புதன், ஜனவரி 12, 2011

குழந்தைகளை வேட்டையாடும் காமவெறியாளர்கள்

இன்று துளிர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எங்கள் அலுவலகத்தில் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன்.  எந்தெந்த அருவருப்பான காமக்குற்றங்களும், கொலை வெறியாட்டங்களும் இந்தியாவைப் போன்ற பழம்பெரும் நாட்டில் நடக்காது என்று பொதுவாக நாம் நினைக்கிறோமோ, அவை அனைத்துக்கும் இந்தியாவும் விலக்கல்ல என்று தெரிவிக்கிறது துளிர் அமைப்பு.

கற்பழிப்பு, காமக் களியாட்டம், போதைப் பொருள், துப்பாக்கி வன்முறை, போன்ற செய்திகள் அமெரிக்காவில் நடக்கும்போது, சி.என்.என். வழியாக உலகம் முழுதுமே தெரிந்து கொள்கிறது.  திருமதி காப்ரியெல் கிஃபோர்ட்ஸ் என்ற ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர், அரிசோனாவின் டூசான் நகரில் தன் தொகுதி வாக்காளர்களைச் சந்திக்க ஒரு காய்கறிக் கடைக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பைத்தியக்கார வெறியன் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றது அமெரிக்காவின் அரசியல் கட்சிகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது.  பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கியைக் கொண்டுவந்து தம் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுடுவது போன்ற செய்திகள் அமெரிக்காவின் வன்முறைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு தோற்றத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. 

அதே போல், சிறு குழந்தைகளைத் தவறான முறையில் சீண்டுதல், தகாத உறவு கொள்ளுதல், சிறு குழந்தைகளை ஆபாசமாகப் படம் பிடித்து வலையில் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற குற்றங்களுக்காக அமெரிக்கர்கள் கைதாகும் செய்திகளைப் படிக்கும் ஏனையோர், நல்ல வேளை இப்படிப் பட்ட கயவர்கள் எங்கள் நாட்டில் இல்லை என்று நினைத்துக் கொள்ளலாம்.  அண்மையில் அமெரிக்காவில் இப்படிப் பட்ட குற்றங்களுக்காகக் கைதானவர்களில் சிலர் இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் என்ற செய்திகளைக் கேட்டு, “பாருங்கள், நம் நாட்டில் நல்லவர்களாய் இருந்தவர்களைக் கூட அமெரிக்கா கெடுத்து விட்டது” என்று சொல்பவர்களைத் தமிழகத்தில் பார்த்திருக்கிறேன்.

துளிர் அமைப்பின் கூட்டத்தில், இப்படிக் குற்றமிழைத்தவர்கள் அமெரிக்கா சென்று கெடவில்லை, அவர்கள் இங்கேயும் அப்படிப் பற்ற குற்றங்களைச் செய்திருக்க வேண்டும், ஆனால், இந்தியாவில் சட்டங்களும், சமூக நிலையும் இப்படிப் பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் தண்டிப்பதற்கும் ஏற்றதாக இல்லாததால், இவர்கள் தப்பியிருக்க வேண்டும் என்று சொல்கிறது.  இதற்குச் சான்றாக, தமிழகத்தில் காமக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எத்தனை பேர் என்று நடத்திய கருத்துக் கணிப்பு பற்றி இந்த அமைப்பு சொல்லி வருகிறது.  அது தரும் புள்ளிவிவரங்கள் சிலவற்றைக் கீழே தருகிறேன்:.


