செவ்வாய், மார்ச் 02, 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
                                   
சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என்னும் தலைப்பிலமைந்த கருத்தரங்கம் மார்ச் 2, 2010, செவ்வாய்க்கிழமை மாலை 6-30 மணிக்கு நடந்தது.


[படம்: பேரா. மறைமலை, மணிவண்ணன், இராம.கி., இ. திருவள்ளுவன்]

கணிஞர் மணி மு.மணிவண்ணன் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமையுரையில் பேசியவற்றுள் சில:

“சீர்திருத்தம் என்பதை நாம் வெறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கருதிவிடக்கூடாது. பழமையைப் போற்றுவதாகவும் கருதிவிடக்கூடாது. காலத்தினால் மாற்றம் நிகழ்வது இயல்பே. ஆனால் அம்மாற்றம் படிப்படியாக, சிறிதுசிறிதாகவே ஏற்படும்.  தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளின் மாற்றநிலையைப் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

இப்போது சீர்திருத்தம் என்பவர்கள் உடனடியாக ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிழைகிறார்கள்.இம் மாற்றத்தினால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?

எழுத்துகள் குறைந்தால் கல்வி கற்கும் திறன் அதிகமாகும் என்னும் கூற்று உண்மையில்லை என்பதற்கு ஒரு சான்று கூறுகிறேன்.  தமிழ்நாட்டில் படிப்பறிவு 74%.தமிழைவிடக் குறியீடுகள் மிகுந்தும் தமிழில் இல்லாத கூட்டெழுத்துகள் நிறைந்தும் மொழி மலையாளம்.எனினும் தமிழ்நாட்டை விட அங்குப்படிப்பறிவு மிகுதி.(94%)

ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ள சீனம்,சப்பான் மொழியினரின் கல்வியறிவு சாலச் சிறந்துவிளங்கவில்லையா?
எனவே பொய்யான தகவல்களையும் பொருந்தாத கூற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுவிளங்கும் எழுத்துச்சீர்திருத்தக் கருத்துப்பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தமிழ் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய மொழி எனக் கருதிவிடக்கூடாது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா,  கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாற்றம் - எழுத்தமைப்பில் - ஏற்படுமாயின் அயல்நாட்டுத்தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் வேறுபாடு  தோன்றும். தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததைப்போல பல மொழிகள் மீண்டும் உருவாகும் சூழல் ஏற்படும்.

ஏனைய நாட்டுத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் என்ன கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னரே இத்தகைய செயல்களைப் பற்றிய சிந்தனைக்குச் செல்லவேண்டும்.”

பொறியாளர் இராமகி கூறியவற்றுள் சில:

நாக.இளங்கோவன் தகுந்த சான்றாதாரங்களுடன் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுவார் கூற்றின் பொருந்தாமையை விளக்கியுள்ளார்.அவற்றையே நான் இங்கு வலியுறுத்த விழைகிறேன்.

இ,ஈ,உ,ஊகாரக் குறியீடுகளை மாற்றினால் சென்னைப் பல்கலைப் பேரகராதியின்  59% சொற்கள் மாற்றம் பெற நேரலாம்.  கல்பாக்கம் சீனிவாசன் புள்ளிவிவரங்களின் படி இ-கர ஈகார, உகர ஊகாரக் குறியீடுகள் தமிழில் 24% சொற்களில் உள்ளன.  நான்கில் ஒரு சொல் மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம்.

இளைய தலைமுறையினர் இம்மாற்றங்களால் இன்று அச்சிலிருக்கும் பல நூல்களைப் புரிந்துகொள்ளாது இடர்ப்படுவர்.  பழைய பதிப்புகள் படிப்பாரற்றுப் போகும்.  இப்பதிப்புகளில் 90%க்கு மறுபதிப்பு வாராமல் போகலாம்.

மேலும் இன்றைய குறியீடுகளால் தமிழைப் படிப்பதற்குத் துன்பமாகவுள்ளது என யாரேனும் முறைப்படி ஆராய்ந்தார்களா? இவர்கள் பள்ளிகளுக்குப் போய்க் கணக்கெடுத்துவந்தார்களா?  எத்தகைய ஆய்வும் நிகழ்த்தாமல் இவர்களாக ஒரு முடிவுக்கு எப்படிவரலாம்?

சீன மொழியிலோ சப்பானிய மொழியிலோ ஆயிரக் கணக்கான குறியீடுகள் உள்ளன என்றாலும் அவர்களே பண்பாட்டுத் தொடர்ச்சி கருதி அவற்றை மாற்றுவது பற்றித் தயங்குகிறார்களே!" என்றார்.

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் இலக்கணநூல்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்.

“கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் எழுத்துகளின் வடிவங்களை விளக்குகிறது.  அதன்பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொல்காப்பியர் கால எழுத்துவடிவமுறை மாற்றம் பெறவில்லை என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.  இதன் பின்னர் வந்த இலக்கணநூல்களும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழில் எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறவில்லை என்பது புலனாகிறது.

கல்வெட்டு எழுத்து ஒரு சுருக்கெழுத்துப் போன்று தொழில்நுணுக்கமொழியே. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகள் மாற்றம் பெற்றதாகக் கூறல் தவறு.”

மூன்று உரையாளர்களும் மிகவும் நடுநிலையாக, யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசாமல், தகுந்த சான்றாதாரங்களுடன் உரை நிகழ்த்தியமை அவையோரின் கவனத்தை ஈர்த்தது.

துணைமுதல்வர் நூல்வெளியீட்டுவிழாவையும் மீறி ஐம்பது பேர் கூட்டத்திற்கு வந்திருந்தமை மகிழ்வளித்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பரவலாக இனி இது போன்ற கூட்டங்கள் நடக்கவிருப்பதன் முன்னோடியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம்.

3 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

எ.சீர்மையை மறுத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் நல்ல விழிப்பை ஏற்படுத்துவதற்கு வெள்ளோட்டமாக அமையட்டும்.

தங்களின் அரும் பணிக்கு தலைதாழ்த்திய வணக்கம்.

இப்படியான கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும். தமிழைச் சீரழிக்கும் எ.சீர்மை 'புறக்கதவு' திட்டத்தை முறியடிக்க தமிழறிஞர்கள் அணிதிரள வேண்டும்.

ஐயா.நாக.இளங்கோவன் 'நயனம்' வலைப்பதிவில் எழுதிவரும் ஆய்வுக் கட்டுரை நல்ல பக்கபலமாக இதற்கு உதவும் என நம்புகிறேன்.

நிகழ்ச்சியில் பிடிக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றால் நன்றாக இருக்குமே.

இயலுமாயின் படங்களை இணைக்கவும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

திரு. நற்குணன்,

மிக்க நன்றி. நீங்கள் விரும்பிய வண்ணம் ஒரு படத்தை இணைத்துள்ளேன்.

இது போன்ற கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகத்தமிழர் அரங்குகளில் எல்லாம் நிகழ வேண்டும். இது நமது மொழி. இதில் நம் எல்லோருக்கும் பங்குண்டு. நமது குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

செய்வோம்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களின் கருத்துரை

http://muelangovan.blogspot.com/2010/03/blog-post_21.html