ஞாயிறு, அக்டோபர் 23, 2011



முன்னொரு காலத்தில், இமயமலையருகே இதேகாசுரன் என்று ஓர் அசுரன் இருந்தான். அவன் சின்னம் கைச்சின்னம். அவன் இமயமலைக்கும் வடக்கே காக்கஸாசுரன் என்ற ஓர் அசுரனுடன் நட்பு வைத்திருந்தான். சுத்தியும் அரிவாளும் என்ற சின்னத்தை வைத்திருந்த காக்கஸாசுரனுக்குத் தம் மக்களைக் காக்க நிறைய செல்வம் தேவைப் பட்டது. அவன் தன் நாட்டில் நிறைய இடங்களில் அணுவாசுர பூதங்களைக் கட்டிப் போட்டு அவற்றின் சாற்றில் இருந்து சக்தி உருவாக்கித் தன் நாட்டை நடத்திக்கொண்டிருந்தான்.


செர்நோபில் என்ற இடத்தில் இருந்த பூதம் கட்டவிழ்ந்து விடவே அந்த இடத்தில் பெருத்த சேதம் ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, காக்கஸாசுரனின் அணுவாசுர பூதங்களைக் கட்டிப் போட முடியும் என்று யாருமே நம்பவிலலை. எனவே காக்கஸாசுரன் இதேகாசுரனோடு ஓர் ஒப்பந்தம் போட்டான். அந்த ஒப்பந்த்தின் படி இதேகாசுரன் இமயவானையும், குமரித்தாயையும் வேண்டி நீங்கள் இருவரும் கூடினால் ஓர் அசுரக் குழந்தையைப் பெற முடியும், அந்தக் குழந்தையின் சக்தியால், நாடே செழிப்புறும், எனவே எனக்கு இந்த வரத்தைத் தரவேண்டும் என்று காக்கஸாசுரன் கொடுத்த அணுவாசுரப் பூதத்தின் இரத்தத்தால் இமயவானை அர்ச்சித்தான்.


இதேகாசுரனின் பக்தியால் மகிழ்ச்சி அடைந்த இமயவான் என்ற தேவர் தலைவர் குமரி என்ற அசுர இளவரசியோடு கூடினார். அவர்கள் கூடிய குளத்தில் ஓர் அணுவாசுரக் குழந்தை பிறந்தது. அது செர்நோபில் பூதத்தின் மறுபிறவியாய் இருந்தது. அதை இதேகாசுரன் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தான். இதேகாசுரன் தூங்கும்போது அதைப் பாஜகாசுரன் பார்த்துக் கொண்டான். இவர்கள் இருவரும் அதை 23 ஆண்டுகள் வளர்த்து வந்த பின்னால், கூடங்குள அணுவாசுர பூதம் தன் முதல் எரிமூச்சை விடத் தயாராக இருந்தது. அதற்கு முன்னால் இந்தப் பூதத்தைக் கட்டி வைத்துக் காப்பாற்ற வந்த அசுரப் படையினர் இந்தப் பூதத்தோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அங்கு வாழ் மக்களுக்குக் கற்பித்தனர். 


அதே நேரத்தில் சூரியன் தோன்றும் கடலுக்கு அருகே, வெகு தொலைவில், நிப்பான் நாட்டில் புக்குசிமா நகரத்தில் கட்டிப் போட்டிருந்த அணுவாசுரனின் தொல்லை பொறுக்காமல் பூமாதேவி அதிர்ந்தாள். அவள் சீற்றத்தால் நடுங்கிய வருணபகவான் பெருங்கடலில் இருந்து அலை அலையாய்க் கிளம்பி புக்குசிமா பூதத்தைத் தாக்கினார். இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாத புக்குசிமா பூதம் வெடித்துக் கிளம்பியது. தன் ஆலகால விஷத்தைக் காற்றிலும் நில்த்திலும், நீரிலும் நிறைத்தது. அந்த விஷம் தாய்ப்பாலிலும் கலக்க, பச்சிளங்குழந்தைகளும் தாய்ப்பால் குடிக்க முடியாமல் திணறினார்கள். அவர்களின் அழுகை ஏழுகடல், ஏழு மலை, ஏழு நிலம் தாண்டி கூடங்குளத்திலும் எதிரொலித்தது.


கூடங்குளத்து மக்கள் அதிர்ந்து போனார்கள். அணுவாசுரக் குழந்தையால் தம் நாட்டில் பாலும் தேனும் பரவி நாடே செல்வச் செழிப்பாய் இருக்கும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அணுவாசுரனின் நச்சுத்தன்மை புரியத் தொடங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் கூடித் தம்மைக் காப்பாற்ற வேண்டி நோன்பு நோக்கத் தொடங்கினார்கள். லலிதாம்பிகை கண் திறப்பாளா என்று தவம் கிடந்தார்கள். இதேகாசுரனிடமிருந்து விடிவு கிடைக்காது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். லலிதாம்பிகை கடைக்கண் காட்டினால் போதும் அணுவாசுரனை அடக்க முடியும் என்றும் அவர்களுக்குத் தெரியும். 


அம்மாவோ இரங்கவில்லை. ஆனால், மக்களின் தீவிரமான விரதம் அம்மாவின் மனத்தைச் சற்று இளக்கியது. அணுவாசுரனை உயிர்ப்பிப்பதற்குத் தடையாக அம்மாவின் கவசம் துணை புரிந்தது. மக்களுக்கு இது மட்டும் போதவில்லை. அணுவாசுரனை முற்றும் வதை செய்ய மாட்டாயா அம்மா என்று மன்றாடினார்கள் மக்கள்.


மக்கள் உறுதியாய் நிற்பதைக் கண்டு இதேகாசுரன் கலங்கினான். அணுவாசுரனை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்று தூற்றத் தொடங்கினான் மோகனசிங்காசுரன். பாஜகாசுரன் உடனே அணுவை எதிர்ப்பவர்கள் காக்கஸாசுரனின் எதிரிகளான குருசுக் குலத்தார் என்று பரப்புரை செய்தான். அம்மாவைப் பார்ப்பன அக்ரஹாரத்துக்கு இழுத்து வந்து கட்டிப் போட்டார்கள். தமக்கு விடிவு காலமே இல்லையோ என்று கூடங்குளத்து மக்கள் அழுதார்கள், அரற்றினார்கள்.


மக்கள் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கையில், தமிழன்னை கடைக்கண் திறந்தாள். நாட்டின் செழிப்புக்கு அணுவாசுரனின் சாறு மட்டும்தானே தேவை? அணுவாசுரனின் சாறு அனைத்தையும் திரட்டி ஒரு குப்பிக்குள் அடக்கினாள். தண்குழைத் தொழில்நுட்பத்தில் அணுவாசுரனை அடக்கினாள். உலகில் இருந்த அத்தனை அணுவாசுரர்களுக்கும் தேவையே இல்லாமல் போய்விட்டது. இந்த மாபெரும் வெற்றியை மக்கள் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள். அதனால்தான் தி.ஆ. 2042 என்றென்றும் பொன்னாள் என்று போற்றப் படுகிறது. அதன் பின் மக்கள் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி வாழ்ந்தார்கள்.


 
அணுவாசுரனை அடக்கியதன் நினைவாகத்தான் மக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.  பழைய பூதங்கள் போம் போம் என்று எண்ணை தேய்த்துக் குளித்துப் பழையவற்றைக் கழித்து விடுகிறார்கள். புத்தாடை உடுத்திப் புதிய நற்காலத்தை வரவேற்கிறார்கள்.  தம்மைப் பூதங்களுக்கு அடிமையாக்கி விட அரும்பாடுபட்ட இதேகாசுரனின் கொடுங்கோல் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.  தண்குழைமைத் தொழில்நுட்பத்தை வாராது வந்த மாமணியைப் போற்றுதும் என்று போற்றுகிறார்கள்.  தாம் கற்றுக் கொண்ட பாடத்தை என்றென்றும் மறவாமல் இருக்க வேண்டும் என்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.  நாமும் கொண்டாடுவோம்.

கதையும் முடிந்தது. கத்தரிக்காயும் காய்த்தது. இப்படியாகத்தானே புராணங்கள் உருவாகின்றன.

பார்க்க:


Hello-cheap-energy-hello-brave-new-world
http://www.forbes.com/sites/markgibbs/2011/10/17/hello-cheap-energy-hello-brave-new-world/
Cheap Power: An overnight revolution

செவ்வாய், மார்ச் 15, 2011

ஜப்பான் அணு உலைகள் விபத்தும் அணு உலைகள் குறித்த உலக நாடுகளின் பொறுப்பும்

நண்பர்களே,

ஜப்பானில் நடந்து கொண்டிருக்கும் அணு மின் நிலைய வெடிப்புகளும், கதிர்வீச்சுப் பேரிடர்களும், உலகெங்கும் அணு உலைகளுக்கு அருகில் வாழும் லட்சக் கணக்கான மக்களுக்கு மிகுந்த கவலை தரும் செய்திகள்தாம்.

எல்லாம் நன்றாகவே இருக்கிறது, சாலை விபத்துகளைவிட அணு உலை விபத்துகளால் உயிரிழக்கப் போகிறவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற வாதம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
பொறுப்புள்ள நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.

ஜெர்மனியில் 1980க்கு முன் கட்டிய அணு உலைகளை மூடி விடுவதாக இன்று அறிவித்திருக்கிறார்கள்.

http://www.reuters.com/article/2011/03/15/germany-nuclear-idUSLDE72E17620110315

ஓர் அணு உலையின் வாழ்நாள் நிரந்தரம் அல்ல. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அவற்றை இயக்குவது சரியல்ல என்று அணு சக்தி நிபுணர்களே கூறுகிறார்கள்.

தற்போது கட்டத் தொடங்கும் அணு உலைகளின் பாதுகாப்புத் திட்டங்களையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மீள்பார்வையிட வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் திரீ மைல் ஐலண்டு விபத்துக்குப் பிறகு பல பத்தாண்டுகளாக எந்தப் புதிய அணு உலையையும் அமெரிக்கர்கள் தொடங்கவில்லை. இருக்கும் அணு உலைகளையும், தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து மேலும் எச்சரிக்கையுடன் தற்காப்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ( http://www.latimes.com/news/local/la-me-tsunami-california-20110315,0,7384994.story )

[ Since Three Mile Island in 1978, we have gone through several rounds of evaluation and analysis on how we can make things safer at all U.S. nuclear facilities," Dietrich said. "The severe accident analysis has not been done in Japan as it has here. That's just a fact."]

சுவிட்சர்லாந்தும் ஜெர்மனியும் புதிய அணு உலைகளைக் கட்டுவதற்கான அனுமதியை ஒத்தி வைத்துள்ளன.

http://www.latimes.com/news/nationworld/world/la-fg-europe-nuclear-20110315,0,679635.story

http://www.reuters.com/article/2011/03/14/nuclear-switzerland-idUSLDE72D1EJ20110314
கனடாவிலும் அமெரிக்காவிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
இதனால், இவர்கள் அணு மின் சக்தியை வேண்டாம் என்று உதறி விடுவார்கள் என்று பொருளல்ல.
வேறு எதையும் விட அணுக் கதிர் வீச்சினால் ஹிரோஷிமாவும், நாகசாகியும் பட்ட பாட்டை அறிந்த மனிதர்கள், செர்னோபில் விபத்தால் புற்று நோய் வந்து பாடுபடும் மக்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இதில் வெறும் லாப நஷ்டக் கணக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இருக்கும் ஆறு, ஏரி, குளங்களை மாசு படுத்தி விட்டு, அக்கறையில்லாமல் நீர்வளங்களையும், மின்சாரத்தையும், பெட்ரோலையும் செலவழித்துக் கொண்டு, உலகையும் வெம்ப வைத்து மேலும் அணு உலைகளைக் கட்டுவோம், கடலில் இருந்து குடிநீரைத் திரட்டுவோம் என்று திரிவது பொறுப்பற்ற செயல்.
நமக்கு மட்டுமல்ல, நமக்குப் பின் வரும் தலைமுறைகளுக்கும் நாம் நல்ல முறையில் இந்த உலகை வைத்து விட்டுச் செல்வது நம் கடமை.

கல் சுரங்கங்களை வெட்டுகிறேன் பேர்வழி என்று மலைகளை முழுங்கிக் கொண்டிருக்கும் மாமனிதர்களைப் பார்க்கும் நமக்கு, வருங்காலத்தைப் பற்றி அக்கறைப் படுபவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் தோன்றும்.
எந்தத் தொழில்நுட்பமும் முழுக்க முழுக்க ஆபத்தற்றது என்று எண்ணுவது சரியல்ல. அதே போல் ஆபத்துகளுள்ள எந்தத் தொழில்நுட்பமும் வேண்டாம் என்றால் நாம் நெருப்பைக் கண்டு பிடித்தற்கு முன்பான கற்கால மனிதர்களைப் போல்தான் வாழ வேண்டும்.
இப்போது நடந்து கொண்டு இருக்கும் பேரிடரில் எத்தனை பேர் உயிரிழக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தப் பேரிடரால் எத்தனை மில்லியன் டாலர்கள் இழந்தோம் என்று வணிகர்கள் லாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்து இனிமேல் அணு மின் நிலையங்களிலும், அணுசக்தியிலும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று பார்க்கப் போவது என்னவோ நிச்சயம் தான். எண்ணைக் கிணறுகள் வற்றத் தொடங்குவதால், அணு மின் நிலையங்கள் வேண்டவே வேண்டாம் என்றும் சொல்ல முடியாது.

இந்த விபத்திலிருந்து நல்ல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தம் மக்களைப் பாதுகாக்க முன் வருவது அறிவுடமை.

ஐரோப்பியர்கள் அந்த எண்ணத்தில் இயங்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்தியாவிலும் இத்தகைய கேள்விகள் எழத் தொடங்கி விட்டன. ஆனால், இந்த மீள் பார்வைகளைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமலேயே நமது அணு உலைகள் ஆபத்தற்றவை என்று அறிவிப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? (http://www.hindu.com/2011/03/15/stories/2011031562611400.htm)
மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும், மீள்பார்வை செய்வோமா? அப்படிச் செய்ய வேண்டியது இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

வியாழன், பிப்ரவரி 03, 2011

காணாமல் போன ஒரு கவிதை

இணையத்தில் தமிழ் நுழைந்த தொடக்க நாட்களில், அதாவது 1995 முதல், எங்களில் பலர் தமிழில் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் தமிழர்களோடு தமிழில் கருத்தாடல் செய்வதை ஒரு பெரும்பேறாக நினைத்தோம்.  அது வரை, தனித்தனிக் கிணறுகளுக்குள் இருந்த தமிழ் நண்பர்கள், ஒரு மாபெரும் தமிழ்ப் பெருங்கடலுக்குள் நீந்த முடிந்தது அப்போதுதான்.  தமிழ்.நெட் என்ற வலைத்தளமும், tamil@tamil.net என்ற மடலாடற்குழுவும்தான் இன்றைய தமிழ் இணைய முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடி.

