சனி, பிப்ரவரி 06, 2010

மானமுள்ள உடன்பிறப்புக்குப் பணிவுள்ள தமிழனின் விடை

மலையாள நடிகர் ஜெயராம் பிதற்றியிருக்கிறார் (தமிழ்ப்பெண்களை அவதூறாக பேசிய நடிகர்).

நடிகர் ஜெயராமின் பிதற்றலில் எண்ணற்ற தவறுகள் உள்ளன.
  • ஒரு முதலாளி தன் வீட்டு வேலைக்காரியைப் பெண்டாள எண்ணுவது
  • ஒரு வேலைக்காரி தமிழ்ப்பெண் என்பதை இழிவாக எண்ணுவது
  • கருப்பான பெண் என்ற நிறவெறியைக் கொண்டிருப்பது
  • எருமை போன்றவள் என்று அவரைப் பழித்தது
என்ற எல்லாமே முட்டாள்தனமான முரட்டுச் செயல்கள்.

  • அப்படிப் பட்ட நடிகனுக்குத் தமிழ்நாட்டில் சென்ற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டலாம்.
  • அவன் படம் ஓடும் திரையரங்குகள் முன்பு மறியல் செய்யலாம்.
  • அவன் வீட்டுக்கு முன் தேர் உயரத்துக்குக் கருப்பு எருமை கட் அவுட் ஒன்றை அவன் முகச்சாயலில்  வைக்கலாம்.

ஆனால், ஒரு சில தமிழர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ( பார்க்க: 
நடிகர் ஜெயராம் வீடு மீது தீப்பந்தம் ...‎ -

நடிகர் ஜெயராம் வீடு மீது நேற்று மாலை தீப்பந்தம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்டதுடன், காரும் .
... 8 பேர் கைது செய்யப் பட்டனர்.  அவர் டைரக்டரும், நடிகருமான சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினார்கள்...
)

 ஆனால்,  செய்ய வேண்டியதை எல்லாம் விட்டு விட்டு, பொறுக்கித்தனமாக அந்த நடிகன் வீட்டை, அவன் இல்லாதபோது தாக்கி, அலுவலறையை எரித்து, அவன் மனைவி மக்களை மிரட்டுவது தமிழனுக்குப் பெருமை தரும் செயலா என்ன?

இதைச் செய்த பொறுக்கிகள் சீமான் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தினத்தந்தியில் படித்தபோது  வேண்டுமென்றே சீமானின் இயக்கத்தைப் பழிக்கிறார்களோ என்றுதான் நான் முதலில் எண்ணினேன்.

ஆனால், பகலவன் என்பவரின் வலைப்பூவில் இன்று வந்த பதிவு (கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்! ) என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பகலவனின்  சொல்லடிகளிள் சிலவற்றை இப்பதிவின் கீழே போட்டிருக்கிறேன்.

நம்முடைய தன்மானத்துக்குப் போராடுபவர்கள் மற்றவர்களைத் தூற்றுவதும், இழிவான சொற்களைக் கொட்டுவதும் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்று யாராவது இந்தப் பகலவனுக்குச் சொல்லவேண்டும்.

இவரது பதிவைப் பார்க்கும்போது, சீமானின் நாம் தமிழர் இயக்கம் இத்தகைய செயலைக் கொண்டாடுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கும், மும்பையில் வந்தேறிகள் என்று சொல்லி மற்றவர்களை மிரட்டும் தாதாக்களின் செயலுக்கும் என்ன பெருத்த வேறுபாடு உள்ளது?  இப்படி மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டம் என்றுதான் நாம் தமிழர் இயக்கத்தின் மீதும் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னர் தங்கபாலு, இப்போது ஜெயராம்.

இருவருமே கண்டிக்கத் தக்கவர்கள்தாம்.

ஆனால், இப்படிப் பட்ட பொறுக்கித்தனமான செயல்களால், அவர்கள் செய்த தவறு அடிபட்டுப் போய் தமிழர்கள் மதிப்புதான் கெடுகிறது.

சீமான், தன் இயக்கத்தின் பெயரை "நாம் தமிழர்" என்று வைத்துக் கொள்ள விரும்பினால், தமிழனுக்கே உரிய பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல், "நாம் குண்டர்கள்" என்று வைத்துக் கொண்டு குண்டர் செயலைத் தொடரட்டும்.

ஜெயராமின் சொற்களை விட சீமானின் குண்டர்கள் செயல் நம்மைத் தலை குனிய வைக்கிறது.

