வெப்லாக் என்ற பிலாக் தொழில்நுட்பம் தமிழுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது அதைத் தமிழில் எப்படி அழைப்பது என்று காரசாரமாக ஒரு அலசல் நடந்து கொண்டிருந்தது. வெப்லாக் (weblog) என்பது ஆங்கில இலக்கணப் படி வந்த ஒரு முழு சொல். பிலாக் (Blog) அப்படியல்ல. அது அமெரிக்க வழக்கப் படி வரும் ஒரு குறும்புச் சொல். விளையாட்டுப் போக்காகச் சொற்களை உருவாக்கும் இயல்பு அது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சுவோமே அது போல. ஒரு நுட்பத்துக்கு நாம் இப்படி ஒரு கொஞ்சுமொழியில் பெயர் வைத்தால் அது நம்மை மிரட்டுவதில்லை. நாம் அதை எடுத்துத் தாலாட்டிப் பேணி வளர்க்கத் தொடங்கி விடுகிறோம். இதற்குத் தமிழில் பெயர் சூட்ட வந்தவர்கள் பொருத்தமாக வலைப்பதிவு என்றே பெயர் சூட்டினார்கள். அதுவே பெரிதும் நிலைத்தும் நிற்கிறது.
ஆனால், எனக்கென்னவோ, வலைப்பதிவு என்பது வெப்லாக் என்பதற்கு இணையான சொல் என்றும் பிலாக் என்பதற்குக் குறும்பான பெயரைத் தமிழில் சூட்ட வேண்டும் என்று தோன்றியது. ராயர் காப்பி கிளப் என்ற மடலாடற்குழுவில் மாலன் கேட்ட கேள்விக்கு மே 15, 2003 அன்று நான் அளித்த பதில் (http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994)
Re: [RKK] Peyar soota vaarungkal
மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,
தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
t 5/14/03 08:56 PM, you wrote:
>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து
>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை
>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,
>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"
பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.
எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.
ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
என்று எழுதியிருந்தேன். ஆனால், நாக கணேசன் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல,
வலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று.
இன்று பதிவர்கள், பதிவுகள் என்ற சொற்கள் பரவலாக இருந்தாலும், வலைப்பூ என்ற சொல் மறையவில்லை.
முத்துவுக்கு இணையம், கணினி என்ற சொற்களைப் போல் வலைப்பூ என்ற சொல் பிடித்திருந்தது. ஒரு கலைச்சொல்லை மொழிபெயர்பதற்கும், ஒரு சொல்லுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது என்றார் முத்து. (There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil. )
சிங்கப்பூர் கல்வித்துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தமிழ்க் கல்விக்கான புதுத் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் பேச ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவர் blogs, podcasts, video-podcasts, என்ற கலைச்சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களைத் தேடிக் கொண்டிருந்தார்.
blog என்பதற்கு வலைப்பூ என்ற தனக்கு மிகவும் பிடித்த சொல்லைப் புழங்கப் போவதாகச் சொன்னவர் podcasts and video-podcasts என்ற சொற்களுக்கு ஏற்ற கலைச்சொற்களைப் பரிந்துரைக்கக் கேட்டுக் கொண்டார்.
நான் அவருக்கு எழுதினேன்:
Podcast is defined as "a digital recording of a radio broadcast or similar program, made available on the Internet for downloading to a personal audio player."
பாதம், பொதி என்ற சொற்களைப் பற்றிச் சிந்தித்தேன். ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு பொதியொலிபரப்பு ( packetized audio) பொருந்துமோ என்று எண்ணிப் பின் கைவிட்டேன்.
I settled on the following as direct, simple and in line with familiar words that convey the meaning to people that are not familiar with the term or the concept.
ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொலிபரப்பு அல்லது வலையொலி என்பது பொருந்தும் (வானொலி, ஒலிபரப்பு என்ற பழக்கப் பட்ட சொற்களோடு ஒப்பிட்டு இவற்றையும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.)