முதன்முதலில் தமிழில் எழுதுகின்ற மகிழ்ச்சியாலோ என்னவோ, தொடக்க நாட்களில் கருத்துப் பரிமாற்றங்களில் ஒரு மென்மையும், மதிப்பும், வாஞ்சையும் இருந்தது.  மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் வரவேற்று அவருக்கும் தமிழில் தட்டச்சிடக் கற்றுக் கொடுத்துப் பின்னர் கருத்து வேறுபடும் பண்பாடு அப்போது இருந்தது.  தமிழ்.நெட் குழுவின் நிறுவனர்கள் பாலா பிள்ளையும், ”முரசு அஞ்சல்” புகழ் முத்து நெடுமாறனும் இணைந்து தமிழுக்கு வழங்கிய கொடை அது. தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதுக்குத் தகுதியானவர்கள் பாலா பிள்ளையும் முத்து நெடுமாறனும்.  கோவையில் நடந்த தமிழ் இணையம் 2010 கருத்தரங்கில் இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் வைத்துத் தமிழின் தாயகத்திலேயே போற்றி மகிழலாம் என்று முயன்றேன்.  ஏனோ அன்று அது கை கூடி வரவில்லை.  ஆனாலும், தமிழ்.நெட் காலத்தின் முன்னோடிகளோடு கூடி ஓர் உணவரங்கில் சில மணி நேரம் பழையதை அசை போட முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

தமிழ் இணைய முன்னோடிகளும், நெடுங்கால நண்பர்களும் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010). இடமிருந்து வலமாக பேரா. செல்வகுமார், நாக. இளங்கோவன், தமிழ்.நெட் பாலா பிள்ளை,  “மதுரைத் திட்டம்” முனைவர் கல்யாணசுந்தரம், மணி மு. மணிவண்ணன், ”கேஎட்கிராப்”  இளங்கோவன்,  “தமிழ் மரபு அறக்கட்டளை” நா.கண்ணன், ”முரசு அஞ்சல்” முத்து நெடுமாறன் (பச்சை வரி சட்டை), ”வளவு” இராம.கிருஷ்ணன் (இராமகி),  பேரா. நாகராசன்

இந்தக் கூட்டத்தில் சிங்கை பேராசிரியர் டான் டின் வீ, மலேசிய நண்பர் இளந்தமிழ் மற்றும் விக்‌ஷனரி முரளீதரன் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ்.நெட் மடலாடற்குழு பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்.  “எழுதலாம், ஆனால், யாரும் படிக்க மாட்டார்கள்” என்று ஒரு பதிப்பாளர் என்னிடம் சொன்னார்!  இருக்கலாம்.  ஆனால், தமிழ் இணையத்தின் முன்னோடிகள் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது.  இது வரை வந்த தமிழ் இணைய வரலாற்று நூல்களிலும் தமிழ்.நெட்டைப் பற்றிய குறிப்புகள் குறைவே.

வலைப்பூக்களுக்கு முற்பட்ட அந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் ஜியோசிட்டீஸ் (geocities.com) போன்ற தளங்களில் தனிப் பக்கங்களையும் வைத்திருந்தோம்.  தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களை அதில் பங்கேற்ற எங்களில் சிலர் அதைப் பொற்காலமாகவே போற்றி நினைவு கொள்கிறோம்.

தமிழ்.நெட்டில் எழுதிய அறிஞர்களில் பெரிதும் போற்றப் படுபவர் “அகத்தியர்” என்ற மடலாடற்குழுமத்தின் நிறுவனரும், மலேசியத் தமிழியல் அறிஞருமான மருத்துவர் ஜெயபாரதி அவர்கள்.  தமிழ் இலக்கியம், வரலாறு, சமூகவியல் என்று எண்ணற்ற பல தலைப்புகளில் மிகவும் அரிய தகவல்களை அவர் பகிர்ந்து வந்திருக்கிறார். அவை இன்று http://www.treasurehouseofagathiyar.net/ என்ற தளத்தில் தொகுக்கப் பட்டிருக்கிறது.  அவர் அவ்வப்போது தமிழ்.நெட் வலைஞர்களுக்கு ஏதாவது ஒரு புதிர், அல்லது போட்டி கொடுத்து ஊக்குவித்துக் கொண்டிருப்பார்.

அப்படித்தான் ஒரு முறை, 1998 வாக்கில், காலச்சக்கரம் என்ற தலைப்பில் ஒரு வங்காளக் கவிஞர் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றை அனுப்பி இதைத் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா என்று கேட்டார்.   நான் கல்லூரி நாட்களில் “கவிதை” எழுதிக் கவியரங்கங்களில் பங்கேற்றிருக்கிறேன்.  இன்று பெரும்புகழ் பெற்று விளங்கும் கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரே மேடையில் போட்டி போட்டதெல்லாம் ஏதோ பழங்கனவாய் நெஞ்சில் நிழலாடுகிறது.  ஆனால், அமெரிக்கா சென்ற பின்னர் பல ஆண்டுகளாய்த் தமிழோடு தொடர்பு அறுந்து போன பின்னால், தமிழில் எழுதுவதே பெரியது என்று எண்ணிக் கொண்டிருந்த நான் கவிதையை எல்லாம் மறந்து மனம் இறுகிப் போயிருந்தேன்.  அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் இருந்தது என்பதைக் கொண்டு வந்தது அறிஞர் ஜெயபாரதியின் அறைகூவல்.  இது ஒரு பெரிய கவிதை என்பதற்காக எடுத்து எழுதவில்லை.  ஆனால், தமிழையே மறந்து போயிருந்தோம் என்ற நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களிடையே தமிழைக் கொண்டு வந்ததில் தமிழ்.நெட்டின் பங்கையும், அதில் கலந்து கொண்டு எண்ணற்ற புலம்பெயர்ந்த தமிழர்களைப் பெரிதும் ஊக்குவித்த அறிஞர் ஜெயபாரதி அவர்களின் தொண்டையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்.

அறிஞர் ஜெயபாரதி அவர்கள் கொடுத்த ஆங்கிலக் கவிதையையும், எனது தமிழாக்கத்தையும் ஜியோசிட்டீஸ் என்ற தளத்தில் பதித்து வைத்திருந்தேன்.  ஜியோசிட்டீஸ் தளம் பின்னால் மறைந்து விட்டது.  அதில் ஏற்றி வைத்திருந்தவையும் காற்றில் கலந்து விட்டது.  நான் எழுதிய “கவிதையும்” காற்றில் கலந்து விட்டது என்றே மறந்திருந்தேன்.  ஆனால், இன்று தற்செயலாக, வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது ஜியோசிட்டீஸ் தளத்தில் நான் ஏற்றியிருந்த கவிதை இன்று ”ரியோசிட்டீஸ்” என்ற ஒரு புதுத்தளத்தில் கிடைத்தது! 

காணாமல் போன கவிதை ஒன்றைப் பற்றி ”அம்பும் பாட்டும்” என்ற தலைப்பில் ஹென்றி லாங்ஃபெலோ எழுதிய பாட்டு நினைவுக்கு வந்தது.  அதையும் நான் தமிழ்.நெட்டில் மொழி பெயர்த்திருந்தேன்.


அம்பும் பாடலும்

அம்பொன்றைக் காட்டிலே விட்டெறிந்தேன்
விழுந்ததெங்கோ அதை நானறியேன்
காற்றினும் கடுகிப் பறந்ததம்பு
கண்ணிமை விரிக்குமுன் காணவில்லை

பாட்டொன்றைக் காற்றிலே மிதக்க விட்டேன்
பறந்ததெங்கோ அதை நானறியேன்
பாட்டொன்று பறந்திடும் பாதையைக் கண்
பார்த்திட வல்லவர் பாரிலுண்டோ?

ஆண்டு பல உருண்டோடிய பின் ஓர்
ஆலமரத்தில் அந்த அம்பு கண்டேன்;
அந்தப் பாடலும் முழுதாய் வாழ்ந்ததுவே
ஓர் அன்புடை நண்பனின் நெஞ்சினிலே!

Click here to see the English original of "The Arrow and the Song" by Henry Wadsworth Longfellow

இதோ காலச்சக்கரம் மொழிபெயர்ப்பு:

சுழல்

எப்படித் திரும்பிப் போவேன் நானும்
எங்கே தேடுவேன் நேற்றை
இன்றைக்கு வந்து சேர
ஏறி வந்த படிகள்
உருளும் காலச் சுழலால்
உடைந்து பொடியாய்ப் போச்சே!

பின்னால் திரும்புவது ஏது?
முன்னால் நகர வேண்டும்;
முன்னால், முன்னால், முன்னால்
முடிவில்லாத பயணம்.

இல்லை ஏதும் நோக்கம்
இல்லை பயணத்து எல்லை
உண்டே ஒரு நாள் ஓய்வு
அங்கும் பிரிப்பார் குடிசை
அணைத்துக் கட்டிய பின்பே!

ஏனோ இதைக்கண்டு அச்சம்
எல்லாம் மாயை தானே
குழப்பம் வாழ்வில் உண்டு
காப்போ வாழ்வில் இல்லை
காப்பைத் தேடி நிதமும்
செத்துப் பிழைப்பாய் தினமும்

யாருக்கு வேண்டும் ஓட்டம்
சாவைத் தேடி நிதமும்?
என்றோ ஒரு நாள் காலன்
வருவான் நம்மைத் தேடி!
வாழக் கற்றுக் கொள்வோம்
அதுதான் நல்ல பாடம்!

அதிசயம் என்னவென்றால்
வாழத் தெரிந்தவனைத்தான்
காலன் கூப்பிட மாட்டான்
அதுதான் உலகின் இயல்பு

வேண்டாம் என்றே உதறு
வெறுப்பும் தானே போகும்!
இருட்டில் ஒளியைத் தேடு
துயரில் மகிழ்வைத் தேடு!
அதுதான் உலகின் இயல்பு!

வாழ்வைப் பார்த்துச் சொல்நீ
”வேண்டாம் எதுவும் எனக்கு
உன்னால் முடிந்ததைச் செய் நீ”
சாவைப் பார்த்துச் சொல்நீ
”செத்தேன் என்றோ நானும்
செய்வதைச் செய்து கொள் நீ”
அன்றே விடுதலை கிடைக்கும்.

வாழ்வைத் துறந்தாலன்றோ
சாவையும் துறக்க முடியும்?
இரண்டையும் துறந்த பின்னே
வாழ்வுக்கு இல்லை எல்லை
என்றே அறிவாய் நீயும்
அதுதான் உலகின் இயல்பு

ஆங்கில மூலம்: சந்தீப் முகர்ஜீ
தமிழ் மொழிபெயர்ப்பு:  “நாமக்கல் கணிஞன் தமிழ்வளவன்”

”நாமக்கல் கணிஞன் தமிழ்வளவன்” என்பது என் அந்தக் காலத்துப் புனைபெயர்.

இணையக் காற்றில் பறந்த அம்பு இன்று இன்னொரு இணையத்தளத்தில் வாழ்வது குறித்து வியக்கிறேன்.

புதன், ஜனவரி 19, 2011

யூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின் உயர்மட்டக் குழு அறிவிப்பு

யூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின் உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.  அரசின் அறிவிப்பைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php


அரசின் அறிவிப்பு தமிழ் யூனிக்கோடு குறியீட்டு வடிவத்தில் கீழே:

செய்தி வெளியீடு எண்: 56                                                                         நாள் : 18.01.2011


தமிழ் மொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை
கணினி வழிப் பயன்பாட்டிற்காக ஒருங்குறி அட்டவணையில்
அமைப்பது குறித்து அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்திட


ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. மோகன் அவர்கள் தலைமையில்
உயர்மட்டக் குழு அமைத்து
முதலமைச்சர் கலைஞர் ஆணை!

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4-11-2010 அன்று நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் -

தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றைக் கணினி வழிப் பயன்பாட்டிற்காக, யூனிகோட் சேர்த்தியம் (Unicode consortium) என்னும் நிறுவனம் ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் மட்டக் குழு அமைக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று (18-1-2011) ஆணையிட்டுள்ளார்கள்:-

1. பேராசிரியர் ம. ராஜேந்திரன், துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.

3. பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல் நகரம், சென்னை)

4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)

5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)

6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை

8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை

10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.

11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்

12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்

13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக் கார்ப்பரேஷன், சென்னை.

14. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.
மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.


* * * *
வெளியீடு: - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், செ-9.

============================================================

அரசு அறிக்கையில் என் பெயரைக் குறிப்பிட்டு நான் வேலை செய்யும் நிறுவனத்தையும் பட்டியலிட்டிருந்தாலும், இக்குழுவில் பணியாற்ற என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என் வேலையோ அல்லது நிறுவனமோ அல்ல.  உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்ற பன்னாட்டு அமைப்பின் தமிழ் யூனிகோடு பணிக்குழுவின் தலைவர் என்ற பொறுப்பில் ஏற்கனவே கிரந்தம், யூனிக்கோடு குறியீடு பற்றிய ஆராய்ச்சி, அலசல்கள் ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாலும், தமிழக அரசின் தமிழ் யூனிக்கோடு குறியீட்டுக் குழுக்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கேற்று வந்திருப்பதாலும், இது தொடர்பான தொழில்நுட்பக் கருத்துகளை நேரடியாகக் குழு உறுப்பினர் வாயிலாக அவ்வப்போது அறிந்து கொண்டால் குழு மேம்படச் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அரசின் குழுவுக்கு என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதைத் தமிழக முதல்வரும் ஏற்று என் பெயரை அறிவித்திருப்பது வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கு கூட வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்தக் கடமையைச் செயலாற்ற அளித்த நல் வாய்ப்பாகக் கருதுகிறேன்.

ஞாயிறு, ஜனவரி 16, 2011

தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே, நன்றி, மீண்டும் வருக!

அன்பார்ந்த தமிழ்மணம் வாசகர்களே!


தமிழ்மணம் திரட்டி என்னைப் பொங்கல் வார நட்சத்திரமாக, தமிழ்மணத் தாரகையாகத் அறிவித்து நான் எழுதத் தொடங்கி அதற்குள் ஒரு வாரம் பறந்து விட்டது!

பொதுவாக மடலாடற்குழுக்களில் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் எனக்கு, வலைப்பதிவர்களின் நெருக்கமான உலகமும், அவற்றின் ஊடாடலும், கிட்டத்தட்ட வேறு உலகமாகவே தோன்றிற்று.  பொதுவாகப் பதிவர்கள் மடலாடற்குழுக்களில் எழுதுவதில்லை.  அப்படி எழுதினாலும், தங்கள் பதிவுகளைப் பற்றி மட்டும் எழுதுவார்கள்.  மற்ற கருத்தாடல்களில் கலந்து கொள்வதில்லை.  பதிவர்களின் கருத்தாடல்கள் வலைப்பூ உலகுக்குள் மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது.  மடலாடற்குழுக்கள் நாடக மேடை என்றால், பதிவர் உலகம் சின்னத் திரை போன்றது எனலாமா?  அப்போது பெரிய திரை என்ன என்று கேட்காதீர்கள்!  ஃபேஸ்புக்கோ, டுவிட்டரோ இன்னும் அந்த அளவை எட்டவில்லை. பெரிய திரை இன்னும் வலையிதழ்கள் என்றே சொல்லலாம்.

சோசியல் நெட்வொர்க் என்பதற்குத் தமிழ்ப் பெயர் சூட்டி விட்டாயிற்றா என்று தெரியவில்லை.  சோசியலைஸ் என்பதை உறவாடுதல் என்று கொண்டு பெயர் வைக்க வேண்டும்.  ஆனால், அது உறவாடு, கருவாடு என்று எங்கேயாவது கொண்டு போகும்!  தற்போதைக்குச் சமூகவலை என்று வைத்துக் கொள்வோம்.

சமூகவலைத் தொழில்நுட்பத் தாக்கங்களால் இணையத்துக்கு உள்ளேயே  இதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றத் தொடங்கி விட்டன.  திறந்த பரப்பாக, எல்லோரையும் இணைக்கும் மையமாக இருந்த இணையம் இன்று தனித்தனிக் குழுக்களாகப் பிரியத் தொடங்கி உள்ளது.  மனித சமூகங்கள் சிற்றூரிலும், பெருநகரிலும் வாழ்வது போல இந்தச் சமூகவலைகளும் ஃபேஸ்புக் போன்ற பெருநகரமும் ஏனைய சிற்றூர் குழுமங்களாகவும் சிதறத் தொடங்கி விட்டன.  மடலாடற்குழுமங்களும் அப்படித்தான் சிதறின.  தொடக்க நாட்களில் தமிழ்.நெட் தான் இணையம். இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தாலும், அதன் பண்பாடே தனி. டுவிட்டரில் இருப்பவர்கள் ஃபேஸ்புக்கில் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதையும், ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் டுவிட்டரைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆனால், எல்லாவற்றிலும் தமிழில் உறவாட முடிகிறது.  பிலாக்கரில் கூடத் தமிழ் இடைமுகம் வந்தாயிற்று.  இந்த வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியது.  தமிழ்மணம் திரட்டி 9000 வலைப்பூக்களைத் திரட்டுகிறது என்று அறிந்து மலைத்துப் போனேன்.  ஒரு சிலர் மட்டுமே எழுத, மற்றவர்கள் அதைப் படித்துக் கருத்து சொல்வது மட்டுமே இருந்த பதிப்புலகம் மாறி இன்று தம் கருத்துகளைப் பதிவு செய்யப் பல்லாயிரக் கணக்கான எழுத்தாளர்களால் முடிகிறது.  ஒரு சில நிறுவனங்களின் கையில் இருந்த கருத்துலகத்தை உடைத்து இன்று சிறுபான்மையினரும் தங்கள் கருத்துகளை உலகுக்குப் பரப்ப இணையம் வழி காட்டியிருக்கிறது.  இது பெரிதும் வரவேற்கத் தக்க வளர்ச்சி.  ஆயினும், அரசுகள் இவற்றைக் கட்டுப் படுத்தாமல் இருப்பதில்லை.