சீமானின் குண்டர்கள் செயலைப் போலவே சீமானின் பரப்புரையாளர்களின் தரம் குறைந்த சொற்கள் தமிழன் என்ற அடையாளத்தையே இழிவாக்குகிறது.
உண்மையிலேயே தமிழர்கள் எதிர்காலம் பற்றி அக்கறை கொள்பவர்கள் இவை போன்ற குண்டர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் நிலை கண்டு துடித்து ஆள்வோரின் சிறுமை கண்டு பொங்கியெழுந்தவர்களுக்குத் தலைமை வகுத்தவர் சீமான்.  அவர், இந்த இளந்தமிழர்களுக்கு நல்ல வழி காட்டாமால் கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.  தலைமைப் பொறுப்புக்கு ஒவ்வாதது.

இனமானம் வேறு, இனவெறி வேறு.

"தமிழர்கள் பல நாட்டில் வாழ்பவர்கள்...  எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர்" என்பார் பேரா. வா. செ. குழந்தைசாமி.  பல நாடுகளில் தமிழர்களும் வந்தேறிகள்தாம்.  அதை உணர்ந்து பொறுப்பாக எழுதவேண்டும், பேசவேண்டும், நடந்து கொள்ளவேண்டும்.

சீமானின் கும்பல்களின் வெறியாட்டத்தையும், இழிசொற்களையும், பண்பாடுள்ள தமிழ் உலகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.



--- On Sat, 6/2/10, பகலவன் wrote:
தமிழ் நாடில் உள்ள உனக்கு முதுகு எலும்பு கிடையாது ,கருநாயே நீ என்னடா இந்த மலையாள நாயை மன்னிக்க. நீ என்ன தமிழர் பிரிதிநிதியா? சொட்ட கருநாய்நிதி. தமிழின துரோகி என எல்லோரும் உங்களை திட்டுவார்கள்.

        நாங்கள் மனமுள்ள சீமானாக இருக்க வேண்டாம்.ஆனால் எங்களை இலவசத்தின் பெயரில் கோமாளியாக அல்லவா வைத்து இருக்கிறிர்கள்.நீங்கள் வாழ்க நீடுடி வாழ்க.கடைசியாக உங்க வாயில் பால் ஊற்ற வேண்டும் என்று இந்த உடன்பிறப்புக்கு ஆசை.முடியுமா தறுதலை தலைவா!

4 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் இளங்கோவன் தமிழ்மன்றம் மடற்குழுவில் எழுதிய மாற்றுப் பார்வையின் குறுக்கம்:

தமிழ்நாடு பேசிப் பேசியே உணர்வழிந்து போன ஒரு ஊர்.

எருமையை விட மோசமாகத் தடித்து விட்ட தமிழரசியல், தமிழரை மூடிக்கிடக்கிறது. அதனை முடுக்குதற்கான அவசியம் தமிழகத்தில் இருக்கிறது.

இந்தச் சொற்களைத் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஏதோ ஒரு நடிகன் பிற மாநிலத்தவரை நோக்கிச் சொல்லியிருந்தால் அந்த மாநிலத்தில்
ஓடும் அத்தனைப் பேருந்துகளும் நின்றிருக்கும். அங்கே இருக்கும் தமிழர்களின் சிலரை
எருமை மேல் கட்டிவைத்து உதைத்திருப்பார்கள்.


எல்லோரும் இப்படி இருக்கையில் தமிழர்கள் மட்டும் இன்னும் பண்பாக இருக்க வேண்டும்
நாகரிகமாக இருக்க வேண்டும் எண்ணுதல் நமக்கு நாமே மிகையாக இட்டுக் கொள்ளும்
விலங்குகள் என்பது எனது எண்ணம்.

நாம், தமிழ் தமிழர் என்ற விதயங்களில் மிதமிஞ்சிய பண்பாட்டு அளவைகளை, நாகரிக
அளவைகளை வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதற்கு இது காலமும் இல்லை. .

சீமான் கட்சியினர் செய்த வன்முறையைக் கண்டு தமிழர் அவமானப் படுமளவிற்கு ஒன்றுமில்லை என்பதே எனது கருத்து.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இளங்கோவனுக்கு என் மறுமொழி:

நாம் தமிழர் பண்பாடு என்று சொல்லும்போது எதைக் கொண்டாடுகிறோம்?

செம்மொழி என்று பெருமைப் படும்போது எதைப் போற்றுகிறோம்?

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனார் பாடலைப் படிக்கும்போது என்ன எண்ணுகிறோம்?

