திங்கள், மார்ச் 01, 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை


யூனிகோடு மூலம் அறிஞர்கள் வலியுறுத்தும் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனே நிறுவ இயலும் என்கிறார் அங்கிங்கு எனாதபடி வலை எங்கும் நிறைந்திருக்கும் "எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்" மரபுச்செல்வர்.
 
அறிஞர்கள் தற்போதைக்கு வலியுறுத்தாத, ஆனால் வேறு சிலர் பரிந்துரைத்த சீர்திருத்ததையும் யூனிகோடு மூலம் நாம் செயற்படுத்த முடியும்.
 
தமிழ்க்குழந்தைகள் தேவையில்லாமல் இரு வேறு குறியீடுகள் மூலம் தனி உயிரெழுத்துகளையும் உயிர்மெய்களின் உயிரெழுத்துக் குறீயீடுகளையும் தனித்தனியே கற்க வேண்டி இருப்பதாலும் நேரம் வீணாகிறது என்ற சாக்கில் உயிரெழுத்துகளையும், உயிரெழுத்துக் குறிகளையும் ஒன்றாக்கி விடலாம்.
 
தனித்தனி உயிரெழுத்துகளுக்குப் பகராக,  அகரத்தை மற்றும் கற்றுக் கொண்டு, அகரத்துடன் ஏனைய உயிரெழுத்துக் குறியீடுகளை இணைத்து ஏனைய தனி உயிரெழுத்துகளை எழுதலாம்.  ;-)
 
இதோ:
 
அ அ‍ா அ‍ி அ‍ீ அ‍ு அ‍ூ அ‍ெ அ‍ே அ‍ை அ‍ொ அ‍ோ அ‍ௌ
 
இதன் மூலம் 11 எழுத்துகளைக் கற்பதைத் தவிர்க்கலாம்.
 
இதில் அ‍ை   (பழைய ஐ) மற்றும் அ‍ௌ (பழைய ஔ) இவற்றைத் தவிர்த்து அய், அவ் என்று எழுதி விட்டால், இந்த ஐகார, ஔகார வரிசைகளைக் கற்கத் தேவையே இல்லை.
 
பத்து உயிரெழுத்துகளை ஓர் அகரம் மற்றும் ஒன்பது குறியீடுகளை மட்டும் வைத்துக் கற்றுக் கொள்ளலாம்.
 
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்  என்ற பதினெட்டு மெய்களையும் ஆயலாம்.
 
ங் தேவையற்ற மெய்.  அதை ன்க் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  இன்கு, நுன்கு, பன்கு, வன்காளம், மயன்குகிறாள், என்று எழுதலாம்.  ஆங்கிலம் பயின்றவர்களுக்கு இதன் வசதி நன்றாகப் புரியும்.
 
அதே போல், ஞ் என்பதும் தேவையற்ற மெய்.  அதை ன்ச் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  பன்சு, வன்சம், கன்சி, இன்சி,  என்று எழுதலாம்.  பழகப் பழக இது நன்றாக வரும்.
 
தமிழுக்கு ணகரம், நகரம், னகரம் என்று மூன்றும் தேவையில்லை.  டண்ணகரத்தைப் பெரும்பாலும் தவறாகப் பலுக்குகிறார்கள்.  எனவே அதைக் கழட்டி விட்டு விடலாம்.
 
தந்நகரத்துக்கும், றன்னகரத்துக்கும் வேறுபடுத்திக் காட்டுபவர்கள் வெகு சிலரே.
 
றன்னகரம் தமிழுக்கே உரியது என்பதால் வடமொழியில் இருக்கும் தந்நகரத்தைக் கைவிடுவதுதான் திராவிடக் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.  எனவே தந்நகரத்தையும் கழட்டி விடலாம். 
 
