முப்பது ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில் தமிழ்த் திருநாள்களுக்கெல்லாம் விடுமுறையும் இல்லை, அவற்றைப் பற்றி எண்ணிப் பார்க்க நேரமும் இருந்ததில்லை. கல்லூரித் தமிழ்ச் சங்கங்கள், பெருநகரத் தமிழ் மன்றங்கள் வார இறுதியில் சேர்ந்து செய்யும் கூட்டாஞ்சோறும் கொண்டாட்டமும் இல்லையென்றால் திருநாள்கள் வந்த சுவடு இல்லாமல் மறைந்து போகும். உறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் கொண்டாடிய திருநாள்களும் திருவிழாக்களும் சற்று நிழலாடும். தமிழக நேரப்படி உறவினர்களை அழைத்து வாழ்த்துச் சொல்லுவதும் ஆண்டுகள் பல உருண்டோடிய பின்னர் சற்றுச் செயற்கையாகத்தான் தோன்றும்.
அமெரிக்காவின் திருநாள் விடுமுறைகளன்று வீட்டில் கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை என்றாலும், வெளியே செலவழிப்பதற்கும், தொலைகாட்சிப் பெட்டிமுன் அமர்வதற்கும் ஏதாவது இருக்கும். புலம்பெயர்ந்தவர்கள் இழப்புகளில் திருநாள் கொண்டாட்டங்களும், ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து உறவாடும் நேரத்தில் உற்றார் உறவினரோடு கூடி மகிழ்தலும் மிகப் பெரிதானவை. இளைய தலைமுறைக்கு தமிழ்த் திருநாள்களைப் பற்றிச் சொன்னாலும் புரியாது. கரும்பும், பானையும், வெல்லமும், கோலமும், புத்தாடையும், மாவிலையும் ஊரும் உறவும் இல்லாத பொங்கலை எப்படி விவரிப்பது? ஆனால், சன் டிவியும், சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், தமிழ்மன்றக் கலைநிகழ்ச்சிகளும், கோலாட்டங்களும், நாட்டுப்புற நடனங்களும் வெற்றிடத்தை நிறைவு செய்யும். தமிழ்நாட்டில் நகரங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் பொங்கல் திருநாள் கொண்டாடுவதும் கிட்டத்தட்ட இந்த நிலைக்குத்தான் வந்திருக்கிறது என்றாலும், புலம்பெயர் பொங்கல் கொண்டாட்டத்தை விட இதில் சற்றுக் கூடுதல் நிறைவு இருக்கத்தான் செய்கிறது.
இன்று வழி நெடுக முழுக் கரும்புகளைப் பார்த்தேன். சென்னையில் மண்பானைகள் அவ்வளவாகத் தென்படவில்லை. எவர்சில்வர் பானைகள் விற்றுப் போய்க் கொண்டிருந்தன. நாட்டுப்புறத்தைப் போல் இல்லாமல் இருந்தாலும், சென்னையின் எல்லையை ஒட்டிக் கொண்டிருக்க்கும் கொட்டிவாக்கத்தில் தெருக்கள் விழாக்கோலம் பூண்டுகொண்டிருந்தன.
இது தமிழர் திருநாள் மட்டுமல்ல. நன்றி நவிலும் நாளும் கூட. இந்த அறுவடையால் பயனுறும் மக்கள் தங்கள் உணவுக்கும், அதை விளைத்த உழவர்களுக்கும், அவர்களுடைய மாடு கன்றுகளுக்கும், கதிரவனுக்கும், வேண்டிய அளவுக்குப் பெய்த மழைக்கும், நன்றி கூறும் நாள்.
