம் கலந்து உள்ளது?
இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர் சான்றுகளுடன் விடை கொடுத்தால், பொதுமக்கள் எதை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று தெரிந்து செய்யலாம்.
அதுவே பொறுப்பான செயல்.
கண்மூடித்தனமான எதிர்ப்போ ஆதரவோ பகுத்தறிவாளர்கள் நெறிக்கு ஏற்புடையதாகாது.
ஊடகங்களில் வரும் பிழையான செய்திகளால், கிரந்த முன்மொழிவுகள் பற்றி இன்னும் குழப்ப நிலை கூடிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. சரியான தொழில்நுட்பச் செய்திகளை, தொழில்நுட்பத்தில் பட்டறிவு உள்ளவர்கள் விளக்கிச் சொல்வது தேவை. இது அறிவு சார்ந்த துறை. பேசாளர்கள் கூடுமானவரை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நுட்பச் சான்றுகளைக் கொண்டு செய்திகளை விளக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
செய்வார்களா?