அதே போல், வீடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொளிபரப்பு அல்லது வலைக்காட்சி பொருந்தும். (தொலைக்காட்சி, ஒளிபரப்பு போன்ற சொற்களிலிருந்து கிளைத்தவை இவை).
முடிவாக
audio podcast = ஆடியோ பாட்காஸ்ட் = வலையொலி
video podcast = வீடியோ பாட்காஸ்ட் = வலைக்காட்சி
என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.
இவை சரிநிகரான தொழில்நுட்பக் கலைசொற்களாக இல்லாமலிருந்தாலும், அன்றாடப் புழக்கத்துக்கு உகந்த சொற்கள் என்பது என் எண்ணம்.
நண்பர் முத்துவுக்கு இந்தச் சொற்கள் மிகவும் பிடித்திருந்தன. அவர்
"வலையொலி and வலைக்காட்சி are brilliant. It hits the meaning and has a precedence. I love these terms. Let's use them wherever we can - and hope they gain acceptance like இணையம் and வலைப்பூ did."என்று விடையளித்தார்.
ஆனால், இந்தச் சொற்களைப் பன்மையில் எப்படி எழுதுவீர்கள் எனக் கேட்டார்.
வானொலி, தொலைக்காட்சி இவற்றை நாம் பன்மையில் எப்படி எழுதுகிறோம்? வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எழுதலாம். வானொலி/தொலைக்காட்சி நிலையங்கள் என்பவை ஒலி/ஒளிபரப்பு நிலையங்களைக் குறிப்பன.
வலையொலிபரப்புகள், வலையொளிபரப்புகள் என்பவை பன்மைச் சொற்களாக அமையலாம். எனினும், வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்கள் சுருக்கமானவை. தமிழிலும்கூட சுருக்கமான சொற்கள் எளிதாகப் புழக்கத்துக்கு வந்து விடுவதை அண்மைக் காலத்தில் காணலாம்.
எனவே வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.
இணையம் என்ற சொல் தமிழ்.நெட் தொடக்க காலத்தில் மலேசியத் தமிழ் இதழாசிரியர் கோமகன் அவர்கள் உருவாக்கிய சொல். இணையம், இன்டர்நெட் (Internet) என்பதற்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்ற பொருள்பட இணையம் என்று அழைக்கலாம் என்றார். கலைச்சொல்லிலும் கவிநயம் பார்க்கும் தமிழ் இதயங்களுக்கு இந்தச் சொல் மிகவும் பிடித்திருந்தது.
இணையம் என்பது இன்டர்நெட் (Internet) மட்டுமே. Web அல்லது Net அல்ல. இணையத் தொலைக்காட்சி என்பது பொருந்தாது.
இணையம் என்ற சொல்லாட்சி தமிழ்.நெட்டில் தொடங்கித் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் புழங்குவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சொல்லாக்கம், ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிந்து கொண்டு, உள்வாங்கி, நம் உள்ளத்திலிருந்து எடுத்து நம் மொழியில் நம் வழியில் புதிய கருத்தைக் கூறும் தன்மையைத் தமிழர்கள் எய்திவிட்டார்கள் என்பதற்கு அடையாளம். அப்படிப் பட்ட சொற்கள் இரவற் சொற்களைவிட வலிமையானவை. ஆங்கிலச் சொற்களோடு ஒலியொப்புமை கருதி உருவாக்கும் சொற்களைவிட ஆழமானவை.
A word like that demonstrates to me that we Tamils have absorbed a new invention, taken it to our heart and start to identify it with our original expression. Such coinages have power and they resonate better than a bland translation or a word that mimics the English sound.
இதற்கு முத்து எழுதினார்:
Dear Mani,
There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil.