விக்கிலீக்ஸ் நமக்குக் காட்டியது என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் பேசும் நாடுகள் கூடத் தம் நாட்டின் பாதுகாப்புக்காக கருத்துகளுக்கு அணை கட்டத் தயங்குவதில்லை என்பதே.  இருந்தாலும், இணையம் என்பது ஒரு மாகடல்.  இதற்கு அணை போடுவது என்பது எளிதல்ல.  இதன் அடிப்படை அடவே (டிசைன்) என்ன தடை இருந்தாலும் அவற்றை மீறித் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதுதானே!

நிற்க.

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்மணம் திரட்டி எண்ணற்ற புது வாசகர்களுக்கு என் வலைப்பூவை அறிமுகப் படுத்தி இருக்கிறது.  மாத மும்மாரி பொழிவது போல் எப்போதாவது பதிந்து கொண்டிருந்த என்னை நாளுக்கொரு பதிவாவது செய்ய வைத்தது இந்த நட்சத்திரப் பதவி!  நான் எழுதும் தலைப்புகள்  தமிழ் தகவல் தொழில்நுட்பம், கலைச்சொல்லாக்கம், தமிழ் மொழி வரலாறு என்று ஒரு சிலருக்கு மட்டுமே சுவையாக இருக்கக் கூடிய தலைப்புகள்.  இவற்றை தமிழ்மணம் திரட்டி அனுப்பும் வாசகர்களுக்குச் சுவையாக எழுதிக் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியுமா என்ற ஐயம் எனக்கு இருந்தது.  இது தவிர பொங்கல் வாரத்தில் மக்கள் பண்டிகை கொண்டாடுவார்களா இல்லை வலையில் மேய்வார்களா என்றும் ஒரு ஐயம்.  ஆனால், பல வாசகர்கள் வந்திருக்கிறீர்கள்.  பலர் கருத்துரைத்திருக்கிறீர்கள்.  வாசகர் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வந்திருக்கிறது.  மிக்க நன்றி.

பொங்கல் நாளன்று நான் எழுதிய பதிவை வெகு சிலரே படித்திருக்கிறார்கள். அதில் தமிழ் யூனிக்கோடு முயற்சிகளின் வெற்றி பற்றி எழுதியிருந்தேன்.  அதைப் படிக்காதிருந்தால் சற்று எட்டிப் பாருங்கள்.  (http://kural.blogspot.com/2011/01/blog-post_15.html )

இந்த வாரம் என்னோடு கருத்தாடல் செய்த வாசகர்களிடமிருந்து நான் பல கற்றுக் கொண்டேன்.  பழம்பெரும் பண்பாட்டின் வழித்தோன்றல்கள் எப்படி நாகரீகமாகத் தம் கருத்து வேற்றுமைகளைப் பற்றி எழுதலாம் என்பதற்குத் தமிழ்மணம் திரட்டி வந்த வாசகர்களே அடையாளம்.  என்னுடைய பதிவுகளில் நீங்கள் விரும்பிப் படித்தவற்றைக் கீழே வரிசைப்படி பட்டியலிடுகிறேன்:


குழந்தைகளை வேட்டையாடும் காமவெறியாளர்கள்

தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா?

தமிழ் இணையம் - கனவும் நனவும்

 "ஏனோ என்னை எழுப்ப லானாய்மட மானே” - தெருக்கூத்தும் ...


பழைய புத்தகக் கடையில் கிடைத்த பொங்கல் பரிசு

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்

ஔவைப் பாட்டிக்கு மினி-ஸ்கர்ட்?

தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே வருக!

தஞ்சை ஒருங்குறி மாநாடு - சனவரி 9, 2011

சொல்வளம் - உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” வலைப்பூ இன்று தொடங்குகிறது...


இந்தப் பதிவுகளால் உங்களுக்குத் தெரியாத தகவல்களை அறிமுகப் படுத்தியிருந்தால் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கொள்கிறேன்.

வாரமொரு தமிழ்ப் பதிவுலகத் தாரகையை நமக்கு அறிமுகப் படுத்தும் தமிழ்மணம் திரட்டிக்கு மீண்டும் எனது நன்றி.  புழைக்கடைப் பக்கம்  வலைப்பூவுக்குப் புதிதாக வந்து படித்திருக்கும் தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களின் வருகைக்கு நன்றி.  மீண்டும் வருக!

இவண்,

மணி மு. மணிவண்ணன்

செம்மொழி மாநாட்டில் தமிழ் இணையம் அரங்கில் என் கட்டுரை

2010ல் நடந்த செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையம் 2010 அரங்கில் ஓர் அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன்.  (அது பற்றிய பதிவை http://kural.blogspot.com/2010/07/blog-post.html  என்ற சுட்டியில் காணலாம்).  இன்னோர் அமர்வில் நான் கட்டுரை படித்தேன்.

தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான இந்த அமர்வுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் திருமதி சுபாஷிணி டிரெம்மல் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்கள்.  இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:

1. திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான நீண்ட கால பராமரிப்பு வழி முறைகள்

2. திரு.மணியரசன் (மலேசியா) - இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை

3. முனைவர்.கா.துரையரன் (சென்னை) - இணையத்தில் தமிழ் நூல்கள்

4. முனைவர்.கு.கல்யாண சுந்தரம் (சுவிஸ்லாந்து) - தமிழ் மின்னணு நூலகத்தின் ஆக்குமுறை

இந்த அமர்வுகளின் காணொளிப் படங்கள் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ளன:

http://www.youtube.com/watch?v=47WcSQ35O7U   (Umar Thambi A1.flv - மணிவண்ணன் 1)

http://www.youtube.com/watch?v=78whvIXjgh0   (Umar Thambi A2.flv  - மணிவண்ணன் 2)

http://www.youtube.com/watch?v=OSbwnUXkE-Y  (Umar Thambi A3.flv  - மணிவண்ணன் 3)

http://www.youtube.com/watch?v=LuGl-pyr6Ww  ( Umar Thambi A4.flv - மணிவண்ணன் 4)

http://www.youtube.com/watch?v=uuEnaSA0DpU

http://www.youtube.com/watch?v=BgfVYDf7XlA  

http://www.youtube.com/watch?v=AN2UxOQvNPw

http://www.youtube.com/watch?v=pjjiXUvFEjQ

http://www.youtube.com/watch?v=UhR7mDWs1p8

http://www.youtube.com/watch?v=L6M09QmTx-A

http://www.youtube.com/watch?v=ztAxGntAwn4

http://www.youtube.com/watch?v=-8s9KyAsFtw

http://www.youtube.com/watch?v=X2wW1JpyeE4

http://www.youtube.com/watch?v=5MXm357UjIo

http://www.youtube.com/watch?v=5MXm357UjIo

http://www.youtube.com/watch?v=tgzKyEoUf84

எனது கட்டுரையை கூகிள் ஆவணக் களரியில் சேமித்திருக்கிறேன்.  கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கினால் படிக்கலாம்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4QIwxkSE9aDOWVkZDE0NGQtYWE2My00M2U5LWFiOTQtOTU2NzJmOTVlYTgx&hl=en

கட்டுரையின் படக்காட்சியையும் அதே களரியில் சேமித்திருக்கிறேன்.  அதைக் கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4QIwxkSE9aDMTk4OGUyOWQtNzNlYi00NDY0LWIyZTItNWFkZThhZTZhNDM5&hl=en


எனது பேச்சைப் பார்த்து விட்டுக் கவிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் மின் தமிழ் மடலாடற்குழுவில் கருத்து தெரிவித்திருந்தார்.  அவர் எழுதிய முழுக் கடிதத்தையும் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்:

http://groups.google.com/group/mintamil/msg/ada1600576b3536d?

அதற்கு என் விடையைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.

http://groups.google.com/group/mintamil/msg/48d883ff2ce15aed?

இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து எழுத இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.  பொதுவாகவே நாம் நம் மரபுச் செய்திகளைப் போற்றுவதில்லை.  பழைய கல்வெட்டுகளைக் கற்சுரங்கக் காரர்கள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  போகி பண்டிகையில் நாம் ஏடுகளை எரித்திருக்கிறோம் என்கிறார்கள்.  ஏட்டுச் சுவடிகளைப் பெயர்த்தெழுதும் பழக்கத்தை விட்டிருக்கிறோம்.  பழைய ஆவணங்களை எண்ணிமப் படுத்தினால் மட்டும் பழைய கெட்ட பழக்கங்கள் போய் விடுமா என்ன?

சொல்லப் போனால், ஏடுகளும் காகிதங்களும், ஏன் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூட பல ஆண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன.

இதோ இப்போது நான் எழுதியிருக்கும் இந்தப் பதிவு எத்தனை காலம் தாங்கும் என்பது கூகிளுக்குத்தான் வெளிச்சம்!

உங்கள் ஆவணங்களை அரசு எண்ணிமப் படுத்தப் போகிறது.  அதை எப்படிப்பாதுகாப்பீர்கள்?  அதை அரசு எப்படிப் பாதுகாக்கப் போகிறது?  இருவருக்கும் இடையில் ஒரு குழப்பம் வந்தால் அதை யார் தீர்க்கப் போகிறார்கள்?

மாநாட்டுப் பேச்சைக் கேளுங்கள்.  ரொம்பவே மிரட்டுகிறீர்கள் என்று திருமதி சுபாஷினியும் ஹரி கிருஷ்ணனும் சொன்னார்கள்.  என்ன பயன்?  இது வரை நான் சொன்னதை யாரும் கேட்டதாகவே தெரியவில்லையே?

தமிழ்.நெட்டில் 1997ல் நாங்கள் எழுதிய மின்னஞ்சல்களோ,  soc.culture.tamil இல் 1990 களின் தொடக்கத்தில் நாங்கள் எழுதிய கடிதங்களோ இன்று முழுவதும் கிடைப்பதில்லை.  கிடைத்தாலும் படிக்க முடிவதில்லை.  இதுதான் எண்ணிம ஆவணங்களின் நிலை.

உங்கள் வீட்டுப் பத்திரத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறீர்கள்?

ஔவைப் பாட்டிக்கு மினி-ஸ்கர்ட்?

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைய முன்னோடிகளில் ஒருவரான நண்பர் முத்து நெடுமாறன் என்னிடம் ஒரு கலைச்சொல் கேள்வி கேட்டார்.  அது ஏன் என்னைக் கேட்டார் என்பதே ஒரு தனிக்கதை.  தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும், உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கக் குழுவின் தலைவராக இருந்தேன் என்றாலும், அதனால் மட்டும் அவர் என்னைக் கேட்கவில்லை.

வெப்லாக் என்ற பிலாக் தொழில்நுட்பம் தமிழுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது அதைத் தமிழில் எப்படி அழைப்பது என்று காரசாரமாக ஒரு அலசல் நடந்து கொண்டிருந்தது.  வெப்லாக் (weblog) என்பது ஆங்கில இலக்கணப் படி வந்த ஒரு முழு சொல்.  பிலாக் (Blog) அப்படியல்ல.  அது அமெரிக்க வழக்கப் படி வரும் ஒரு குறும்புச் சொல்.  விளையாட்டுப் போக்காகச் சொற்களை உருவாக்கும் இயல்பு அது.  நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சுவோமே அது போல.  ஒரு நுட்பத்துக்கு நாம் இப்படி ஒரு கொஞ்சுமொழியில் பெயர் வைத்தால் அது நம்மை மிரட்டுவதில்லை.  நாம் அதை எடுத்துத் தாலாட்டிப் பேணி வளர்க்கத் தொடங்கி விடுகிறோம்.  இதற்குத் தமிழில் பெயர் சூட்ட வந்தவர்கள் பொருத்தமாக வலைப்பதிவு என்றே பெயர் சூட்டினார்கள்.  அதுவே பெரிதும் நிலைத்தும் நிற்கிறது.

ஆனால், எனக்கென்னவோ, வலைப்பதிவு என்பது வெப்லாக் என்பதற்கு இணையான சொல் என்றும் பிலாக் என்பதற்குக் குறும்பான பெயரைத் தமிழில் சூட்ட வேண்டும் என்று தோன்றியது.  ராயர் காப்பி கிளப் என்ற மடலாடற்குழுவில் மாலன் கேட்ட கேள்விக்கு மே 15, 2003 அன்று நான் அளித்த பதில் (http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994)

 Re: [RKK] Peyar soota vaarungkal

மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,

தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.

t 5/14/03 08:56 PM, you wrote:

>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து

>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை

>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,

>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"

பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.


எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.


ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்

நூவர்க், கலி., அ.கூ.நா.

என்று எழுதியிருந்தேன்.  ஆனால், நாக கணேசன் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல,

வலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று
.

இன்று பதிவர்கள், பதிவுகள் என்ற சொற்கள் பரவலாக இருந்தாலும், வலைப்பூ என்ற சொல் மறையவில்லை.

முத்துவுக்கு இணையம், கணினி என்ற சொற்களைப் போல் வலைப்பூ என்ற சொல் பிடித்திருந்தது.  ஒரு கலைச்சொல்லை மொழிபெயர்பதற்கும், ஒரு சொல்லுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது என்றார் முத்து.  (There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil. )
சிங்கப்பூர் கல்வித்துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தமிழ்க் கல்விக்கான புதுத் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் பேச ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவர் blogs, podcasts, video-podcasts, என்ற கலைச்சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களைத் தேடிக் கொண்டிருந்தார். 
blog என்பதற்கு வலைப்பூ என்ற தனக்கு மிகவும் பிடித்த சொல்லைப் புழங்கப் போவதாகச் சொன்னவர் podcasts and video-podcasts என்ற சொற்களுக்கு ஏற்ற கலைச்சொற்களைப் பரிந்துரைக்கக் கேட்டுக் கொண்டார்.

நான் அவருக்கு எழுதினேன்:

Podcast is defined as "a digital recording of a radio broadcast or similar program, made available on the Internet for downloading to a personal audio player."

பாதம், பொதி என்ற சொற்களைப் பற்றிச் சிந்தித்தேன்.  ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு பொதியொலிபரப்பு ( packetized audio) பொருந்துமோ என்று எண்ணிப் பின் கைவிட்டேன்.

I settled on the following as direct, simple and in line with familiar words that convey the meaning to people that are not familiar with the term or the concept.

ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொலிபரப்பு அல்லது வலையொலி என்பது பொருந்தும்  (வானொலி, ஒலிபரப்பு என்ற பழக்கப் பட்ட சொற்களோடு ஒப்பிட்டு இவற்றையும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.)

அதே போல், வீடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொளிபரப்பு அல்லது வலைக்காட்சி பொருந்தும்.  (தொலைக்காட்சி, ஒளிபரப்பு போன்ற சொற்களிலிருந்து கிளைத்தவை இவை).

முடிவாக

audio podcast = ஆடியோ பாட்காஸ்ட் = வலையொலி
video podcast = வீடியோ பாட்காஸ்ட் = வலைக்காட்சி

என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.

இவை சரிநிகரான தொழில்நுட்பக் கலைசொற்களாக இல்லாமலிருந்தாலும், அன்றாடப் புழக்கத்துக்கு உகந்த சொற்கள் என்பது என் எண்ணம்.