தமிழன் வாயில் ழகரமும் வராது, ளகரமும் வராது.  சிறு குழந்தைகளை இப்படிப் போட்டு வறுத்தெடுப்பது சரியல்ல.  இவை இரண்டையும் கழட்டி விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 
அதே போல் இந்த வல்லின றகரம் ஆசிரியர்கள் வாயிலேயே வருவதில்லை.  வேறு எந்த மொழியிலும் இல்லாத இந்த றகரத்தையும் வெட்டுவது நன்று.
 
இவற்றால் மெய்யெழுத்துகள் பதினெட்டிலிருந்து பதினொன்றுக்குக் குறைகின்றன.  உயிரெழுத்துக்களையும் பன்னிரண்டில் இருந்து ஒன்றாகக் குறைத்து, மேலும் ஒன்பது குறீயிடுகளை மட்டும் வைத்துக் கொள்வோம்.   மொத்தம் 21  குறியீடுகளை மட்டும் பயின்றால்  போதுமானது.  ஆங்கிலத்தின் 52 குறியீடுகளை விடத் தமிழில் குறைவு.  எழுத்தறிவு வளர, இனம் மலர இதை விடத் தேவையான சீர் திருத்தம் என்ன இருக்க முடியும்?
 
பாருங்கள், மேலெழுந்த வாரியான ஆய்விலேயே எத்தனை எழுத்துகளைக் களைந்தாயிற்று!  சீர்திருத்தம் என்பது வெகு எலிமையானது, கொன்சம் சின்தித்துப் பார்த்தால் வரும்.
 
அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ரே உலகு
 
கர்ரதனால் ஆய பயனென்கொல் வாலரிவன்
னர்ரால் தொலார் எனின்
 
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ன்தார்
னிலமிசை னீடு வால்வார்
 
வேன்டுதல் வேன்டாமை இலானடி சேர்ன்தார்க்கு
யான்டும் இடும்பை இல
 
பொரிவாயில் ஐன்தவித்தான் பொய்தீர் ஒலுக்க
னெரி னின்ரார் னீடு வால்வார்
 
வல்லுவனைப் பார்த்தோம்.  அடுத்தது கம்பன் மீது ஒரு கை வைப்போம்.
 
"பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியாள் ஆகி
அஞ்சொல் இளமஞ்சை எனஅன்னம் எனமின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்"
 
அடடா, எப்படிப்பட்ட பாடல் இது.  பாவம் தமிழ்க் குலன்தைகல்.  இதைப் பாடம் படிக்க முடியாமல் எலுத முடியாமல் மன்டையை உடைத்துக் கொல்லுகிரார்கல்.
 
எனவே, திருத்திய தமிலெலுத்துகலில் இதை எலுதலாம்.
 
"பன்சிஒலிர் வின்சுகுலிர் பல்லவம் அனுன்க
சென்செவிய கன்சம்நிகர் சீரடியால் ஆகி
அன்சொல் இலமன்சை எனஅன்னம் எனமின்னும்
வன்சிஎன னன்சம்என வன்சமகல் வந்தால்"
 
கவினயம் கொன்சம் கூடக் குரையாமல்  (ஏரத்தால) அதே ஒலிப்புடன் கம்பரசம் பருக முடிகிரதல்லவா?
 
கொன்சம் சிலம்பை எட்டிப் பார்ப்போம்.
 
வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
 
இதைப் பாருங்கல், சின்னக் குலன்தைகலால் இதை எலுத முடியுமா?
 
வாலி எம் கொர்கை வேன்தே வாலி
தென்னம் பொருப்பின் தலைவ வாலி
செலிய வாலி தென்னவ வாலி
பலியொடு படராப் பன்சவ வாலி
 
பாருங்கல்.  இலன்கோவடிகலை னமது கவின்சர் வாலியைப் போல எலிதாகப் படிக்க முடிகிரதல்லவா?  என்ன எலுத்தில் எலுதினாலும் இப்படித்தான் படிக்கிரார்கல் என்னும்போது பேசுவது போல எலுதுவது தேவையான சீர்திருத்தமல்லவா?
 