Almost all people I've come in contact are quick to do the former. That's because, the second requires effort, skill, passion and the desire to propagate the usage of not only the name but also what it represents. Giving something a name is like branding. We need to think outside the box - something marketing people are trained to do :)
As you pointed out once, the names that came into existence with an original 'value' had successful imprints and had a direct impact on people. இணையம் is a classic example. When Tamils talk about இணையம், our minds don't translate the work to Internet or Web! It's just இணையம்! .... and the this word gets surrounded by different set of thoughts, action and content than the words like Internet or Web. (like to hear your thoughts on this!)
We don't need all words to have this impact -- we don't have sufficient material in our community to create or even desire for this impact :). However, words that prompt actions - like blogs, podcasts etc will be great if they have a name from a Tamil 'angle'. 'Angle' as it's used in PR :)
The names you gave for blog and podcasts are far better and has the values we desire in Tamil names :). For me, when I think வலைப்பூ or வலையொலி, different actions get trigged in my mind instead of resolving a pointer to blog or podcast. In programming talk, these words are no longer pointers but a different object inherited from the same base class -- hope I'm communicating this right.
While on this, I just completed the new generation of Sellinam - to be launched in this region free to all mobile subscribers. A large multinational has come forward to sponsor the service
I took your advice. It will have a complete menu navigation in Tamil. I took the liberty to coin some Tamil names -- and put it to test among the Indian expats who are working at shipyards and construction sites -- their only language is Tamil.
Some examples are: வந்தவை (Inbox), சென்றவை (Sent Items), செல்பவை (Outgoing), கோர்த்தவை (Drafts). Likewise, I thought through the 'status' messages purely from these users 'angle' instead of trying to impress them with a 'translation'. I'll send you the screen shorts later. Initial feed back -- they knew exactly what these words mean even without someone having to explain!
This subject is close to my heart -- thus the long email :)
anbudan,
~ MUTHU
முத்து தன் கருத்தரங்குக் கட்டுரையில்
வலைப்பூ, வலையொலி, வலைக்காட்சி
வலைப்பூக்கள், வலையொலிகள், வலைக்காட்சிகள்
என்ற சொற்களைப் புழங்கினார். சிங்கைத் தமிழாசிரியர்களிடையே இந்தச் சொல்லாக்கங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இதே போல் தமிழில் டொமெய்ன் (domain) என்பதற்குக் கொற்றம் என்ற சொல்லைப் பரிந்துரைத்தபோது மின் தமிழ் மடலாடற்குழுவில் ஒரு நல்ல அலசல் நிகழ்ந்தது. (பார்க்க: http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/2426db23d511633f?fwc=1&pli=1 )
ஆனால் இன்னொரு முறை தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வேறு ஒரு சொல்லைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம்.
இன்று ஒரு புதிய வலைச்சொல் கண்டேன்.
Bleg = A blog where one asks for donations; a cross between blog and beg.
இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
வலைப்பிச்சை
எனலாமா? மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை போல இந்தச் சொல்லும் வழக்கில் வரலாம்.
அல்லது ஆங்கிலச் சொல்லைப் போல, பிச்சை என்பதை அப்பட்டமாகச் சொல்லாமல்
வலைச்சை அல்லது வலைப்பூச்சை
என்று பூடகமாகச் சொல்லலாமா?
அல்லது இதற்கு ஏற்கனவே தக்க சொல் புழக்கத்தில் இருக்கிறதா?
நண்பர்களே, என்ன நினைக்கிறீர்கள்?
என்று கேட்டிருந்தேன். நண்பர் நியூ மெக்சிக்கோ வாசன் நல்ல பல சொற்களைப் பரிந்துரைத்திருந்தார். ஆனால், வலைப்பூ போன்ற இடுகுறிப் பெயர்கள் தமிழின் தன்மையச் சிதைப்பவை என்ற எண்ணம் கொண்ட நண்பர் நாக இளங்கோவனுக்குப் பொறுக்கவில்லை. நகைச்சுவையுடன் அவர், பிச்சை எடு என்பதற்குப் பகராகப் பிச்சை கொடு என்ற எண்ணம் தொனிக்க ஈதல் என்ற அடிப்படையில் “ஈவலை” என்று பெயரிடலாமே என விடையளித்தார். அதற்கு நான்
அன்பின் இளங்கோவன்,என்று விடையளித்தேன். நண்பர் இளங்கோவன், ஏன் வலைப்பூ என்ற சொல் தக்கதல்ல என்பதற்கான வாதங்களை முன் வைத்தார்.