நண்பர் முத்துவுக்கு இந்தச் சொற்கள் மிகவும் பிடித்திருந்தன.  அவர் 
"வலையொலி and வலைக்காட்சி are brilliant.  It hits the meaning and has a precedence.  I love these terms.  Let's use them wherever we can - and hope they gain acceptance like இணையம் and வலைப்பூ did."
 என்று விடையளித்தார்.

ஆனால், இந்தச் சொற்களைப் பன்மையில் எப்படி எழுதுவீர்கள் எனக் கேட்டார்.

வானொலி, தொலைக்காட்சி இவற்றை நாம் பன்மையில் எப்படி எழுதுகிறோம்?  வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எழுதலாம்.  வானொலி/தொலைக்காட்சி நிலையங்கள் என்பவை ஒலி/ஒளிபரப்பு நிலையங்களைக் குறிப்பன.

வலையொலிபரப்புகள், வலையொளிபரப்புகள் என்பவை பன்மைச் சொற்களாக அமையலாம்.  எனினும், வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்கள் சுருக்கமானவை.  தமிழிலும்கூட சுருக்கமான சொற்கள் எளிதாகப் புழக்கத்துக்கு வந்து விடுவதை அண்மைக் காலத்தில் காணலாம்.

எனவே வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.

இணையம் என்ற சொல் தமிழ்.நெட் தொடக்க காலத்தில் மலேசியத் தமிழ் இதழாசிரியர் கோமகன் அவர்கள் உருவாக்கிய சொல்.  இணையம், இன்டர்நெட்  (Internet) என்பதற்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்ற பொருள்பட இணையம் என்று அழைக்கலாம் என்றார்.  கலைச்சொல்லிலும் கவிநயம் பார்க்கும் தமிழ் இதயங்களுக்கு இந்தச் சொல் மிகவும் பிடித்திருந்தது.

இணையம் என்பது இன்டர்நெட் (Internet) மட்டுமே.  Web அல்லது Net அல்ல.  இணையத் தொலைக்காட்சி என்பது பொருந்தாது.

இணையம் என்ற சொல்லாட்சி தமிழ்.நெட்டில் தொடங்கித் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் புழங்குவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.  அப்படிப்பட்ட சொல்லாக்கம், ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிந்து கொண்டு, உள்வாங்கி, நம் உள்ளத்திலிருந்து எடுத்து நம் மொழியில் நம் வழியில் புதிய கருத்தைக் கூறும் தன்மையைத் தமிழர்கள் எய்திவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்.  அப்படிப் பட்ட சொற்கள் இரவற் சொற்களைவிட வலிமையானவை. ஆங்கிலச் சொற்களோடு ஒலியொப்புமை கருதி உருவாக்கும் சொற்களைவிட ஆழமானவை.

A word like that demonstrates to me that we Tamils have absorbed a new invention, taken it to our heart and start to identify it with our original expression.  Such coinages have power and they resonate better than a bland translation or a word that mimics the English sound.

இதற்கு முத்து எழுதினார்:
Dear Mani,


There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil.

Almost all people I've come in contact are quick to do the former. That's because, the second requires effort, skill, passion and the desire to propagate the usage of not only the name but also what it represents. Giving something a name is like branding. We need to think outside the box - something marketing people are trained to do :)

As you pointed out once, the names that came into existence with an original 'value' had successful imprints and had a direct impact on people. இணையம் is a classic example. When Tamils talk about இணையம், our minds don't translate the work to Internet or Web! It's just இணையம்! .... and the this word gets surrounded by different set of thoughts, action and content than the words like Internet or Web. (like to hear your thoughts on this!)

We don't need all words to have this impact -- we don't have sufficient material in our community to create or even desire for this impact :). However, words that prompt actions - like blogs, podcasts etc will be great if they have a name from a Tamil 'angle'. 'Angle' as it's used in PR :)

The names you gave for blog and podcasts are far better and has the values we desire in Tamil names :). For me, when I think வலைப்பூ or வலையொலி, different actions get trigged in my mind instead of resolving a pointer to blog or podcast. In programming talk, these words are no longer pointers but a different object inherited from the same base class -- hope I'm communicating this right.

While on this, I just completed the new generation of Sellinam - to be launched in this region free to all mobile subscribers. A large multinational has come forward to sponsor the service

I took your advice. It will have a complete menu navigation in Tamil. I took the liberty to coin some Tamil names -- and put it to test among the Indian expats who are working at shipyards and construction sites -- their only language is Tamil.

Some examples are: வந்தவை (Inbox), சென்றவை (Sent Items), செல்பவை (Outgoing), கோர்த்தவை (Drafts). Likewise, I thought through the 'status' messages purely from these users 'angle' instead of trying to impress them with a 'translation'. I'll send you the screen shorts later. Initial feed back -- they knew exactly what these words mean even without someone having to explain!
This subject is close to my heart -- thus the long email :)

anbudan,
~ MUTHU



முத்து தன் கருத்தரங்குக் கட்டுரையில்

வலைப்பூ, வலையொலி, வலைக்காட்சி
வலைப்பூக்கள், வலையொலிகள், வலைக்காட்சிகள்

என்ற சொற்களைப் புழங்கினார்.  சிங்கைத் தமிழாசிரியர்களிடையே இந்தச் சொல்லாக்கங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

இதே போல் தமிழில் டொமெய்ன் (domain) என்பதற்குக் கொற்றம் என்ற சொல்லைப் பரிந்துரைத்தபோது மின் தமிழ் மடலாடற்குழுவில் ஒரு நல்ல அலசல் நிகழ்ந்தது.  (பார்க்க:  http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/2426db23d511633f?fwc=1&pli=1 )



ஆனால் இன்னொரு முறை தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வேறு ஒரு சொல்லைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம். 
இன்று ஒரு புதிய வலைச்சொல் கண்டேன்.

Bleg = A blog where one asks for donations; a cross between blog and beg.

இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

வலைப்பிச்சை

எனலாமா?  மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை போல இந்தச் சொல்லும் வழக்கில் வரலாம்.

அல்லது ஆங்கிலச் சொல்லைப் போல, பிச்சை என்பதை அப்பட்டமாகச் சொல்லாமல்

வலைச்சை அல்லது வலைப்பூச்சை

என்று பூடகமாகச் சொல்லலாமா?

அல்லது இதற்கு ஏற்கனவே தக்க சொல் புழக்கத்தில் இருக்கிறதா?

நண்பர்களே, என்ன நினைக்கிறீர்கள்?

என்று கேட்டிருந்தேன்.  நண்பர் நியூ மெக்சிக்கோ வாசன் நல்ல பல சொற்களைப் பரிந்துரைத்திருந்தார்.  ஆனால், வலைப்பூ போன்ற இடுகுறிப் பெயர்கள் தமிழின் தன்மையச் சிதைப்பவை என்ற எண்ணம் கொண்ட நண்பர் நாக இளங்கோவனுக்குப் பொறுக்கவில்லை.  நகைச்சுவையுடன் அவர்,  பிச்சை எடு என்பதற்குப் பகராகப் பிச்சை கொடு என்ற எண்ணம் தொனிக்க ஈதல் என்ற அடிப்படையில் “ஈவலை” என்று பெயரிடலாமே என விடையளித்தார்.  அதற்கு நான்

அன்பின் இளங்கோவன்,

:-).  "ஈவலை" என்பது "கொசு வலை" போல் ஈயைப் பிடிக்கும் வலை என்று தவறாகக் கொள்ள நேரிடலாம்.  நகைச்சுவை உணர்வுள்ள சொல் "ஈவலை" என்று வாசன் மகிழ்வார்!

blog என்ற சொல்லே அமெரிக்கர்களின் மொழியியல்பிலிருந்து பிறந்த குறுஞ்சொல்.  bleg என்பது மேலும் நகைச்சுவை கொண்ட சொல்.  begging blog என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் ஆனால், begging என்பதை மட்டம் தட்டவில்லை.  நல்ல செயலுக்குப் பிச்சை எடுக்கலாம், இல்லையா?  பௌத்த, சமணத் துறவிகள் பிச்சையெடுத்து உண்ணும் நோன்பு நோற்கவில்லையா?  இது போன்ற சொற்களைத் தமிழில் ஆக்கும்போது மொழி பெயர்ப்பதைவிடக் கருத்தை உள்வாங்கி தமிழின் தன்மைக்கேற்ப சொற்களைப் படைப்பது நல்லது என்பது என் கருத்து.  வலைப்பூ அப்படி எழுந்த சொல்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல!
என்று விடையளித்தேன்.  நண்பர் இளங்கோவன், ஏன் வலைப்பூ என்ற சொல் தக்கதல்ல என்பதற்கான வாதங்களை முன் வைத்தார்.


அன்பின் மணிவண்னன்,

நண்பர் வாசனுக்கு மட்டும்தானா? எனக்கும்
ஈவலை என்றால் சிரிப்புதான் வருகிறது :-)

ஓரெழுத்துச் சொல்லான பூவைத் தூக்கிப் பின்னால்
வைக்கிறீங்க. ஆனால் ஈ யைத் தூக்கி முன்னாடி
வைச்சா எல்லாம் சிரிக்கிறீங்க. சிரிக்கிறமாதிரி ஒரு பெயர் இருக்கட்டுமே :-) (அதுவும் ஒரு பொருளோடு இருக்கிறது; )

பூ என்பதனைப் பலரும் வெகுவாகப் பயன்படுத்தும்
போதெல்லாம் உங்கள் நினைவு வரும் எனக்கு. மகிழ்ச்சியும் வரும்.

ஆனால் பாருங்கள், பூ என்று வைக்கப் போய், அதுவே தற்போது வேர்ச் சொல் போல் ஆகி, பிச்சையோடு புணர்ந்து/கலந்து பூச்சை ஆகிறது.

இதுவே, பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்
Web என்ற இந்த மிடையத்திற்கு நிறைய பொருள் பொதிந்த
வேர்ச்சொற்கள் தேவை என்று காட்டுகிறது.

அதே நேரத்தில் நவ பெயர்களான பூ போன்றவற்றில் எனக்கு
மனத்தாங்கல் இல்லை; bleg என்பதற்கு ஒரு நவப்பெயர் சூட்டலாம்; அது வலைப்பூ போன்று நவமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.ஆனால், பூவையும் பிச்சையையும் கலப்பது பொருள் சேர் உத்தி நவ உத்தி என்ற இரண்டு உத்திகளையும் கலந்து விடுவது போல இருக்கிறது. அதுதான் எனக்கு யோசனை :-))
அன்புடன்
நாக.இளங்கோவன்
கலைச்சொல் பற்றிய வாதங்கள் காரசாரமாய் முட்டி மோதிக் கொள்வது போல் இல்லாமல் நகைச்சுவையாய் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்த இந்தத் தொடரை எனது பின் வரும் வினாவோடு நிறைவு செய்தேன்.

நண்பர் ஈளங்கோவன் ;-)

வெகுநாட்களாக எனக்குள் ஓர் ஐயம்.

ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.

மூத்த மொழி என்பதால் தமிழ் இறுகி உறைந்து விட்டதோ?

தொன்மையும் தொடர்ச்சியும் வேண்டுவதால், அதற்கு இளகத் தெரியாதோ?  தமிழில் விளையாட்டாகப் பேச முடியாதோ?

சரியோ தவறோ, அமெரிக்க ஆங்கிலச் சொல்லாக்கங்களைப் பாருங்கள்.  அதில் ஒரு விளையாட்டுத் தன்மை தெரியும். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புத்தம் புதுச் சொற்கள் பல எழும்.  விழும். குழூஉக்குறிகள் வரும். போம்.  நல்ல படைப்பாளியின் கையில் இவற்றில் சில சாகா வரம் பெற்று நிலைத்து நிற்கலாம்.

எம்.டி.வி.யிலும், எஸ்.எம்.எஸ்.இலும், சொற்கள் சிதைந்து, அழிந்து,
கலந்து, குழம்பிப் பாகாகித் திரண்டு மீண்டும் மீண்டும் எழும், விழும்.

weblog வலைப்பதிவுதான்.  weblog எப்படி blog ஆகிற்று? weblogger என்ற
சொல் இல்லை, ஆனால் blogger வழக்கில் ஓங்கி நிற்கிறது.

blog -இலிருந்து bleg கிளைக்கிறது.

வேறு எந்த மொழியில் இது போன்ற சிதைவுகள் சொற்களாகும்?

செம்மொழிகள் உறைந்து போனவை என்பதால் இவை போன்ற ஒயிற் சொற்களைப் பிறமொழிகளிலிருந்து இரவல் வாங்க வேண்டியிருக்கிறதோ?

பாருங்களேன்.  உங்களுக்கு வலைப்பூ என்பது ஈவலைபோல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.  வலைச்சை என்பதெல்லாம் தமிழில் எடுபடாது என்று தோன்றுகிறது.  டபிள்யூ டபிள்யூ டபிள்யூ என்பதையெல்லாம் டப் டப் டப் என்று சொல்லாடுவது போல் தமிழில் ஆடினால் ஔவைப்பாட்டிக்கு மினி ஸ்கர்ட் போடுவது போல் நகைப்புக்கிடமளிக்கிறதோ?

முந்திப் பிறந்தவள் செந்தமிழன்னைக்கு மூப்பு தட்டி விட்டதோ?
வினாவுடன்,
மணி மு. மணிவண்ணன்
வேறு மொழிகளில் கலைச்சொற்களை அன்றாடம் படைக்கிறார்கள்.  எங்கள் தொழிலில் மென் கலன்களைப் பிறமொழியில் மொழி பெயர்ப்பதற்குக் கொடுக்கும் நேரம் வெகு குறைவு.  அதற்குள் இருக்கும் சொல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இல்லையேல் கலைச்சொல்லைப் படைக்க வேண்டும்.  அந்தத் தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு பொறுமையோ, அக்கறையோ இருக்காது.  அது தொழில் மட்டுமே.

டுவிட்டருக்குக்கும், ஃபேஸ்புக்குக்கும், கூகிளுக்கும், மைக்ரோசாஃப்டுக்கும் தமிழ்க் கலைச்சொற்கள் என்பவை வணிகத்துக்குத் தேவையானவை.  அவ்வளவே.  அவர்கள் கொச்சையாக, பச்சையாக இல்லாத எதைத் தேர்ந்தெடுத்தாலும்,  அவையே வழக்கில் வரும் வாய்ப்பு உள்ளது.

முன்னர் போல் இல்லாமல், தற்போதெல்லாம், தொழில்நுட்பங்கள் தமிழுக்குப் பரவுவதற்கு அவ்வளவு நேரம் பிடிப்பது இல்லை. கலைச்சொற்களைப் படைப்பதில் தமிழர்களுக்குள் வாக்குவாதம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால், வணிக நிறுவனங்கள் எதையாவது முதலில் செய்வோம் என்று போடத் தொடங்குவார்கள்.  அதை சன் டிவி,  ரெட் ஜயண்ட் மூவீஸ், என்பது போல பெரிய இயக்கப் பின்னணியில் உள்ளவர்களோடு இணைந்து போட்டால் எதிர்ப்புகளைக் கட்டுப் படுத்தி விடலாம் என்பதும் ஊரறிந்த ரகசியம்.  இல்லாவிட்டால் நுணுக்குமென்மையும் அளிநட்பேயும் வந்து நின்று வணிக நிறுவனங்களை மிரட்டலாம்!

தமிழ் மரபையும் விட்டுவிடக்கூடாது.  அதே நேரத்தில் ஒயிலான, தற்காலப் பெயர்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும்.  இதற்கு ஒரே வழி ஆங்கிலப் பெயர்களை அப்படியே ஏற்பதுதானா?

இது ஔவைப் பாட்டி மினி ஸ்கர்ட் போடுவது போலவா?  அல்லது என்றும் இளமையாய் இருக்கும் தமிழால் இதையும் தாங்க முடியுமா?