புலம் திரும்பிய நான், தமிழக வாழ்க்கையில் மீட்டெடுத்தவற்றுள் பண்டிகை நாள்களும் ஒன்று. முப்பதாண்டுகள் வேறொரு பண்பாட்டில் வாழ்ந்து அதில் என்னை ஆழப் பிணைத்துக் கொண்ட பின்னர், தமிழக, இந்தியச் சூழலில் வாழ்வதில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான தடுமாற்றங்கள் இருக்கின்றன. பிறந்த மண்ணில் வாழ்ந்தாலும், பேசும் மொழி தமிழ்தான் என்றாலும், பண்பாட்டு இடைவெளி, தலைமுறை இடைவெளி இவை இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படிநிலை அமைப்பில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் சமுதாயம். இதில் செயலாற்றி வெற்றி பெறுவது எளிதல்ல. குறிப்பாகத் தமிழ்ச் சூழ்நிலையில், பொது நோக்கில் பின்புலத்தில் நின்று செயலாற்றி வெற்றி பெறுவதை விடத் தோல்வியில் பேரும் புகழையும் விரும்பும் பண்பாடு இங்கே மேலோங்கி இருக்கிறது. வெற்றியை விட வீரமரணத்தை உவந்து ஏற்கும் மறத்தமிழர் பண்பாடாயிற்றே!
இருப்பினும், ஊர் கூடித் தேர் இழுத்துத் தேரை நிலைக்குக் கொண்டு சேர்த்த பல வெற்றிகளை, சென்ற ஆண்டில் நடத்தி நிறைவேற்றிய சிலவற்றை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
யூனிக்கோடு குறியீடு பற்றி நடந்த பத்தாண்டுப் போராட்டம் ஒரு வழியாக முடிந்தது. இந்தப் போராட்டத்தைப் பற்றிப் பின்னொரு முறை, புண்கள் ஆறிய பின்னால், குழப்பவாதிகள் குறுக்கிடாமல் இருக்கும்போது, ஆர அமற எண்ணிப் பார்த்து எழுத வேண்டும். இது தமிழருக்குள் நடந்த உள்நாட்டுப் போர். சோழப் பெருவேந்தர்களுக்கும் சேரநாட்டுக்கும் நடந்த நூறாண்டுப் போருக்கு இது எதிலும் சளைத்ததல்ல. இந்தப் போரில் உத்தமம் அமைப்போடு வேறுபட்டிருந்த காரணத்தினால், செயற்குழுவில் இருந்து மாறுபடுவதைக் காட்டிலும் விலகி நின்று எதிர்ப்பதே மேல் என்று 2003 இறுதியில் விலகினேன். 2007ல் மவுன்டன் வியூ கூகிள் வளாகத்தில் நடந்த யூனிக்கோடு நுட்பக் குழு கூட்டத்தில் பேரா. பொன்னவைக்கோ தலைமையில் TACE-16 குறியீட்டுக்கு இட ஒதுக்கீடு பற்றி வாதாடினேன். எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி யூனிக்கோடு தென்னாசியக் குழு TACE-16 குறியீடு பற்றித் துறை வல்லுநர்களோடு பேச 2008ல் சென்னைக்கு வந்தது. 2009ல் உத்தமம் அமைப்பு தமிழக அரசுக்கு யூனிக்கோடு குறியீட்டை அரசுத்தரமாக ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்தது. இதற்கு உத்தமம் அமைப்பின் பொதுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் 2010ல் உத்தமம் அமைப்பில் மீண்டும் இணைந்தேன்.