:-). "ஈவலை" என்பது "கொசு வலை" போல் ஈயைப் பிடிக்கும் வலை என்று தவறாகக் கொள்ள நேரிடலாம். நகைச்சுவை உணர்வுள்ள சொல் "ஈவலை" என்று வாசன் மகிழ்வார்!
blog என்ற சொல்லே அமெரிக்கர்களின் மொழியியல்பிலிருந்து பிறந்த குறுஞ்சொல். bleg என்பது மேலும் நகைச்சுவை கொண்ட சொல். begging blog என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் ஆனால், begging என்பதை மட்டம் தட்டவில்லை. நல்ல செயலுக்குப் பிச்சை எடுக்கலாம், இல்லையா? பௌத்த, சமணத் துறவிகள் பிச்சையெடுத்து உண்ணும் நோன்பு நோற்கவில்லையா? இது போன்ற சொற்களைத் தமிழில் ஆக்கும்போது மொழி பெயர்ப்பதைவிடக் கருத்தை உள்வாங்கி தமிழின் தன்மைக்கேற்ப சொற்களைப் படைப்பது நல்லது என்பது என் கருத்து. வலைப்பூ அப்படி எழுந்த சொல்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல!
அன்பின் மணிவண்னன்,
நண்பர் வாசனுக்கு மட்டும்தானா? எனக்கும்
ஈவலை என்றால் சிரிப்புதான் வருகிறது :-)
ஓரெழுத்துச் சொல்லான பூவைத் தூக்கிப் பின்னால்
வைக்கிறீங்க. ஆனால் ஈ யைத் தூக்கி முன்னாடி
வைச்சா எல்லாம் சிரிக்கிறீங்க. சிரிக்கிறமாதிரி ஒரு பெயர் இருக்கட்டுமே :-) (அதுவும் ஒரு பொருளோடு இருக்கிறது; )
பூ என்பதனைப் பலரும் வெகுவாகப் பயன்படுத்தும்
போதெல்லாம் உங்கள் நினைவு வரும் எனக்கு. மகிழ்ச்சியும் வரும்.
ஆனால் பாருங்கள், பூ என்று வைக்கப் போய், அதுவே தற்போது வேர்ச் சொல் போல் ஆகி, பிச்சையோடு புணர்ந்து/கலந்து பூச்சை ஆகிறது.
இதுவே, பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்
Web என்ற இந்த மிடையத்திற்கு நிறைய பொருள் பொதிந்த
வேர்ச்சொற்கள் தேவை என்று காட்டுகிறது.
அதே நேரத்தில் நவ பெயர்களான பூ போன்றவற்றில் எனக்கு
மனத்தாங்கல் இல்லை; bleg என்பதற்கு ஒரு நவப்பெயர் சூட்டலாம்; அது வலைப்பூ போன்று நவமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.ஆனால், பூவையும் பிச்சையையும் கலப்பது பொருள் சேர் உத்தி நவ உத்தி என்ற இரண்டு உத்திகளையும் கலந்து விடுவது போல இருக்கிறது. அதுதான் எனக்கு யோசனை :-))
அன்புடன்
நாக.இளங்கோவன்கலைச்சொல் பற்றிய வாதங்கள் காரசாரமாய் முட்டி மோதிக் கொள்வது போல் இல்லாமல் நகைச்சுவையாய் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்த இந்தத் தொடரை எனது பின் வரும் வினாவோடு நிறைவு செய்தேன்.
நண்பர் ஈளங்கோவன் ;-)
வெகுநாட்களாக எனக்குள் ஓர் ஐயம்.
ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.
மூத்த மொழி என்பதால் தமிழ் இறுகி உறைந்து விட்டதோ?