இன்த  எடுத்துக் காட்டுகலில் உயிரெலுத்துச் சீர்திருத்தத்தைக் காட்டவில்லை.  அதர்குத் தேவையான கருவிகல் உருவான பின்னால் அதையும் செய்யலாம்.
 
காட்டாக, முதல் திருக்குரலை இப்படி எலுதலாம்:
அகர முதல அ‍ெலுத்தெல்லாம் அ‍ாதி
பகவன் முதர்ரே அ‍ுலகு 
 
எலுத்துச் சீர்திருத்தம் னம் இனத்தைக் காப்பார்ரத் தேவையானது.  காலத்தின் தேவை கருதி இதைச் செய்தால் னம்மிடம் இருக்கும் தேவையர்ர குப்பைகலைக் கலைய முடியும்,  னன்னூல் சொன்னது போல,
 
பலையன கலிதலும் புதியன புகுதலும்
வலுவல கால வகையினானே.
 
வால்க சீர்திருத்தம்.  வால்க தமில் மொலி.
 
:-((

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

அடடா மணிவண்ணன். கலக்கிப்பூட்டீங்களே இப்படி :)

மிகவும் ரசித்தேன்!

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

அன்புடையீர்,
சீர்திருத்தம் என்ற பெயரிலான சிதைவைப் புரிய வைத்துள்ளீர்கள். என்றாலும் விளையாட்டிற்குக் கூட இப்படிப்பட்ட கொலைகளைச் செய்வதை மனம் ஏற்க மறுக்கின்றது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அன்புடன் புகாரி,

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

மதிப்பிற்குரிய திருவள்ளுவனார்க்கு,

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். சீர்திருத்தம் என்பது சிறு குழந்தைகள் எளிதாகத் தமிழ் கற்பது என்று சொல்வது எவ்வளவு பிழையான கண்ணோட்டம் என்பதை எடுத்துக்காட்ட இதைக் கோளாறான எதையும் என்னால் கற்பனை செய்ய இயலவில்லை.

உகர, ஊகாரச் சிக்கல்களைவிட, ல-ழ-ள, ர-ற, ந-ண-ன வேறுபாடுகள்தாம் வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகளைக் குழப்புகின்றன. அதற்காக நாம் மொழியைச் சிதைப்போமா?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

எழுத்துச் சீர்மை குறித்த உங்கள் 'கோணல்' பார்வை சிலருடைய சிந்தனையை நேர்படுத்த வேண்டும்.

தேவையின்றி எ.சீர்மையை முன்னெடுப்பவர்கள் நீங்கள் சொல்லுவது போல..

"கொன்சம் சிந்திக்கட்டும். தமிலை அலிக்கும் வேலையை கைவிடட்டும்"

நன்றாக எழுதியுள்ளீர்கள். நல்ல நகைச்சுவை.

தொடருங்கள்.

மறைமலை இலக்குவனார் சொன்னது…

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை எனும் பழம்பாடலே நினைவுக்கு வருகிறது.சீர்திருத்தம் என்னும் கோணல் பார்வையைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு உடனே இத்தகைய செயல்கள் ஏற்கப்படா என அறிக்கை விடுத்தல் தேவை.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

திரு நற்குணன்,

சுவைத்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

பேரா. மறைமலை,

சீர்திருத்தத்தை ஆராய்பவர்கள் அதன் குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் வேண்டும். சீர்திருத்தம் மொழி வளர்ச்சிக்குத் துணை புரியும் என்ற வாதம் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட நிலைக்குத்தான் கொண்டு சேர்க்கும். சீர்திருத்த முயற்சி வெற்றி பெறாது என்று எண்ணிக் கொண்டு தமிழ் அறிஞர்கள் தம் கருத்தைப் பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது.

கருத்துக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பலையன கலிதலும் புதியன புகுதலும்
வலுவல கால வகையினானே.

வால்க சீர்திருத்தம். வால்க தமில் மொலி.

:-((//

இது அருமை.