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்

தமிழில் கலைச்சொற்கள் படைப்பது பற்றிய காரசாரமான கருத்து வேற்றுமைகளைக் கடந்த பல ஆண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறேன்.  கலைச்சொற்களைப் படைக்கும்போது தனித்தமிழ்ச் சொற்களைப் படைக்கலாமா கூடாதா என்பதில் உரத்த கருத்தாடல்கள் இன்னும் தொடர்கின்றன.  விஞ்ஞானம் என்றுதான் எழுத வேண்டுமா அல்லது அறிவியல் என்று எழுதலாமா என்று கனடாவின் ஜெயபாரதன் அவர்களும் பேரா. செல்வகுமார் அவர்களும் அடிக்கடி தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் மோதிக் கொள்வார்கள்.

தனித்தமிழில் எழுத வேண்டும் என்போர் தாலிபான்கள் என்றே குற்றம் சாட்டுவார் வன்பாக்கம் விஜயராகவன்.  அதை இப்போது ஜெயபாரதன் அவர்களும் வழிமொழிகிறார்.

தனித்தமிழில் கலைச்சொல் படைப்பது பற்றி(ப்) பாரதியாரும் எழுதியிருக்கிறார். மெம்பர் என்ற சொல்லுக்கு இணையான தனித்தமிழ்ச் சொல்லைப் படைக்கச் சற்றுத் தடுமாறியும் இருக்கிறார் பாரதி.  இன்று நாம் உறுப்பினர் என்று வெகு இயல்பாகச் சொல்லும் ஒரு சொல் பாரதியையே ஒருகாலத்தில் தடுமாற வைத்திருப்பது கலைச்சொல்லாக்கத்தைப் பற்றி நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

ஆங்கிலத்தில் இருந்து கலைச்சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்க வந்த அறிஞர்கள் பெரும்பாலும் வடமொழிப் புலமையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு வெகு இயல்பான மொழிபெயர்ப்பாக இருந்த சொற்கள் இப்போது நமக்குப் புரியாத சொற்களாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:
சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம்,  அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்
தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழார்வலர்கள் பெருமுயற்சி செய்திருந்தாலும், கலைச்சொல்லாக்கக் குழுவினர் வடமொழிச் சொற்களையோ அல்லது ஆங்கிலச் சொல்லையோ அப்படியே கையாள்வதையே 1940களில் முறையாக் கொண்டிருக்கிறார்கள்.

தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் தலைமை ஆசிரியராகவும் சென்னைப்பல்கலையின் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும்  விளங்கிய இராவ்சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

”கலைச்சொல்லாக்கம் என்ற தொடர் இப்பொழுது எங்கும் முழங்குகிறது.  மாநாடுகள் கூட்டப் படுகின்றன. சாதிச் சச்சரவுகளை விளைத்துத் தம் ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்ள இதுவே தக்க நேரம் என்று பலரும் இதில் சேர்ந்துள்ளார்கள்.  பலவகை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன,” என்று சாடியிருக்கிறார் பேரா. வையாபுரிப் பிள்ளை.

இந்தக் கண்ணோட்டம் மிக முக்கியமானது.  தனித்தமிழ் இயக்கம் என்பது சாதிச் சச்சரவாளர்களின் ஆயுதமாகக் கருதப்படும் வரையில், அது முழுவெற்றி பெறுவது கடினம்.  மேலே குறிப்பிட்ட, மக்களுக்குச் சற்றும் விளங்காத, பிறமொழிச் சொற்களைத் திணிப்பதை விடத் தாய்மொழியில் கலைச்சொற்களைப் படைத்து அவற்றைப் பரப்புவதுதான் உயர்ந்த செயல்.  ஆங்கிலம் வெகுவாகப் பரவியிருக்கும் இக்காலத்தில் ஏன் ஆங்கிலச் சொற்களையே எடுத்தாளக் கூடாது என்பதற்கு, மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு நல்ல பாடம்.  1941ல் கற்றவர்களுக்கு, வடமொழிச் சொற்களே வெகுவாகப் பரவியிருப்பது போலத் தோன்றியிருக்கிறது.  அது அவர்கள் சுற்றத்தில் உண்மையாகவே இருந்திருக்கலாம்.  ஆனால்,  ஒரு காலத்தில் ஐரோப்பாவின் செவ்வியல் மொழிகளான லத்தீன, கிரேக்க மொழிகளின் வேர்ச்சொற்களைக் கொண்டு ஆங்கிலத்தில் கலைச்சொற்களைப் படைத்தது போலவே, இந்தியாவின் செவ்வியல் மொழியான சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்துக்குமே கலைச்சொற்களைப் படைக்க முயன்றனர்.  இது சமஸ்கிருதம் பெரிதும் கலந்திருந்த ஏனைய இந்திய மொழிகளுக்கு வெகுவாகப் பொருந்தியிருந்தாலும், தனித்தியங்கும் தன்மை உள்ள இந்தியாவின் இன்னொரு செவ்வியல் மொழியான தமிழுக்குப் பொருந்தாது, தேவையற்றது.

வையாபுரிப் பிள்ளையின் இந்தக் கண்ணோட்டத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார் சேலம் கல்லூரியின் தலைவர் அ. இராமசாமி கவுண்டர்.  இவர்கள் இருவரும் 1941ல் அமைக்கப் பட்ட, ஆங்கிலப் பேராசிரியர் சுவாமிநாத அய்யர் தலைமையில் அமைந்த, தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவில் நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். அதைப் பற்றி  இராமசாமிக் கவுண்டர் “குடியரசு” இதழில் டிசம்பர் 4, 1943ல் எழுதியிருக்கிறார்.  அதைச் “செந்தமிழ்ச் செல்வி” என்ற தனித்தமிழ்த் திங்களிதழ் 1944 தைத் திங்கள் வெளியீட்டில் எடுத்து எழுதியிருக்கிறது

அவர்கள் உரையாடல் மிகச் சுவையாக இருந்திருக்கிறது.  நினைவிருக்கட்டும், இது இராமசாமிக் கவுண்டர் கண்ணோட்டம்.

இரா:  சாஸ்திரம் என்ற சொல்லைக் காட்டிலும் நூல் என்ற சொல்லே மிகப் பொருத்தமாக உள்ளது.  ஆதலால் நூல் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ள உம்மை வேண்டுகிறேன்.

வை: அரிய விஞ்ஞான கருத்துக்களைத் தொகுத்தும், விரித்தும், ஒழுங்குபடுத்திச் சிறந்த வகையில் கூறுவது சாஸ்திரம் எனப்படும். ஆனால் நூல் என்பது ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வடிவத்தைக் குறிப்பதாகும். ஆதலால் கணித நூல் என்பதைக் காட்டிலும் கணித சாஸ்திரம் என்பதே அதிகப் பொருத்தமுடையது.

இரா: தாங்கள் கூறிய இவ்விலக்கணத்திற்கு ஆதாரம் உளதோ?

வை: ஆதாரம் ஒன்றும் இல்லை.  யாமே இவ்வாறு வகுத்துக் கொண்டு அதன்படியே பிறவிடங்களிலும் கையாண்டு வருகின்றோம்.

இரா: இது உமது சொந்தக் கற்பனையெனின், சாஸ்திரத்தின் இலக்கணத்தை நூலுக்கும் நூலின் இலக்கணத்தைச் சாஸ்திரத்துக்குமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாமே?  நூல் என்ற சொல்லுக்குத் தாழ்ந்த பொருளும் சாஸ்திரம் என்ற சொற்கு உயர்ந்த பொருளும் கற்பிக்கப் படுவதன் நோக்கம் யாது?

வை: அது உலக வழக்கு.

இரா: நூல் என்பதும் சாஸ்திரம் என்பதும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்களாகவே உலகில் வழங்குகின்றன. வியாகரண சாஸ்திரம் என்பதும் இலக்கண நூல் என்பதும் ஒரு பொருளையே குறிக்கின்றன. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பதிப்பிக்கப் பட்ட (Tamil Lexicon) தமிழ் அகராதியில் நூல் என்ற சொல்லு க்கு,   "Systematic treatise, science சாஸ்திரம்” என்ற பொருள் குறிக்கப் பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளுவதா அல்லது தங்கள் புதிய பொருளைக் கொள்வதா?

வை: பல்கலைக் கழக அகராதியிலுள்ள பொருள் சரியன்று. அது அவசரத்தால் நேர்ந்த பிழையாகும்.


இரா: தொல்காப்பியத்தில் நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது.

“ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை, மெய்ப்படக் கிளந்த வகையதாகி யீரைங்குற்றமும் இன்றி நேரிதின் முப்பத்திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்கு மொழிப் புலவர்”

என்பது நூலின் இலக்கணமாயிருக்க உங்கள் விருப்பப்படியெல்லாம் தமிழர் மரபுக்கு முரண்படப் பொருள் கொள்ளுதல் முறையல்லவே?

வை: நூலும் சாஸ்திரமும் ஒரு பொருள் குறிப்பனவாயின் சாஸ்திரம் என்ற சொல்லை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கின்றீர்கள்?

இரா: சாஸ்திரம் என்பது வடசொல்.  நூல் என்ற தூய தமிழ்ச் சொல்லிருக்க அதே பொருளுடைய பிற சொல்லைப் புகுத்துதல் நீதியன்று.  மேலும், இது தமிழ்ச் சொல்லாக்கக் கமிட்டியேயன்றி வடசொல்லாக்கக் கமிட்டியல்ல என்பதைப் பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.

வை: சாஸ்திரம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். அது தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழில் இரண்டறக் கலந்த சொல்லெல்லாம் தமிழ்ச் சொல் என்பதே எமது துணிபு.

இரா: உங்கள் கொள்கை எனக்கு வியப்பைத் தருகிறது.  சாஸ்திரம் என்ற சொல் சமய நூல்களில் காணப் படலாம். ஆனால் அதனாலேயே அது தமிழ்ச் சொல்லாகாது. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா ஆரியச் சொல்லா என அறிவதற்குப் பல முறைகளுண்டு.  அவற்றுள் ஒன்றினாலாவது உங்களது கொள்கையை நிலைநாட்ட முடியாது.

வை: அடிப்படையான கொள்கையிலேயே உமக்கும் எமக்கும் கருத்து வேற்றுமையுண்டு.  ஆதலால் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.  கமிட்டித்தலைவர் திரு. கே. சாமிநாதன் தமது விருப்பப்படியே தீர்ப்புச் செய்துகொள்ளட்டும்.

இரா: அப்படியே ஆகட்டும்.  சாஸ்திரம் என்ற சொல்லே இக்கமிட்டியால் ஒப்புக்கொள்ளப்படும் என்பதை நான் அறிவேன். ஆனால், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதையும் பிற்காலத்தில் தமிழர்கள் வீறிட்டெழுந்து சீறுவாராயின் அவர்களுக்குச் சமாதானம் கூறும் பொறுப்பு உங்களுடையதாகும் என்பதையும் உங்கட்கு அறிவிக்கின்றேன்.”
[ மணி:  பேரா. வையாபுரிப்பிள்ளை பல்கலைக் கழக அகராதிக்குழுவின் தலைவர்.  அவர் நூலையே அவருக்கு எதிராகச் சான்றுக்கு அழைத்திருக்கிறார் இராமசாமிக் கவுண்டர்! ]
இந்த உரையாடலைப் பற்றிக் குடியரசு ஏட்டில் எழுதிய இராமசாமிக் கவுண்டர் வையாபுரிப் பிள்ளையின் கொள்கையைப் பொதுமன்றங்களிலும் எதிர்த்து விளம்பரப் படுத்தாதனால் அவரால் பெரும் தீங்கு விளைவிக்க முடிந்ததே என்று வேதனைப் பட்டு “உட்பகையை” வெல்ல வேண்டியதன் கட்டாயம் பற்றி எழுதித் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.
“வடமொழியினின்றும் தமிழைக் காக்குமுன் உட்பகையுடைய தமிழரினின்றும் அதைக் காக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் தமிழ் மக்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இதை 2011லிருந்து பார்க்கும் நமக்கு மலைப்பு மேலிடுகிறது.  அன்று வையாபுரிப் பிள்ளையின் கொள்கை வென்றிருந்தாலும், இன்று சாஸ்திரம் என்ற சொல் தமிழ் கலைச்சொற்களில் வெறும் அடிக்குறிப்பு மட்டுமே.  இயல், நூல் என்ற தனித்தமிழ்ச் சொற்கள் காலத்தால் நிலைத்து விட்டன.  விஞ்ஞானம் என்ற சொல் 1960களோடு உறைந்து விட்ட சொல்.  விஞ்ஞானி என்ற சொல் மட்டும் வழக்கில் இருக்கிறது. இன்று அறிவியல் என்ற சொல்லே பெரிதும் வழங்கும் சொல்.

ஆயிரம் குறைகள் இருந்தாலும், தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டில் ஓரளவுக்காவது முந்தைய வடமொழி ஆதிக்கத்தைத் தணித்து இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடிகிறது என்றால், 1967ல் நடந்த அரசியல் மாற்றங்களும் இதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வையாபுரிப்பிள்ளை மட்டுமே அறிவியல் முறைப்படி நடந்தவர் என்றும் அவரை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தினர் சாதி, இனக்காழ்ப்புணர்ச்சி மேலிட்ட சிறுமதியினர் என்றும் ஒரு தோற்றத்தை அண்மைக் காலத்தில் ஒரு சாரார் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த உரையாடலைப் படிக்கும்போது திரு வையாபுரிப் பிள்ளை ஒரு சட்டாம்பிள்ளை போன்று பேசியிருக்கிறாரே ஒழிய அறிவியல் சார்பான கொள்கைகள் எதையும் அவர் முன் வைத்ததாகத் தெரியவில்லை.  அதற்கு அவர் எழுதிய நூல்களைப் படித்தால்தான் விளக்கம் காணலாம்.

எது எப்படியோ, தனித்தமிழில் கலைச்சொற்கள் ஆக்கிவந்திருக்கும் அறிஞர்கள்  எத்தகைய கடும் எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொண்டு வென்றிருக்கிறார்கள் என்பது மலைப்பு தருகிறது.

இது போன்ற எதிர்ப்புகள் எவையும் இல்லாமலேயே இணையம், கணினி போன்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பட்டிதொட்டி எல்லாம் பரப்ப முடிவதற்கு அந்த முன்னோடிகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

சனி, ஜனவரி 15, 2011

தமிழ் கொடிப் பாட்டு

நான்கு தமிழ்க் கொடி காணீர் - அது
வான்கண் உயர்ந்திடும் வகையினைப் பேணீர் (நான்கு)

மந்திர மன்னதோர் கம்பம் - முது
இந்திரன் தன்னைநேர் ஐவர் பூங்கொம்பில் (நான்கு)

மருத நிலந்தரு மாந்தர் - கொடை
எருது சிறந்த நல் ஏரது தேர்ந்த (நான்கு)

வாழைப் பழந்தரும் நாடு - பழஞ்
சோழர் திகழ்ந்தபோர்ப் புலிய்தன் கோடும் (நான்கு)

குறிஞ்சிப் புலத்துமுன் செல்லும் - திறம்
செறிந்துயர் சேரர்தம் வீரஞ்சேர் வில்லும்

நெயதல் நிலந்தலை செயலும் - கடல்
கொய்து பிறந்தநம் பாண்டியர் கயலும் (நான்கு)

நான்கு புறம்நூ றுடையீர் - தமிழ்
நான்கு அகம்நூ றுடையதென் றுரையீர் (நான்கு)

நாகரிகங் கண்ட பெரியீர் - தமிழ்
ஆகம் வேண்டுமென்றே ஆண்மையோ டெழுவீர் (நான்கு)

- முனைவர் எஸ். எம். நமசிவாயம்
செந்தமிழ்ச்செல்வி, மாசி, 1944, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்த பொங்கல் பரிசு

எனக்கு இன்று பொங்கல் பரிசு கிடைத்தது!  தமிழ் நூல்கள் படிப்பதிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, எனது மருமகன் தன் ஊரான பொன்னேரிக்கு அருகில் இருக்கும் பழைய புத்தகக் கடையிலிருந்து பல அரிய நூல்களைக் கொண்டு வந்தான்.  உ. வே. சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்த சங்கநூல்கள் முதல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட செந்தமிழ்ச் செல்வி என்ற திங்களிதழ்களின் தொகுப்பு நூல் வரை ஆறு நூல்கள் கைக்குக் கிட்டின.  செந்தமிழ்ச் செல்வியின் பதிப்புகளை வலையில் நான் பார்த்ததில்லை.  எனவே பொங்கல் விருந்துக்குப் பின்னர் இந்தப் பழைய நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

நூல் வெகுவாகச் செல்லரித்துப் போயிருந்தது.  சில பக்கங்களில் எண்ணைக் கறை தெரிகிறது.  இருந்தாலும், பக்கங்கள் உதிரத் தொடங்கவில்லை.  எல்லா நூல்களிலும் ஒரே உரிமையாளரின் பெயர்தான் இருக்கிறது.  பெயர் பழைய காலத்துத் தமிழ் எழுத்தில் உள்ளது.  “நா. சட்டையப்பன், மதராஸ்” என்று உள்ளது.  ‘ர’ என்ற எழுத்து ‘ற’ போலும் உள்ளது.  தமிழாசிரியர் ஒருவரின் நூலகத்திலிருந்து பழைய புத்தகக் கடைக்குப் போட்டிருப்பார்கள் போலும்.  என்னைப் போன்ற புத்தகப் பைத்தியங்களுக்கு இதுதான் வேலை இல்லையா?  எங்கே போனாலும் கைக்காசைச் செலவழித்துப் புத்தகங்கள் வாங்குவது.  வீடெங்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது.  படுக்கை அறையிலும், தரையிலும், கண்ணுக்கெட்டிய இடங்களில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்.