இழுபறி நிலையில் இருந்து வந்த இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண யூனிக்கோடு அணியின் தலைவர் முரசு அஞ்சல் முத்து நெடுமாறன் என்னுடன் தொடர்பு கொண்டு பதிப்புத் துறையின் தீர்வுகளுக்காக TACE-16 குறியீட்டையும் இணைத்தரமாக ஏற்றுக் கொள்வது பற்றிப் பேசி, TACE-16 அணியின் தலைவர் காட்கிராஃப் இளங்கோவனோடு இணைந்து உடன்படிக்கை ஒன்றுக்கு வழிவகுத்தார். இது தமிழ் இணையம் 2010ல் யூனிக்கோடும், TACE-16 குறியீடும் தமிழக அரசின் தரங்களாக அறிவிப்பதற்கு வழி வகுத்தது. இதற்கு நான் முத்துவுக்கும், இளங்கோவுக்கும், இது நிறைவேறப் பின்னணியில் இருந்து கடுமையாக உழைத்த எண்ணற்ற பலருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த உடன்படிக்கையை ஏற்று அரசுக்குப் பரிந்துரை அனுப்பிய பேரா. ஆனந்தகிருஷ்ணன் குழுவில் பரிந்துரை வரைவு செய்த குழுவினரின் படம் கீழே:
யூனிகோடு துணைக்குழு - (இ-வ) ”பொன்விழி” பேரா. கிருஷ்ணமூர்த்தி, ”பழனியப்பா பிரதர்ஸ்” செல்லப்பன், முனைவர் நக்கீரன், ”காட்கிராஃப்” இளங்கோவன், தி.ந.ச. வெங்கடரங்கன், மணி மு. மணிவண்ணன் |
இப்படி அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்நாட்டுத் தரத்தின் படி, தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்துக்கும், இணையத்தில் தமிழ் புழங்கும் அனைவருக்கும், ஏற்ற எழுத்துருக்கள், விசைப்பலகைகள், குறிமாற்றிகள் அனைத்தையும் இலவசமாக அமைத்துத் தருவதற்கு தமிழக அரசே ஏற்பாடு செய்கிறது. இந்த மென்கலன்களை உருவாக்குவதற்கான விதிமுறைகளையும் வழிவகுத்து இவற்றைப் படைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழக அரசு ஒரு பணிக்குழுவை நியமித்தது. அதன் உறுப்பினர்களில் சிலரின் படத்தைக் கீழே காணலாம்:
தமிழ் யூனிக்கோடு மென்கலன் பணிக்குழு (இ-வ). மணி மு. மணிவண்ணன், சி-டாக் சீனிவாசன், செல்லப்பன், பேரா. நக்கீரன். (என்.ஐ.சி.யின் பிரின்ஸ் இதில் இல்லை) |
ஏற்கனவே தமிழ் யூனிக்கோடு தரத்துக்குப் பல எழுத்துருக்களும், விசைப்பலகைகளும் இருந்த போதிலும் ஏன் தமிழக அரசு வீணாக இதற்குப் பணம் செலவழிக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். தமிழக அரசு அறிவித்திருக்கும் யூனிக்கோடு தரம், இப்போது இருக்கும் யூனிக்கோடு குறியீட்டில் இருக்கும் சில சிக்கல்களுக்குத் தீர்வு காணுகிறது. தற்போது இருக்கும் மென்கலன்கள் இந்தத் திருத்திய தரத்துக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். மேலும், அரசு இலவசமாக வழங்கும் எழுத்துருக்கள் கணினிக் கிருமிகள் புக வாய்ப்பு இல்லாதபடி அரசின் எண்ணிம முத்திரையோடு (Government's digitally signed fonts) அமைய வேண்டும். கூடுதலாக, அரசின் ஏற்போடு படைக்கப் படும் எழுத்துருக்கள் அதன் எல்லாத் தேவைகளையும் நிரப்பும் உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும். இந்த அனைத்துத் தேவைகளையும் நிரப்பும் பொறுப்பை வென்ற அமைப்புகளின் சார்பாளர்களின் படம் கீழே:
இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நான்கு நிறுவனங்களும் தமிழ் மென்கலன் பயனர்களுக்கு நன்கு அறிமுகமானவை. அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.
பழைய கல்லூரி மாணவர்கள் கூடுவது என்பது அடிக்கடி நடக்கக் கூடியதுதான் என்றாலும், என்ன காரணத்தாலோ, 1978ல் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற நானும் என் வகுப்புத் தோழர்களும் கடந்த 32 ஆண்டுகளாகச் சந்திக்கவே இல்லை! தற்செயலாகச் சில தோழர்கள் 2010ன் தொடக்கத்தில் நாம் பழைய தோழர்களைக் கண்டுபிடித்துக் கூடுவதற்கு ஏற்பாடு செய்தால் என்ன என்று பேசத் தொடங்க, இணையம் வழியாகப் பலரைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். என்னையும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் பழைய வலைப்பக்கம் ஒன்றில் கண்ட படத்தில் இருந்து அடையாளம் கண்டு தொடர்பு கொண்டார்கள். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி தற்போது சென்னையில் வாழ்வது தெரிந்ததும், என்னையும் கூடல் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணித்தார்கள்.