ஒற்றைக் காலில் தமிழை மாற்றுவேன் என்று நிற்பவர்களை நாளை வரலாறு பழிக்கும், கூடவே தமிழும்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

கோவி. கண்ணன்,

எழுத்துச் சீரழிப்பு நடந்தால், உண்மை வரலாறே மறக்கப்படும். இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், வியட்நாமிலும், பழைய எழுத்துகளைப் படிக்கக் கூடியவர்கள் மிகக் குறைவு. பழையவை பெட்டிக்குள் அடங்கியுள்ளன. நம்மில் பலருக்கும் கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கத் தெரியாதே! "அறிஞர்" சொன்னதுதானே வேத வாக்கு? சிந்து சமவெளி மொழி யாருக்குப் புரிகிறது? தொடர்ச்சி இல்லையேல், தொன்மையும் இல்லை.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இந்திரா பார்த்தசாரதியின் டுவீட்:

>>>>>>>>>>
Eeepaa @murugumani விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள். செம்மொழி மாநாட்டில் தீர்மானம் போட்டு ஏற்றுக் கொண்டு விடப் போகிரார்கள்.
<<<<<<<<<<<<<<<<<

:-)). செய்தாலும் செய்யலாம்!

தமிழ் இலக்கணம் சொன்னது…

திரு மணிவண்ணன்,
புதுச்சேரியில் அரிமாமகிழ்கோ என்னும் மருத்துவ நண்பர் நெடுநாட்களாக நீங்கள் குறிப்பிட்டுள்ள உயிர் எழுத்துக்களின் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தி ஓரிரு பக்கங்களில் இதழே நடத்திவருகிறார். அவர் தமிழில் மருநதுச் சீட்டு கொடுத்த காரணத்திற்காக மருத்துவர் வேலையிலிருந்து திட்டமிட்டு அரசு மருத்துவர் பணியிலிருந்து நீக்கப் பெற்றவர். நல்ல தனித்தமிழ் அன்பர். எனக்குத் தெரிந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தைத் தன் இதழில் பயன்படுத்தி வருகிறார்.

அன்புடன்
ஆராதி

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

ஆராதி,

வருகைக்கும் செய்திக்கும் நன்றி. அகர வரிசையின் திருத்த எழுத்துகளை முன்னரே எங்கோ பார்த்திருக்கிறேன். இது போன்ற திருத்தங்கள் தொடர்ச்சியின் வலிமையை மறந்து விடுகின்றன. நேற்று மயிலை கபாலீச்சுரர் கோவில் திருச்சுற்றில் பொறித்துள்ள பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அவை 1978க்கு முந்தைய எழுத்துகளில் உள்ளவை. இன்றைய தமிழர்கள் பலருக்குத் தெரியாத எழுத்துகள் கொண்டவை. புதிய திருத்தங்கள் வந்தால், இது போன்ற கல்வெட்டுகள் நமக்கு அந்நிமாகி விடுகின்றன. 2500 ஆண்டுகள் தொடர்ச்சியுள்ள ஒரு பண்பாடு இருக்க வேண்டிய உச்சியில் இல்லாமல் 250 ஆண்டுக்குள் நாம் குறுகி விடுகிறோம். தொன்மையான மொழியின் 300 ஆண்டு தொடர்ச்சியைக் கூட நாம் குதறுவது கொடுமையிலும் கொடுமை.

K.S.Nagarajan சொன்னது…

:-)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

பேரா. இந்திரா பார்த்தசாரதி ”விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள். செம்மொழி மாநாட்டில் தீர்மானம் போட்டு ஏற்றுக் கொண்டு விடப் போகிறார்கள்” என்று எச்சரித்தார்! மாநாட்டு அமர்வில் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்று அறிஞர்கள் பலர் நிறுவியிருந்தும், சீரழிப்புப் பரிந்துரைகள் தொடர்கின்றன. ஏறத்தாழ, நான் கிண்டலாக எழுதியுள்ள முறை போலவே ஒரு பரிந்துரை வந்துள்ளது!

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இதன் தொடர்ச்சி:

http://kural.blogspot.com/2013/11/2.html