என் அப்பா இறக்கும் வரை அவரது புத்தகங்களைப் படிப்போமே ஒழிய, இரவல் கேட்கும் அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இல்லை.  கடைசி காலத்தில் அவரால் இரண்டாம் மாடியில் இருக்கும் நூலகத்துக்குப் படியேறிச் செல்ல முடியவில்லை.  மழைச்சாரலிலும், புழுக்கத்திலும் அவர் அருமை அருமையாகச் சேமித்து வைத்திருந்த பல புத்தகங்கள் நனைந்து, நைந்து செல்லரித்துப் போகத் தொடங்கி இருந்தன.  அவரைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கு அவரது நூலகத்தைப் பார்த்துத் தூக்கி வாரிப் போட்டது.  நைந்து போன நூல்களைத் தூக்கிப் போட்டு விடலாமே என்றேன்.  அதுதான் சொன்னேனே!  யாருக்கும் துணிச்சல் இல்லை என்று!  திடீரென்று அவர் ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டுவா என்றால் என்ன செய்வோம் என்ற பயம்.

கடைசியில், அவர் நகரக் கூட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும்போது,  அவரது படுக்கை அறையிலேயே குப்பையாய்க் கிடந்த பல புத்தகங்களையும், கோப்புகளையும் துப்புரவு செய்யத் துணிந்தேன்.  நான் என்ன செய்கிறேன் என்பதை ஓரக் கண்ணில் பார்த்தார்.  சிங்கம் போல அவர் தன் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த காலத்தில் அவரது அறைக்குள் நுழையக் கூட எவருக்கும் துணிச்சல் இருந்ததில்லை.  ஒரு புத்தகத்தைச் சற்று நகர்த்தி வைத்திருந்தால் கூட அவர் கண்டு பிடித்து விடுவார்.  உடனே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் அணி வகுப்பு நடக்கும்.

என்னுடன் பிறந்தவர்களும் நானும், அவர் முன்னால் வரிசையாக நிற்போம்.  அவர் கையில் குற்றவாளிகளை அடிக்கும் பிரம்பு ஒன்றை எடுத்துக் கொள்வார்.  சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு வகையான தோல் அந்தப் பிரம்பைச் சுற்றி இருக்கும்.  குற்றவாளிகளின் ரத்தத்தால் அந்தப் பிரம்பு சிவப்பானதா, அல்லது அதன் உண்மை நிறமே சிவப்பா என்று தெரியாது.  பழைய படங்களில் வரும் காவல்துறை கண்காளிப்பாளர் போல, வலது கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு அவரது இடது கை உள்ளங்கையில் மெல்லத் தட்டிக் கொண்டே “யார்ரா புத்தகத்தைத் தொட்டது” என்று விசாரணையைத் தொடங்குவார்.

தொண்டைக்குழியிலிருந்து வார்த்தை வந்தால்தானே பதில் சொல்ல முடியும்?  தேவர்மகன் படத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பின்னும் தூணுக்குப் பின்னால் நெளிந்து கொண்டு சிவாஜி அப்பாவிடம் அடிக்குரலில் பேசுவாரே கமல் ஹாசன்.  அது எங்கள் வீட்டுக்கும் அப்படியே பொருந்தும்.  நான் தான் மூத்தவன்.  அப்போதும் நான் புத்தகப் பைத்தியம்.  தம்பி தங்கையர் எல்லோரும் நடுநடுங்கிப் போய் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  எனக்கு யாரையுமே பார்க்கும் துணிச்சல் இருக்காது.  சமையலறையிலிருந்து கையில் கரண்டியோடு என் அம்மா வந்து கூடத்தின் ஒரு மூலையில் கவலையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  புத்தகத்தைத் தொட்டது யாராக இருக்கும் என்று இதற்குள் அப்பாவுக்குத் தெரிந்திருக்கும்.  இருந்தாலும், குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை அவர் சளைக்கப் போவதில்லை.

குற்றவாளிகளைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் அப்பா. எல்லோருக்கும் ஏதாவது ஒரு பட்டப் பெயர் இருக்கும்.  சில சமயம் என்னைப் போன்ற அதிசயப் பிறவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் இருக்கும்.  கல்லூரி செல்லும் வரைக்கும் கூட இந்தப் பட்டப் பெயர்கள்தாம் நிலைத்திருந்தன என்பதை இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.  அப்பாவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தக் கடைசி வரைக்கும் துணிச்சல் இல்லாமல் இருந்தாலும், இந்தப் பட்டப் பெயர் ஒழிப்புப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து அவற்றை வேரோடு அழித்த வீரன் நான் தான்.

இருப்பதிலேயே நடுநடுங்கிக் கொண்டிருப்பது யார் என்று பார்ப்பார் அப்பா.  “அம்மா, ஒண்ணுக்கு வருதும்மா” என்று ஒரு கோழை ரீங்காரம் வைக்கும். மடை திறந்த வெள்ளம் போல் அம்மாவின் பாசம் பொங்கி விடும்.  ”பாவம் குழந்தைங்க.  புத்தகம் ஒண்ணும் கிழியல இல்ல? விட்டுடுங்க!” என்று துணிச்சலாக அம்மா சொல்லி விட்டு அப்பாவின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுவார்.  அது வரைக்கும்,   சாம, தான, பேத, தண்ட முறைகளை ஒவ்வொன்றாய்க் கடைப்பிடிக்கலாம் என்று நினைத்திருந்த அப்பா, இந்த தான, பேத முறைகளைக் கை விட்டு விட்டு நேரடியாகத் தண்ட முறைக்குத் தாவி விடுவார்.

எனக்கு அடி விழுவது யாருக்கும் பிடிக்காது.  அது ஏன் என்று தெரியாது.  வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் இருந்த செல்லமோ என்னவோ.  என்னைக் காப்பாற்ற வேண்டும், ஆனால் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் முயல்வார்கள்.  ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே யார் குற்றவாளி என்று அப்பாதான் தீர்மானித்து விட்டாரே.  “ஒண்ணுக்குப் போற நாயி போயிட்டுக் காலைக் கழுவிட்டு உடனே வா! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்,” என்று கர்ஜிப்பார்.

உடனே அணிவகுப்பு கலைய முயற்சிக்கும்.  “ம்ம்ம்” கர்ஜனை வரும்.  “ஒரு நாயைத்தான் சொன்னேன்.  மத்ததுங்க எல்லாம் இங்கேயே நில்லுங்க!”  நிற்போம்.  பாவம் சின்னது, அதற்கு அடக்க முடியாது.  ஓடிப் போய் குளியறையில் பதுங்கிக் கொள்ளும்.  அம்மாவுக்கோ அழுகையும் ஆத்திரமுமாய் இருக்கும்.  “குரங்குங்க, எத்தனை அடி வாங்கனாலும் புத்தி வராது. அப்பா புத்தகத்தைத் தொடாதீங்கன்னா கேக்காதுங்க.”  உண்மைதான்.  தொடாமல் இருந்தால் இந்தக் குற்றவாளி அணிவகுப்பு தேவையிருந்திருக்காதுதான்.  ஆனால், நான் தான் தொடவே இல்லையே.  சத்தியமாய்!  ஆனால், எல்லோரும், அப்பா உட்பட, நான் தான் குற்றவாளி என்று முடிவு கட்டி விட்டார்கள்.  உண்மையிலேயே யார் புத்தகத்தைத் தொட்டிருப்பார்கள் என்று யோசித்தேன்.  இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு வேறு யாரும் புத்தகப் பைத்தியம் இல்லை.

ஆனால், புத்தகம் நகர்ந்திருந்தது.

அது எங்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது.  ஏனென்றால், அப்பாவின் உடமைகள் எங்கே எப்படி இருக்கும் என்று எங்கள் எல்லோருக்கும் மனப்பாடம்.  தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூடச் சொல்லுவோம்.  அம்மா தப்பித்தவறிக் கூட அப்பாவின் புத்தகங்களைத் தொட மாட்டார்கள்.  சின்னத்தம்பி அப்போதுதான் படிப்பது பாவம் என்ற நம்பிக்கையைச் சற்றுத் தளர்த்தத் தொடங்கி இருந்தான்.  தங்கைகள் இரண்டும் பாவம்.  கோலம் போட்டு, வீட்டைப் பெருக்கி, காய்கறி நறுக்கி, வீட்டுப்பாடம் போட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கி, அவர்கள் உலகத்திலிருந்து மீண்டு வரவே நூற்றாண்டுகள் ஆகுமே அவர்கள் தொட்டிருக்க வாய்ப்பில்லை. குட்டித்தம்பி குளியலறையிலிருந்து இன்னும் வரவில்லை.  அவனாய் இருக்குமோ?

விசாரணை தொடரும்.  எங்களுக்கு ஒரு ஒற்றுமை இருந்தது.  காட்டிக் கொடுக்க மாட்டோம்.  தண்டனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வோமே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டோம்.  அப்பாவின் பிரம்பு எல்லோருடைய பின்னங்காலிலும் விளையாடும்.  அம்மாவின் உரத்த குரல் எதிர்க்க எதிர்க்க பிரம்பின் வேகம் இன்னும் கூடும்.  வலியில் துடிதுடித்துப் போய் விடுவார்கள் என் இளையவர்கள்.  பொதுவாக, அடித்தால் அழுவதில்லை என்று நான் சின்ன வயதில் எப்போதோ ஒரு உறுதி பூண்டிருந்தேன். அதை எந்த அளவு கடைப்பிடித்தேன் என்று மற்றவர்களைக் கேட்டால்தான் தெரியும்.  ஆனால், எனக்குள்ளே நான் அழுததில்லை, அரற்றியதில்லை என்ற நினைப்பு.  அதனால், அடிகள் சற்றுக் கூடுதலாக, வலுவாகக் கிடைக்கும்.

அடிக்கும்போது நகரக் கூடாது.  ஓடக் கூடாது. நெளியக் கூடாது.  அப்பாவுக்குக் கை வலிக்கக் கூடாது. ஓடினால் அப்பா திட்டுவார்.  “சனியனே, ஓடாதே, இங்கே கிட்ட வந்து நின்னு அடி வாங்கிக்க.”  எங்களுக்கு அழுகை கூடக் கூட அம்மாவின் ஓலமும் கூடி விடும்.  மருந்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஓடி வ்ந்து விடுவார்கள்.  அம்மாவின் மீது தப்பித் தவறி ஏதாவது அடி விழுந்து விடுமோ என்று நாங்கள் அம்மாவுக்கு அரண் வகுப்போம்.  அலறி அழுதவர்களை முன் கூட்டியே விடுதலை செய்து விடுவார் அப்பா.  “ஊரைக் கூட்டுதுங்க, சனியனுங்க.  வெச்சத வெச்ச எடத்தில இருக்க வேணா?  கொரங்குங்க.”  அப்பாவின் கர்ஜனையில் தெருவே அடங்கி விடும்.  குழந்தைகளுக்குப் பரிந்து பேச வரும் அக்கம்பக்கத்துக் காரர்களையெல்லாம் தனது சுடு சொல்லாலும், எரி பார்வையாலும், அப்பா எப்போதோ விரட்டியாயிற்று.  அத்தனையையும் மீறிப் பரிந்து பேச யாருக்குத் துணிச்சல் இருக்கும்?

பாட்டிக்கு.

ஆனால், பாட்டி வருவது எப்போதாவது ஒரு முறைதானே.  நான் பாட்டி செல்லம்.  அப்பாவையே அதட்டி வைத்து என்னைக் காப்பாற்ற முடிந்தது பாட்டியால் மட்டும் தான்.

வெளியே அழுகை இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருப்பேன்.   இறந்து போன பாட்டியைத் துணைக்கு அழைத்து மனதுக்குள் அப்பாவுக்குப் புத்தி கொடுக்கும்படி வேண்டிக் கொள்வேன்.  அது என்னவோ தெரியவில்லை, இந்த வேண்டுதல் வேண்டாமையெல்லாம் எனக்கு மட்டும் வேலை செய்ததில்லை.  அது கடவுளாகட்டும், பாட்டியாகட்டும்.  எது கிடைத்ததோ அது கிடைக்கக் கடுமையாக உழைத்ததைத் தவிரத் தப்பித் தவறிக்கூட கடவுளின் அருள் நான் கேட்ட போது கிடைத்ததில்லை.

ஏனைய பாளையக்காரர்களையெல்லாம் அடித்துக் களைத்துப் போய் எரிச்சலின் உச்சத்தில் இருக்கும் அப்பா “ஏண்டா, தடிமாடே, எடுத்தேன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவே” என்று என்னைப் பார்த்து உறுமுவார்.  “நான் எடுக்கலயே அப்பா” என்று அடி வயிற்றிலிருந்து சொல்லுவதற்கு ஒலி எழுப்ப முயற்சிப்பேன். எந்தச் சொல்லும் தொண்டைக் குழியைக் கூட எட்டியதாய் நினைவில்லை.  என்னைத் தொடர்ந்து அடிப்பதால் தனக்குத்தான் களைப்பு கூடும் என்று தீர்மானித்து எனக்குச் சிறப்புத் தண்டனை தருவார் அப்பா.

சில சமயம் முட்டிக்கால்.  சில சமயங்களில் ஒற்றைக்கால்.  பெரும்பாலும் சுவர் நாற்காலி.  இந்தச் சுவர் நாற்காலி என்பதை யார் கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை.  நாற்காலியில் உட்காருவது போல சுவற்றில் சாய்ந்து கொண்டு அந்தரத்தில் மிதக்க வேண்டும்.    முதலில் சுகமாக இருக்கும். அதுதான் அடி நின்று விட்டதே.  பின்னங்கால் அடி வாங்கிக் கன்னிப் போய் இருக்கும்.  அம்மா உதவிப் படைக்குக் குற்றவாளிக்குக் களிம்பு தடவ அனுமதி மறுக்கப் பட்டிருக்கும். 

அப்பாவுக்கும் பசி.  எல்லோருக்கும் பசி.  ”வளத்து வச்சிருக்கா பாரு” என்று அம்மாவைத் திட்டிக் கொண்டே சாப்பாடு ரெடி பண்ணு என்று கட்டளையிட்டு விட்டுக் கைகால் கழுவப் போய் விடுவார் அப்பா.  “எடுத்தேன்னு சொல்லிடுடா கண்ணு” என்று அம்மா மன்றாடுவார்.  “நான் தொடலையே அம்மா!”  இப்போது மட்டும் இந்த ஒலி தொண்டையிலிருந்து எப்படியோ வெளியே வந்திருக்கும். 