இந்தியாவில் நிகழும் குழந்தை பாலியல் கொடுமை பற்றி சில புள்ளிவிவரங்கள் :
·                           2006-ஆம் ஆண்டு சென்னையில் 2211 பள்ளி செல்லும் சிறுவர்களிடையே துளிர்-CPHCSAவால் நிகழ்த்தப்பட்ட ஆய்வில், 42% குழந்தைகள் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. சமூகத்தின் எல்லா நிலையைச் சேர்ந்த குழந்தைகளும் (ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி) இக்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சிறுவர்களில் 48%தினரும் சிறுமியரில் 39%தினரும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர். அவர்களில் 15%தினர் கடுமையான கொடுமைக்கு ஆளாகியிருந்தனர்.
·                           1997-ஆம் ஆண்டு புதுடெல்லியில் சாக்ஷி என்ற அமைப்பு 350 பள்ளிச் சிறுமியரிடையே நடத்திய மதிப்பீட்டில் 63%தினர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. அவர்களில் 25% சிறுமியர் பலாத்காரம், அல்லது வாய்வழி உடலுறவுக்கு Oral Sex) உட்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
·                           1997-ஆம் ஆண்டு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் கோவாவைச் சேர்ந்த நடுத்தர மற்றும் உயர்மட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களிடையே RAHI -யால் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பங்கு கொண்டவர்களில் 76%தினர் குழந்தைகளாக இருக்கும்போது பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருந்தார்கள் என்பதும் அவர்களில் 71%தினர் நெருங்கிய உறவினர் அல்லது நம்பிக்கைக்குரிய நபரால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பதும் தெரியவந்தது.
·                           1996-ல் பெங்களூரில் சம்வாதா என்ற அமைப்பு மாணவர்களிடையே நடத்திய ஆய்வில் 47%தினர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. 62%தினர் ஒரு முறையாவது பலாத்காரப்படுத்தப்பட்டிருந்தாலும், 38%தினர் தொடர்ச்சியாக பாலியல் கொடுமையின் மூலம் துன்பத்தை அனுபவித்தார்கள் என்பதும் தெரியவந்தது.

அப்படியென்றால், இது நம் சமூகத்தில், நம் பண்பாட்டில் வெளியில் சொல்ல முடியாமல் மூடி மறைக்கப் படும் குற்றங்களாகத்தான் இருக்க வேண்டும்.  இந்தக் கொடுமைகளைப் பற்றிய மேலும் பல செய்திகளைத் துளிர் வலைத்தளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற இணைப்பில் தந்திருக்கிறார்கள். (http://www.tulir.org/tulir-tamil/faq.htm ).  இது தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி.  நாம் பார்க்கும் மக்களில் பாதிக்கு மேல் இப்படிப் பட்ட காமக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றால், அதைக் கண்டும் காணாமல் இருப்பவர்களும், காணத் தெரியாதவர்களும், இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் மேகன் சட்டம் (http://www.about-megans-law.com/ )  என்ற  சட்டம் இருப்பதால், உங்கள் வீட்டுக்கு அருகே இப்படிப் பட்ட காமக் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்று கண்டு பிடித்து உங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.  ஆனால், இந்தியாவில் இப்படிப் பட்ட சட்டங்களே இல்லை என்பதால், குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர்களும், அக்கம்பக்கத்தாரும், ஆசிரியர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பெரும்பாலும், குழந்தைகளை இப்படி வேட்டையாடுபவர்கள் குடும்பம், நண்பர்கள், பள்ளி வட்டங்களுக்குள் இருந்தே வருபவர்கள் என்பதால், இந்தக் கண்காணிப்பு செய்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அதே நேரத்தில் தவறாகச் சிலர் மீது குற்றம் சாட்டி விட்டால் அவர்கள் வாழ்க்கையையும் நாசப் படுத்தி விடக் கூடும்.   மக்மார்ட்டின் குழந்தைகள் பள்ளி வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஆசிரியர்கள் வாழ்வே நாசமாயிற்று என்பதும் நினைவிருக்கலாம்.  எனவே கண்காணிப்பவர்களும், காவல்துறையும் இதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

இது உலகமயமாக்கலால் தமிழகத்துக்கு வந்த நோயல்ல.  உலகமயமாக்கல்  தமிழகத்தில் ஏற்கனவே பல காலமாக இருந்து வந்திருக்கும் நோயைக் கண்டு பிடித்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க வழி வகுக்க வகை செய்கிறது.  துளிர் அமைப்பு பற்றிய செய்திகளை உங்கள் குடும்பங்கள், நண்பர்களிடம் பரப்புங்கள்.  நம் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு, நம் எல்லோருக்குமே இருக்கிறது.

3 கருத்துகள்:

அரசூரான் சொன்னது…

அருமையான பதிவு. இது போன்றவர்கள் நம் ஊரில் கிராமம் முதல் நகரம் வரை இருக்கின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு நிறைய வரவேண்டும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மிக்க நன்றி அரசூரான் அவர்களே. விழிப்புணர்வு கட்டாயம் தேவை. மேலும், மேகன் சட்டம் போன்ற ஒரு சட்டம் இங்கேயும் தேவை. அதே நேரத்தில் இதையும் அரசியல் ஆதாயத்துக்காகத் திரித்து அரசியல் எதிரிகளைக் காயப் படுத்தப் பயன்படுத்தினால் அப்படிப் பட்ட சட்டம் பயனற்றுப் போகலாம்.

அப்பாதுரை சொன்னது…

பூட்டி வைத்த பேய்.