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"


என்ற திருக்குறள் நமக்குள் என்ன அதிர்வுகளை ஏற்படுத்துகிறது?

"ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை"

என்ற வள்ளுவன் வாக்கை ஏன் கொண்டாடுகிறோம்?

தமிழரின் நாகரிகம் பிரமிடுகள் கட்டிய பெருநாகரிகமில்லை.

சிந்து வெளி நகரங்களின் பெருமை நம்மிடம் இல்லை.

ஆனால், நம் முன்னோர் கொண்டாடிய மரபுகள் நம்மிடம் இன்னும் இருக்கின்றன.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என நாம் இன்னும் நம்புகிறோம்.

இந்த நடிகன், பண்பாடற்றவன். மக்களை மதிக்கத் தெரியாதவன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் எண்ணுபவன்.

இவன், இப்படித்தான்.

ஒரு சிற்றூரில் இப்படி ஏதாவது நடந்திருந்தால்கூட, ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி, அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டு, குற்றத்துக்கு ஏற்ப ஒறுத்திருப்பார்கள். இல்லையா?

ஊரை விட்டுத் தள்ளி வைத்திருக்கலாம், இல்லை ஊரை விட்டு வெளியே செல் என்று தீர்ப்பளித்திருக்கலாம்.

ஆனால், அவன் செய்த பிழைக்கு அவன் இல்லத்தாரை மிரட்டுவது பண்பாடுள்ளவர்கள் செயலா?

சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்வதுதான் நாகரிகம் என்று நாம் கருதுவதில்லை. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்ற மூதுரை நம் பண்பாட்டின் வேர்.

மற்றவர்கள் கீழ்த்தனமாக நடந்து கொள்வதால் நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது என்று நம்புகிறேன்.

நாம் அடிப்பதால் மிரண்டு நம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதில் என்ன பெருமை இருக்கிறது?

இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள மக்களைப் பழித்தது மடமை என்று வெட்கித் தலைகுனிந்து அவன் சென்றிருக்க வேண்டும் அல்லவா?

தமிழ்த் திரையுலகமே அவனை ஒதுக்கி வைத்திருக்கும் இல்லையா?

இப்போது, அவன் இல்லத்துக்கு விரைந்து சென்று அவன் மனைவி மக்களுக்கு ஆறுதல் கூறி அவன் பக்கம் சாய வைத்து விட்டதுதான் அறிவுடைமையா?

அது இருக்கட்டும், இந்தப் பகலவன் எழுதிய சொற்கள் நாகரிகத்தின் அடையாளம் என்றா கருத முடியும்?

இப்படிப்பட்ட இழி செயல்களையும், இப்படிப்பட்ட கீழ்த்தரமான சொல்லம்புகளையும் நம்மவர் தமிழர் என்று ஏற்றுக் கொண்டால், பிறர் இவ்வாறு செய்யும் போது அவரைக் கண்டிக்க நமக்குத் தகுதியில்லை.

அரவிந்தன் சொன்னது…

//தமிழ்த் திரையுலகமே அவனை ஒதுக்கி வைத்திருக்கும் இல்லையா?
//

ஆனாலும் உங்களுக்கு இந்தளவு நம்பிக்கை இருக்ககூடாது

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அரவிந்தன்,

இனிமேலும், ஜெயராமை வைத்துத் தமிழ்ப் படம் எடுக்கக் கொஞ்சம் துணிச்சல் வேண்டும். அவன் வீட்டைக் கொளுத்துவதை விட்டுவிட்டு, அவன் படம் ஓடும் அரங்குகளுக்கு முன்னர் "கருப்பு எருமை" பதாகைகளை காட்டி, தமிழர்களின் தன்மானத்தை உசுப்ப வேண்டும். இனிமேலும், ஜெயராம் நடித்த படங்களைப் பார்ப்பவர்கள் தாங்கள் "கருப்பு எருமை" என்று ஏற்றுக் கொள்பவர்கள். தமிழ்நாட்டில் அவன் செல்லும் இடமெல்லாம் கருப்பு எருமை முகமூடிகள் அவனை எதிர்கொள்ள வேண்டும். இந்தக் கருப்பு எருமைகள் போட்ட பிச்சைக்காசைப் பொறுக்கி எடுத்து வாழ்பவன் அவன் என்று நினைவூட்ட வேண்டும்.

வீட்டை எரிப்பதுவும், பெண்டாட்டி பிள்ளைகளை மிரட்டுவதுவும் கயமைத்தனம்.

இந்த அளவு மட்டுமல்ல, இதற்குமேலும் தமிழர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.