அரை மணி நேரம், ஆடாமல் அசையாமல் சுவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பேன்.  உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் வலி, வலி என்று முனகும்.  ஆனால், மனது இருக்கிறதே.  அது விட்டுக் கொடுக்காது.  உண்மையான குற்றவாளிகளைச் சிறையில் அப்பா எப்படி விசாரிப்பார் என்று தெரியாது.  துப்பாக்கிகளும் காக்கிச்சட்டைகளும் ஆண்ட அப்பாவின் உலகத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாது.  அடிக்கடி அவருக்கு ஏதாவது மேலிடத்து விருது வந்து கொண்டிருக்கும்.  ஏதாவது கடத்தல்காரனை அடக்கிப் பிடித்துச் சிறையில் அடைத்து வைப்பார்.  அவனும், மேலிடத்துப் புண்ணியத்தில் சிறிது காலம் சிறையில் இருந்து விட்டு வெளியே போவான்.  கடத்தல்காரர்களின் குழந்தைகள் எல்லோரும் என்னுடன் தான் படித்தார்கள்.  ஆனால், நாங்கள் யாருமே எங்கள் வீடுகளைப் பற்றிப் பேச மாட்டோம்.

‘இந்த வயசுலே எத்தன அழுத்தம் பாரு? தப்பை ஒத்துக்குதா பாரு!’ என்று திட்டிக் கொண்டே, அம்மாவைப்பார்த்து ‘ஏய், இந்தக் கொரங்குக்கும் சாப்பாடு போட்டுத் தூங்க வை!” என்று அப்பா ஆணையிடுவதோடு அன்றைய தண்டனை முடிவுக்கு வரும்.

பழைய புத்தகங்களைப் புரட்டும்போது பழைய நினைவுகளும் வருவது இயல்புதானே.  எப்போதோ வாங்கிய அடி.  இப்போதும் வலித்தது. அப்பாவின் பழைய புத்தகங்களைக் கிளறிக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய அட்டைப் பெட்டி கையில் கிடைத்தது.  அதைத் திறந்து பார்த்தேன்.  அமெரிக்காவிலிருந்து நான் அப்பாவுக்கு அனுப்பிய ஒரு கடிதம் விடாமல் எல்லாவற்றையுமே அழகாக, தேதி வாரியாகப் பிரித்து, பிளாஸ்டிக் உறையில் பாதுகாத்து வைத்திருந்தார். என்னுடைய பழைய கல்லூரி அடையாள அட்டை,  நான் எப்போதோ கல்லூரி மலருக்கு எழுதிய கதை, நான் மறந்து போய் விட்டிருந்த எனது கவிதை நோட்டு, எனக்குப் பல்கலைக் கழகத்தில் கிடைத்த தங்கப் பதக்கச் சான்றிதழ், என்று எனது இந்திய வாழ்க்கையின் ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்தார்.  பழைய புத்தகங்களின் தூசோ என்னவோ கண்கள் கலங்கியிருந்தன.

ஜார்ஜ் ஹார்ட் - செம்மொழி மாநாடு வாழ்த்துரை - ஜூன் 23, 2010

George Hart June 23, 2010

President Patil, Governor Surjit Barnala, Kalainar Karunanidhi, Ministers Anbazhagan and
Stalin, Honorable Kanimozhi, Professors Avvai Natarajan, Kothandaraman, Kulandaiswamy,
Mahadevan, Parpola, Rajendran, Ramaswamy, Rangan and Sivathamby and Thiru Allaudin ,
Gnanadesigan and Sripathi, I should like to begin my remarks by thanking the Honorable Chief
Minister, Kalainar Karunanidhi, for conceiving and arranging this wonderful conference that
brings together Tamil scholars from all over the world. I should also like to thank Dr. Rajendran
and others who have labored tirelessly to make it possible. I take great pleasure in
acknowledging the presence of the President of India, whose attendance at this seminal event is
testimony that the great works of classical Tamil are a vital part of the heritage of all Indians.

Many years ago the great poet Bharathiyar wrote,
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

In this spirit, let us all hope that this Classical Tamil Conference helps to spread the knowledge
of and research in classical Tamil throughout the world.

Let me say a few words about why Tamil is a classical language. Over 2000 years ago, two
historical processes converged in what is today Tamil Nadu, Kerala and northern Sri Lanka. The
first was the development of a rich and highly refined oral literature, and the second was the
common adoption of writing in the Brahmi alphabet. As a result of these two events, a written
literature in Tamil arose in imitation of the rich folk sources in the countryside, and over the next
few hundred years this body of writing became a wonder, including thousands of poems that are
still among the finest ever written. Today, we call the works that were produced in that explosion
of creativity Sangam literature.

Until A. K. Ramanujan began to translate some of the great Sangam poems into English,
classical Tamil literature was almost unknown outside of Tamil Nadu. The excellence and
profundity of Sangam literature was a secret kept from the world and few suspected that Tamil
was a classical language that could rival Latin or Sanskrit. This situation is only now beginning
to change, and the recent recognition of Tamil as a classical language by the Government of
India attests to that fact. It is strange to me that I still hear voices questioning whether Tamil is a
classical language, as its stature and status are obvious to anyone who has read any of the great
Sangam works.

It is important to keep in mind that Tamil arose independently, indebted to no source other
than itself and the people who created it. Unlike other Indian languages, it did not base itself on
a pre-existing tradition in Sanskrit or Persian-Arabic but used its own conventions and styles.
The vocabulary it used was almost exclusively its own, not words borrowed from any other
language. This means that it has its own excellence, its own traditions, its own .KL.NO.
will speak of this at length in the paper I present and suggest how Tamil, from the beginning, is
different from Sanskrit and other traditions.

The poetic quality and grandeur of Sangam literature is extraordinary. The poems written
2000 years ago show an awareness of the human condition, of human experience, of suffering and joy that is the equal of anything in Sanskrit or Greek. Let me read a poem, puṟanāṉūṟu புறநானூறு 182, by கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதி kaṭaluṇ Māynta Iḷamperuvaḻuti that demonstrates the extraordinary quality of this literature.


        உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
        அமிழ்த மியைவ   தாயினு மினிதெனத்
        தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
        துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
        புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
        உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
        அன்ன மாட்சி அனைய ராகித்
        தமக்கென முயலா நோன்றாட்
        பிறர்க்கென முயலுன ருண்மையானே

This world exists because men exist who even if they
were to win the divine drink of the gods would not drink it
by themselves only thinking of its sweetness, men without
hate, without slackness in action though they may have fears
like the fears of other men, who would even give their lives 5
for fame but would not accept fame with dishonor were it
to gain them all the world, men who have no regrets, and with virtues
so exalted, never exert their powerful energies
for themselves but only for others. It is because they exist that we do!

Finally, I would like to conclude this வாழ்த்துரை with some lines taken from the வேட்கைப்பத்து of the ஐங்குறுநூறு:
வாழி ஆதன்! வாழி அவினி!
நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
விளைக வயலே! வருகவிரவலர்!
 பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பசியில்லாகுக!  பிணிசேணீங்குக!
அறம்நனி சிறக்க! அல்லவை கெடுக!
அரசுமுறை செய்க! களவில்லாகுக!
நன்று பெரிது சிறக்க! தீதில் ஆகுக!
மாரிவாய்க்க! வளம் நனி சிறக்க!

சொல்வளம் - உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” வலைப்பூ இன்று தொடங்குகிறது...

நண்பர்களே,

ஆங்கிலத்தில் சொல்வளத்தைப் (vocabulary) பெருக்கிக் கொள்ள நம்மில் பலர் பெரும் பயிற்சி எடுத்திருக்கிறோம். கல்லூரி நாள்களில் நார்மல் லூயிஸ் எழுதிய ”உவோர்ட் பவர் மேட் ஈசி” என்ற நூல் அதுவரை ஆங்கிலச் சொற்களை நினைவில் கொள்வதற்குத் தடுமாறிக் கொண்டிருந்த எனக்குக் கருவூலத்துக்குக் கிடைத்த திறவுகோல் போல பெரிய வரமாகக் கிடைத்தது.

அப்படித் தெரிந்து கொண்ட சொற்களைப் பயில, நம் அறிவை அடிக்கடிச் சோதித்துக் கொள்ள வேண்டும்.  ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றும் இதழில் வேறு எதைப் படிக்கிறேனோ இல்லையோ, அதன் உவோர்ட் பவர் பத்தியைப் படித்து விடுவேன்.

வட அமெரிக்கத் திங்களிதழ் “தென்றல்” என்ற இதழில் ஆசிரியராக இருந்த ஒரு காலத்தில் நண்பர் வாஞ்சிநாதன் எழுதி வரும் குறுக்கெழுத்துப் புதிர் தொடரை விரும்பிப் படிப்பேன்.  அப்போதுதான், இதற்குத் துணைப் பத்தியாக சொல்வளம் பெருக்க ஒரு தொடரைத் தொடங்கலாமே என்று எண்ணினேன். நண்பர் அட்லான்டா பெரியண்ணன் சந்திரசேகரனுடன் இதைப் பற்றிப் பேசினேன்.  சென்னை வந்திருந்தபோது நண்பர்கள் அசோகன், வாஞ்சி, ஹரிகிருஷ்ணன், மதுரபாரதி ஆகியோரிடம் இதைப் பற்றிப் பேசினேன்.  நல்ல கருத்து என்று எல்லோரும் வரவேற்றார்கள்.  ஆனால், என்ன காரணம் என்று நினைவில்லை.  இந்த விதை வளராமலே போய் விட்டது.

ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறக இது போன்ற பத்திகளோ, வலைப்பூவோ இது வரை என் கண்ணில் படவில்லை.  அப்படி ஏதும் இருந்தால் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர் முனைவர் ராஜம் அவர்களின் இலக்கணப் பதிவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஆங்கிலத்தின் ”விஷுவல் திசாரஸ்” போன்ற ஓர் களத்தை அமைப்பது பற்றிப் பேசினார்கள்.  ஆங்கிலத்தில் சொல்வளம் பெருக்கிக் கொள்ள எண்ணற்ற பல வசதிகள் இருக்கின்றன.  சிறு வயதில், ஆங்கிலம் கற்றுக் கொள்ள இந்து, எக்ஸ்பிரஸ் நாளேடுகளின் ஆசிரியருக்குக் கடிதங்கள் பின்னர் விளையாட்டுப் பகுதி என்று எளிமையான பகுதிகளைப் படித்து, தெரியாத சொற்களை அடிக்கோடிட்டு, அகராதி பார்த்து, அதைச் சொற்றொடர்களில் எப்படிச் சேர்ப்பது என்று தேடி, உச்சரிப்பு பயின்று,  பிபிசி வானொலியில் கேட்டு, என்று பல வழிகளில் இந்தத் தெரியாத மொழியைக் கையில் கொண்டு வருவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறேன்.

ஆனால் தாய்மொழியான தமிழில் சொல்வளம் பெருக்குவதற்கு இவ்வளவு கடும் முயற்சி எடுத்ததில்லை. இது அப்போது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், இப்போதெல்லாம், பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசும்போது ஏன் இதற்கான தமிழ்ச் சொற்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை என்று பார்க்கும்போது, ஆங்கிலத்தில் சொல்வளம் பெருக்கிக் கொள்ள இருக்கும் வசதிகளும், வாய்ப்பும் தமிழில் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இப்படிப் பட்ட சொல்வளக் களஞ்சியங்களை அமைப்பது என்பது கடுமையான உழைப்பும், ஆழ்ந்த தமிழறிவும், கற்போருக்கு எளிதாகக் கற்பிக்கும் பயிற்சியும், எளிமையாக எழுதும் திறமையும் எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றவர்களால் மட்டுமே செய்யக் கூடிய செயல்.  அதிலும் இதைத் தொடங்கினால், இதில் மட்டுமே காலை ஊன்றி ஒரு தவம் போலத் தொடர்ந்து செய்ய வேண்டிய பணி.  இவை எவற்றிற்குமே சற்றும் தகுதியற்ற நான் இப்படிப் பட்ட பெருமுயற்சியைத் தொடங்க வேண்டாமே என்று பல ஆண்டுகளாகத் தவிர்த்து வந்துள்ளேன்.  ஆனால், என்னைப் போன்ற தமிழில் ஆர்வமுள்ள பொறியாளன் இப்படி ஒரு வலைப்பூவைத் தொடங்கினால், பெரும் அறிஞர்களை ஒவ்வொரு வாரமும் அழைத்து வந்து அவர்களை வைத்துப் பல படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக இருக்கலாமே என்று ஒரு நம்பிக்கையோடு, 2011 பொங்கல் நாளன்று சொல்வளம் என்ற வலைப்பூவுக்கு அடிக்கல் நாட்டுகிறேன்.

இதன் முதல் படைப்பு மிகவும் எளிமையாக இருந்தாலும், வளர வளர இதன் வளத்தைக் கூட்டலாம் என்ற நம்பிக்கை உண்டு.  முதலில் சிறிய தேர்வுகளாகத் தொடக்கிப் பின்னர் வேர்ச்சொற்கள், கிளைச்சொற்கள் இவற்றை எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையில் சொல்வளக் கட்டுரைகளையும் பயிற்சிகளையும் சேர்க்கலாம். இந்தச் சிறு முயற்சிக்கு நண்பர்களின் அறிவுரையையும், பங்கேற்பையும் மிகவும் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.

இந்த வலைப்பூவின் முகவரி:  http://col-valam.blogspot.com/

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு



















வெள்ளி, ஜனவரி 14, 2011

சொல்வளம் - 1: விடைகள்

ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்

தரம்  -  உங்கள் மதிப்பெண்

புலவர்                      -   18 - 20
தலைமாணாக்கர் - 15- 17
இடை மாணாக்கர்-   11 - 14
கற்றுக்குட்டி           -   6 - 10
குருட்டாம்போக்கு   1-5
தமிழ் தெரியாது     -    0

=====================================================================

1. அழுக்காறு  4. பொறாமை
2. விசும்பு - 3. மழை மேகம்
3. பனுவல் - 2. நூல்
4. சிவிகை - 3. பல்லக்கு
5. வையம் - 2. பூமி
6. மாண்பு - 2. பெருமை
7. செறிவு -  2. கூட்டம்
8. ஊருணி - 2. குளம்
9. ஒப்புரவு - 3. ஒற்றுமை
10. வாய்மை- 4. உண்மை 
11. கேணி - 3. அகழி
12. கூகை - 4. கோட்டான் 
13. பிணி - 3. நோய் 
14. பண் - 2. இசை 
15. தாளாண்மை - 1. விடாமுயற்சி 
16. தகைமை - 2. மதிப்பு 
17. இடும்பை - 3. நோய்
18. வேட்கை - 3. விருப்பம்

19. வீறு - 1. சிறப்பு 
20. அங்கணம் 4. சாக்கடை

    சொல் வளம் - 1 : உங்களுக்குத் தமிழ் தெரியுமா?

    பின் வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்.  உங்களுக்குக் கொடுக்கப் பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள்.  அகராதிகளையோ, வேறு நூல்களையோ, கூகிள், யாகூ போன்ற வலைத்தேடு பொறிகளையோ பயன்படுத்தக் கூடாது.  ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்.  விடைகளை இன்னொரு பதிவில் காணலாம்.