தொன்மையும் தொடர்ச்சியும் வேண்டுவதால், அதற்கு இளகத் தெரியாதோ? தமிழில் விளையாட்டாகப் பேச முடியாதோ?
சரியோ தவறோ, அமெரிக்க ஆங்கிலச் சொல்லாக்கங்களைப் பாருங்கள். அதில் ஒரு விளையாட்டுத் தன்மை தெரியும். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புத்தம் புதுச் சொற்கள் பல எழும். விழும். குழூஉக்குறிகள் வரும். போம். நல்ல படைப்பாளியின் கையில் இவற்றில் சில சாகா வரம் பெற்று நிலைத்து நிற்கலாம்.
எம்.டி.வி.யிலும், எஸ்.எம்.எஸ்.இலும், சொற்கள் சிதைந்து, அழிந்து,
கலந்து, குழம்பிப் பாகாகித் திரண்டு மீண்டும் மீண்டும் எழும், விழும்.
weblog வலைப்பதிவுதான். weblog எப்படி blog ஆகிற்று? weblogger என்ற
சொல் இல்லை, ஆனால் blogger வழக்கில் ஓங்கி நிற்கிறது.
blog -இலிருந்து bleg கிளைக்கிறது.
வேறு எந்த மொழியில் இது போன்ற சிதைவுகள் சொற்களாகும்?
செம்மொழிகள் உறைந்து போனவை என்பதால் இவை போன்ற ஒயிற் சொற்களைப் பிறமொழிகளிலிருந்து இரவல் வாங்க வேண்டியிருக்கிறதோ?
பாருங்களேன். உங்களுக்கு வலைப்பூ என்பது ஈவலைபோல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. வலைச்சை என்பதெல்லாம் தமிழில் எடுபடாது என்று தோன்றுகிறது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ என்பதையெல்லாம் டப் டப் டப் என்று சொல்லாடுவது போல் தமிழில் ஆடினால் ஔவைப்பாட்டிக்கு மினி ஸ்கர்ட் போடுவது போல் நகைப்புக்கிடமளிக்கிறதோ?
முந்திப் பிறந்தவள் செந்தமிழன்னைக்கு மூப்பு தட்டி விட்டதோ?
வினாவுடன்,
மணி மு. மணிவண்ணன்வேறு மொழிகளில் கலைச்சொற்களை அன்றாடம் படைக்கிறார்கள். எங்கள் தொழிலில் மென் கலன்களைப் பிறமொழியில் மொழி பெயர்ப்பதற்குக் கொடுக்கும் நேரம் வெகு குறைவு. அதற்குள் இருக்கும் சொல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் கலைச்சொல்லைப் படைக்க வேண்டும். அந்தத் தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு பொறுமையோ, அக்கறையோ இருக்காது. அது தொழில் மட்டுமே.
டுவிட்டருக்குக்கும், ஃபேஸ்புக்குக்கும், கூகிளுக்கும், மைக்ரோசாஃப்டுக்கும் தமிழ்க் கலைச்சொற்கள் என்பவை வணிகத்துக்குத் தேவையானவை. அவ்வளவே. அவர்கள் கொச்சையாக, பச்சையாக இல்லாத எதைத் தேர்ந்தெடுத்தாலும், அவையே வழக்கில் வரும் வாய்ப்பு உள்ளது.
முன்னர் போல் இல்லாமல், தற்போதெல்லாம், தொழில்நுட்பங்கள் தமிழுக்குப் பரவுவதற்கு அவ்வளவு நேரம் பிடிப்பது இல்லை. கலைச்சொற்களைப் படைப்பதில் தமிழர்களுக்குள் வாக்குவாதம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால், வணிக நிறுவனங்கள் எதையாவது முதலில் செய்வோம் என்று போடத் தொடங்குவார்கள். அதை சன் டிவி, ரெட் ஜயண்ட் மூவீஸ், என்பது போல பெரிய இயக்கப் பின்னணியில் உள்ளவர்களோடு இணைந்து போட்டால் எதிர்ப்புகளைக் கட்டுப் படுத்தி விடலாம் என்பதும் ஊரறிந்த ரகசியம். இல்லாவிட்டால் நுணுக்குமென்மையும் அளிநட்பேயும் வந்து நின்று வணிக நிறுவனங்களை மிரட்டலாம்!