நல்ல வேளையாகப் பணிக்குழுவில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் என்னை விடத் திறமைசாலிகள். சென்னையில் இப்படிப்பட்ட கூடல் நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இராமனுக்குப் பாலம் அமைக்கத் துணை சென்ற அணிலைப் போல நானும் அவர்களுக்குச் சிறிது உதவி செய்தேன் என்று நம்புகிறேன்! பழைய மாணவர்கள் 120 பேரில் 55 பேர் உலகெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். ஓய்வு பெற்றிருந்த எங்கள் ஆசிரியர்களில் பலரையும் மீண்டும் அழைத்து வந்து சால்வை போர்த்திப் பெருமைப் படுத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்கள். நிகழ்ச்சியின் படம் ஒன்று கீழே:
அ.செ.தொ.நு.கல்லூரி ‘78 மாணவர்கள் ஆசிரியர்களைப் போற்றும் விழா |
எங்கள் ஆசிரியர்களை மீண்டும் பார்த்துப் போற்றும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. 32 ஆண்டுகளுக்குப் பின்னால் எங்களை அவர்களுக்கு அடையாளம் தெரிவதே பெரிய செய்தி. சொல்லப் போனால் எங்கள் தோழர்களில் பலரையே எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அடையாளம் தெரிந்த பின்பு, 32 ஆண்டு இடைவெளியே இல்லாதது போலப் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். அதே அரட்டை. கவிஞர் கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை எல்லோரையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். விடிய விடிய உலகின் சிக்கல்களுக்குத் தீர்வு காண முயன்றோம். அன்று இருந்தது போல் இன்றும் உலகை மாற்ற எங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருந்தோம். அன்று எங்களுக்கு வாழ்க்கைக்கு ஏராளமாக நேரம் இருந்தது. இன்று வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள். ஓரிரு நாள்களுக்கு அலுவல், குடும்பம், ஏனைய பணிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டுப் பழைய தோழர்களோடு இன்னும் வாழ்க்கையைத் தொடங்காத இளைஞர்கள் போலக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. ஆண்டு முழுதும் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி நொடியில் பறந்து போய் விட்டது போல் இருந்தாலும், உள்ளம் நிறைவாக இருக்கிறது. எனது தோழர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.
ஊர் கூடித் தேர் இழுக்கும் பணியில் கயிறு நம்மைப் புண்படுத்தலாம். நாம் மிதி படலாம். தேர்ச்சக்கரம் நம்மை உரசலாம். ஆனால் வீதியெல்லாம் தேர் ஓடி நிலையில் சேரும்போது ஒரு நிறைவு இருக்கிறதே, அதில் பட்ட புண்கள் எல்லாம் மறந்து விடும். சோர்வு எல்லாம் நீங்கி விடும். மீண்டும் அடுத்த திருவிழா எப்போது என்று தேர் இழுக்க மனம் நாடும். அந்த நிறைவுக்காக இப்போது உடலிலும் உள்ளத்திலும் ரணமாக இருந்தாலும், இன்னொரு தேர் இழுத்துக் கொண்டிருக்கிறேன். :-). அது பற்றி இன்னொரு முறை...எழுதலாம் என்று எண்ணம்.... பார்ப்போம்.
நிறைவாக, இந்த ஆண்டு பொங்கல் வாரத்துத் தமிழ்மணத் தாரகையாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் அமைப்புக் குழுவுக்கும், தமிழ்மணம் சுட்டியிலிருந்து எனது வலைப்பூவுக்கு வந்து எனது கருத்துகளைப் படித்து என்னோடு கருத்தாடும் புதிய வாசகர்களுக்கும் எனது நன்றிகள் பல. உங்கள் அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகள். வரும் ஆண்டு உங்களுக்கும் நிறைவாக இருக்கட்டும்.
1 கருத்து:
பொங்கல்,புத்தாண்டு வாழ்த்துகள்
கருத்துரையிடுக