தமிழ் மரபையும் விட்டுவிடக்கூடாது. அதே நேரத்தில் ஒயிலான, தற்காலப் பெயர்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும். இதற்கு ஒரே வழி ஆங்கிலப் பெயர்களை அப்படியே ஏற்பதுதானா?
இது ஔவைப் பாட்டி மினி ஸ்கர்ட் போடுவது போலவா? அல்லது என்றும் இளமையாய் இருக்கும் தமிழால் இதையும் தாங்க முடியுமா?
7 கருத்துகள்:
தமிழில் பெயர்ப்பதற்குகும் புதுக்கலைச்சொல் சேர்ப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு; உங்கள் நண்பர் கருத்தில் எனக்கும் உடன்பாடு. தமிழில் கலைச்சொற்களைச் சேர்ப்பவர்கள் அதிகமாக இல்லை. (சமீபத்தில் நண்பவர் ஜவஹர் தன் பதிவில் தினமணியோ வேறு ஏதோ பத்திரிகையோ Draft Voters’ List’ என்பதை ’வரைவு வாக்காளர் பட்டியல்’ என்று வெளியிட்டிருந்தார்களாம்..)
அண்ணா, மிகவும் சந்தோசம். இணையத்தில் தமிழில் அதிகம் புழங்குபவன் என்ற முறையில் முதலில் ஒரு சபாஷ் ! (தமிழ்ச்சொல் எங்கேன்னு கேக்காதீங்க ). நான் பார்த்த வரை வலைப்பூ தான் பிளாக் எனறு இன்றும் நாங்கள் கொண்டாடுகிறோம். ப்லொக்கர்ஸ் என்கிற போது அது வலைப்பதிவர்கள் என்று எடுத்துகொள்கிறோம். ஆனல (வலை)பதிவு என்பது ஒரு போஸ்ட் என்பதை மட்டும் குறிக்கப் பயன்படுகிறது.. “ எனது நேற்றைய பதிவை படித்தாயா” என்பது போன்று. ஆக 90% வலைப்பூக்கள் தான் பூக்கின்றன இங்கே ! !
Lovely writeup.. informative and very nice .. thanks for the link OSai Chella! Thanks n regards!!
Cheers
PRiya
Informative and useful for Tamil. I am a first time visitor to your blog and interested to read all your posting.
Thanks you Sir and Chella for giving link in FB
@அப்பாதுரை,
கருத்துக்கு நன்றி. “வரைவு” என்ற சொல் draft என்பதற்கு இணையான கலைச்சொல்லாகப் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் புழங்கி வருகிறார்கள். என் பள்ளி நாட்களிலேயே பயிற்சி நூல்களில் பார்த்திருக்கிறேன். கவிஞர் ஹரிகி மின் தமிழ் மடலாடற்குழுவில் இது தொடர்பாக எழுதியுள்ளார், பாருங்கள்:
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/8150469fdc6dfad0/83c496fe13a17ef8
ஓசைத்தம்பி,
வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணினேன். அது உண்மையில் அப்படித்தான் கவர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்மணம் என்ற திரட்டியின் பெயர் கூட ”வலைப்பூ” என்ற பெயருடன் தொடர்புள்ளதல்லவா! தமிழுக்கு இளமைத் துள்ளலும் வேண்டும், தொன்மையின் தொடர்ச்சியும் வேண்டும். பல புதிய வாசகர்களுக்கு எனது வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.
பிரியாவுக்கும் ரெங்காவுக்கும்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வந்து பார்த்துப் பின்னூட்டமிடுங்கள்.
கருத்துரையிடுக