    =====================================================================

    1. அழுக்காறு
    1. சென்னையில் ஓடும் ஒரு ஆறு
    2. தூய்மையற்றது
    3. பொறுமை
    4. பொறாமை

    2. விசும்பு
    1. தேம்பி அழு
    2. விக்கி அழு
    3. மழை மேகம்
    4. குறும்பு செய்

    3. பனுவல்
    1. பணிதல்
    2. நூல்
    3. கண்டு
    4. தக்கிளி
    4. சிவிகை
    1. ஒட்டகம்
    2. திமில்
    3. பல்லக்கு
    4. சிதைந்த கை
    5. வையம்
    1. திட்டு
    2. பூமி
    3. வயல்
    4. நாற்று.
    6. மாண்பு
    1. வீரம்
    2. பெருமை
    3. துணிவு
    4. அறிவு.
    7. செறிவு
    1. செருப்பு
    2. கூட்டம்
    3. தோல்
    4. சிரங்கு.
    8. ஊருணி
    1. புழு
    2. குளம்
    3. பெண்
    4. பறவை
    9. ஒப்புரவு
    1. நெருங்கிய உறவு
    2. ஒப்பிடுதல்
    3. ஒற்றுமை
    4. திருமணம்.
    10. வாய்மை
    1. உதட்டுச்சாயம்
    2. வரவேற்பு
    3. பேச்சுத்திறமை
    4. உண்மை
    11. கேணி
    1. கேள்வி
    2. காது
    3. அகழி
    4. முட்டாள் பெண்
    12. கூகை
    1. துதிக்கை
    2. படுக்கை
    3. சுண்டெலி
    4. கோட்டான்
    13. பிணி
    1. வேலை
    2. சோம்பல்
    3. நோய்
    4. மருந்து
    14. பண்
    1. காயம்
    2. இசை
    3. ஒரு வகையான ரொட்டி
    4. எலிப்பொறி
    15. தாளாண்மை
    1. விடாமுயற்சி
    2. போர்க்குணம்
    3. மேலாண்மை
    4. காலாட்படை
    16. தகைமை
    1. நகச்சாயம்
    2. மதிப்பு
    3. நட்பு
    4. மென்மை
    17. இடும்பை
    1. கசப்பு
    2. பசப்பு
    3. நோய்
    4. பசலை.
    18. வேட்கை
    1. கொடுக்கும் கை அல்லது வலது கை
    2. தேர்தல்
    3. விருப்பம்
    4. திருமணம்
    19. வீறு
    1. சிறப்பு
    2. அலறு
    3. எறி
    4. கொடி
    20. அங்கணம்
    1. கோவணம்
    2. அடிமைத்தனம்
    3. அரக்கர் படை
    4. சாக்கடை

    தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள், நன்றியுடன்

    நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

    முப்பது ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில் தமிழ்த் திருநாள்களுக்கெல்லாம் விடுமுறையும் இல்லை, அவற்றைப் பற்றி எண்ணிப் பார்க்க நேரமும் இருந்ததில்லை.  கல்லூரித் தமிழ்ச் சங்கங்கள், பெருநகரத் தமிழ் மன்றங்கள் வார இறுதியில் சேர்ந்து செய்யும் கூட்டாஞ்சோறும் கொண்டாட்டமும் இல்லையென்றால்  திருநாள்கள் வந்த சுவடு இல்லாமல் மறைந்து போகும்.  உறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் கொண்டாடிய திருநாள்களும் திருவிழாக்களும் சற்று நிழலாடும்.  தமிழக நேரப்படி உறவினர்களை அழைத்து வாழ்த்துச் சொல்லுவதும் ஆண்டுகள் பல உருண்டோடிய பின்னர் சற்றுச் செயற்கையாகத்தான் தோன்றும்.

    அமெரிக்காவின் திருநாள் விடுமுறைகளன்று வீட்டில் கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை என்றாலும், வெளியே செலவழிப்பதற்கும், தொலைகாட்சிப் பெட்டிமுன் அமர்வதற்கும் ஏதாவது இருக்கும்.  புலம்பெயர்ந்தவர்கள் இழப்புகளில் திருநாள் கொண்டாட்டங்களும்,  ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து உறவாடும் நேரத்தில் உற்றார் உறவினரோடு கூடி மகிழ்தலும் மிகப் பெரிதானவை. இளைய தலைமுறைக்கு தமிழ்த் திருநாள்களைப் பற்றிச் சொன்னாலும் புரியாது.  கரும்பும், பானையும், வெல்லமும், கோலமும், புத்தாடையும், மாவிலையும் ஊரும் உறவும் இல்லாத பொங்கலை எப்படி விவரிப்பது?  ஆனால், சன் டிவியும், சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், தமிழ்மன்றக் கலைநிகழ்ச்சிகளும், கோலாட்டங்களும், நாட்டுப்புற நடனங்களும் வெற்றிடத்தை நிறைவு செய்யும்.   தமிழ்நாட்டில் நகரங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் பொங்கல் திருநாள் கொண்டாடுவதும் கிட்டத்தட்ட இந்த நிலைக்குத்தான் வந்திருக்கிறது என்றாலும், புலம்பெயர் பொங்கல் கொண்டாட்டத்தை விட இதில் சற்றுக் கூடுதல் நிறைவு இருக்கத்தான் செய்கிறது.

    இன்று வழி நெடுக முழுக் கரும்புகளைப் பார்த்தேன். சென்னையில் மண்பானைகள் அவ்வளவாகத் தென்படவில்லை.  எவர்சில்வர் பானைகள் விற்றுப் போய்க் கொண்டிருந்தன. நாட்டுப்புறத்தைப் போல் இல்லாமல் இருந்தாலும், சென்னையின் எல்லையை ஒட்டிக் கொண்டிருக்க்கும் கொட்டிவாக்கத்தில் தெருக்கள் விழாக்கோலம் பூண்டுகொண்டிருந்தன.

    இது தமிழர் திருநாள் மட்டுமல்ல.  நன்றி நவிலும் நாளும் கூட.  இந்த அறுவடையால் பயனுறும் மக்கள் தங்கள் உணவுக்கும், அதை விளைத்த உழவர்களுக்கும், அவர்களுடைய மாடு கன்றுகளுக்கும், கதிரவனுக்கும், வேண்டிய அளவுக்குப் பெய்த மழைக்கும், நன்றி கூறும் நாள்.

    புலம் திரும்பிய நான், தமிழக வாழ்க்கையில் மீட்டெடுத்தவற்றுள் பண்டிகை நாள்களும் ஒன்று.  முப்பதாண்டுகள் வேறொரு பண்பாட்டில் வாழ்ந்து அதில் என்னை ஆழப் பிணைத்துக் கொண்ட பின்னர், தமிழக, இந்தியச் சூழலில் வாழ்வதில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான தடுமாற்றங்கள் இருக்கின்றன. பிறந்த மண்ணில் வாழ்ந்தாலும், பேசும் மொழி தமிழ்தான் என்றாலும், பண்பாட்டு இடைவெளி, தலைமுறை இடைவெளி இவை இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.  இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படிநிலை அமைப்பில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் சமுதாயம்.  இதில் செயலாற்றி வெற்றி பெறுவது எளிதல்ல. குறிப்பாகத் தமிழ்ச் சூழ்நிலையில்,  பொது நோக்கில் பின்புலத்தில் நின்று செயலாற்றி வெற்றி பெறுவதை விடத் தோல்வியில்  பேரும் புகழையும் விரும்பும் பண்பாடு இங்கே மேலோங்கி இருக்கிறது.  வெற்றியை விட வீரமரணத்தை உவந்து ஏற்கும் மறத்தமிழர் பண்பாடாயிற்றே!

    இருப்பினும், ஊர் கூடித் தேர் இழுத்துத் தேரை நிலைக்குக் கொண்டு சேர்த்த பல வெற்றிகளை, சென்ற ஆண்டில் நடத்தி நிறைவேற்றிய சிலவற்றை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

    யூனிக்கோடு குறியீடு பற்றி நடந்த பத்தாண்டுப் போராட்டம் ஒரு வழியாக முடிந்தது.  இந்தப் போராட்டத்தைப் பற்றிப் பின்னொரு முறை, புண்கள் ஆறிய பின்னால், குழப்பவாதிகள் குறுக்கிடாமல் இருக்கும்போது, ஆர அமற எண்ணிப் பார்த்து எழுத வேண்டும்.  இது தமிழருக்குள் நடந்த உள்நாட்டுப் போர். சோழப் பெருவேந்தர்களுக்கும் சேரநாட்டுக்கும் நடந்த நூறாண்டுப் போருக்கு இது எதிலும் சளைத்ததல்ல.  இந்தப் போரில் உத்தமம் அமைப்போடு வேறுபட்டிருந்த காரணத்தினால், செயற்குழுவில் இருந்து மாறுபடுவதைக் காட்டிலும் விலகி நின்று எதிர்ப்பதே மேல் என்று 2003 இறுதியில் விலகினேன்.  2007ல் மவுன்டன் வியூ கூகிள் வளாகத்தில் நடந்த யூனிக்கோடு  நுட்பக் குழு கூட்டத்தில் பேரா. பொன்னவைக்கோ தலைமையில் TACE-16 குறியீட்டுக்கு இட ஒதுக்கீடு பற்றி வாதாடினேன்.  எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி யூனிக்கோடு தென்னாசியக் குழு TACE-16 குறியீடு பற்றித் துறை வல்லுநர்களோடு  பேச 2008ல் சென்னைக்கு வந்தது.  2009ல் உத்தமம் அமைப்பு தமிழக அரசுக்கு யூனிக்கோடு குறியீட்டை அரசுத்தரமாக ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்தது.  இதற்கு உத்தமம் அமைப்பின் பொதுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தது.  இந்நிலையில் 2010ல் உத்தமம் அமைப்பில் மீண்டும் இணைந்தேன்.


    இழுபறி நிலையில் இருந்து வந்த இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண யூனிக்கோடு அணியின் தலைவர் முரசு அஞ்சல் முத்து நெடுமாறன் என்னுடன் தொடர்பு கொண்டு பதிப்புத் துறையின் தீர்வுகளுக்காக TACE-16 குறியீட்டையும் இணைத்தரமாக ஏற்றுக் கொள்வது பற்றிப் பேசி, TACE-16 அணியின் தலைவர் காட்கிராஃப் இளங்கோவனோடு இணைந்து  உடன்படிக்கை ஒன்றுக்கு வழிவகுத்தார்.  இது தமிழ் இணையம் 2010ல் யூனிக்கோடும், TACE-16 குறியீடும் தமிழக அரசின் தரங்களாக அறிவிப்பதற்கு வழி வகுத்தது.  இதற்கு நான் முத்துவுக்கும், இளங்கோவுக்கும், இது நிறைவேறப் பின்னணியில் இருந்து கடுமையாக உழைத்த எண்ணற்ற பலருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.  இந்த உடன்படிக்கையை ஏற்று அரசுக்குப் பரிந்துரை அனுப்பிய பேரா. ஆனந்தகிருஷ்ணன் குழுவில் பரிந்துரை வரைவு செய்த குழுவினரின் படம் கீழே:

    யூனிகோடு துணைக்குழு - (இ-வ) ”பொன்விழி” பேரா. கிருஷ்ணமூர்த்தி, ”பழனியப்பா பிரதர்ஸ்” செல்லப்பன், முனைவர் நக்கீரன், ”காட்கிராஃப்” இளங்கோவன், தி.ந.ச. வெங்கடரங்கன், மணி மு. மணிவண்ணன்
     இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்,  கடந்த பல ஆண்டுகளில் பல சமயங்களில் என்னுடன் இணைந்து செயல்பட்ட எல்லோரிடமும் எனக்கு ஏதோ சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,  சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும், இறுதியில் என்னையும் சேர்த்துத்தான் ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறது!. தேர் நிலைக்கு வந்து சேரப் பத்தாண்டுகளா என்ற மலைப்பு இருந்தாலும், இந்த இழுபறி உத்தமத்துக்கும் எங்களுக்கும் பல பாடங்கள் கற்றுத் தந்திருக்கிறது.  உத்தமத்துக்குப் பொறுப்பேற்றிருக்கும் புதிய தலைமுறை எங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டால் இது போன்ற இழுபறிகளை வருங்காலத்தில் தவிர்க்க முடியும். கிரந்தம் தொடர்பான சிக்கலில் எனது அண்மைக்கால நடவடிக்கைகளைக் கவனிப்பவர்களுக்கு நான் கடந்த பத்தாண்டுகளில் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் செயல்படுகிறேன் என்று புரியும்.  பத்தாண்டுப் போரில் விழுப்புண் பெற்ற “வீரர்கள்”  கிரந்தம் பற்றிய செயல்பாட்டில் ஒரே அணியில் இருக்கிறோம்!  ஆனால், இதில் புதிதாக நுழைபவர்களுக்கு எங்கள் செயல்கள் புதிராக இருக்கலாம்.

    இப்படி அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்நாட்டுத் தரத்தின் படி, தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்துக்கும், இணையத்தில் தமிழ் புழங்கும் அனைவருக்கும், ஏற்ற எழுத்துருக்கள், விசைப்பலகைகள், குறிமாற்றிகள் அனைத்தையும் இலவசமாக அமைத்துத் தருவதற்கு தமிழக அரசே ஏற்பாடு செய்கிறது.  இந்த மென்கலன்களை உருவாக்குவதற்கான விதிமுறைகளையும் வழிவகுத்து இவற்றைப் படைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழக அரசு ஒரு பணிக்குழுவை நியமித்தது.  அதன் உறுப்பினர்களில் சிலரின் படத்தைக் கீழே காணலாம்:

    தமிழ் யூனிக்கோடு மென்கலன் பணிக்குழு (இ-வ). மணி மு. மணிவண்ணன், சி-டாக் சீனிவாசன், செல்லப்பன், பேரா. நக்கீரன். (என்.ஐ.சி.யின் பிரின்ஸ் இதில் இல்லை)

    ஏற்கனவே தமிழ் யூனிக்கோடு தரத்துக்குப் பல எழுத்துருக்களும், விசைப்பலகைகளும் இருந்த போதிலும் ஏன் தமிழக அரசு வீணாக இதற்குப் பணம் செலவழிக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.  தமிழக அரசு அறிவித்திருக்கும் யூனிக்கோடு தரம், இப்போது இருக்கும் யூனிக்கோடு குறியீட்டில் இருக்கும் சில சிக்கல்களுக்குத் தீர்வு காணுகிறது. தற்போது இருக்கும் மென்கலன்கள் இந்தத் திருத்திய தரத்துக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும்.  மேலும், அரசு இலவசமாக வழங்கும் எழுத்துருக்கள் கணினிக் கிருமிகள் புக வாய்ப்பு இல்லாதபடி அரசின் எண்ணிம முத்திரையோடு (Government's digitally signed fonts) அமைய வேண்டும்.  கூடுதலாக, அரசின் ஏற்போடு படைக்கப் படும் எழுத்துருக்கள் அதன் எல்லாத் தேவைகளையும் நிரப்பும் உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும்.  இந்த அனைத்துத் தேவைகளையும் நிரப்பும் பொறுப்பை வென்ற அமைப்புகளின் சார்பாளர்களின் படம் கீழே:

    தமிழக அரசுக்கு யூனிக்கோடு மென்கலன் படைப்பவர்கள்: (இ-வ) காட்கிராஃப் (விண்டோஸ் விசைப்பலகை), சென்னைக்கவிகள்(லினக்ஸ் விசைப்பலகை), நியூ ஹொரைசன் மீடியா(வலை விசைப்பலகை), காட்கிராஃப் (விசைப்பலகை), மாடுலர் (எழுத்துரு)

    இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நான்கு நிறுவனங்களும் தமிழ் மென்கலன் பயனர்களுக்கு நன்கு அறிமுகமானவை.  அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    பழைய கல்லூரி மாணவர்கள் கூடுவது என்பது அடிக்கடி நடக்கக் கூடியதுதான் என்றாலும், என்ன காரணத்தாலோ, 1978ல் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற நானும் என் வகுப்புத் தோழர்களும் கடந்த 32 ஆண்டுகளாகச் சந்திக்கவே இல்லை!  தற்செயலாகச் சில தோழர்கள் 2010ன் தொடக்கத்தில் நாம் பழைய தோழர்களைக் கண்டுபிடித்துக் கூடுவதற்கு ஏற்பாடு செய்தால் என்ன என்று பேசத் தொடங்க, இணையம் வழியாகப் பலரைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள்.  என்னையும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் பழைய வலைப்பக்கம் ஒன்றில் கண்ட படத்தில் இருந்து அடையாளம் கண்டு தொடர்பு கொண்டார்கள்.  நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி தற்போது சென்னையில் வாழ்வது தெரிந்ததும், என்னையும் கூடல் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணித்தார்கள்.

    நல்ல வேளையாகப் பணிக்குழுவில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் என்னை விடத் திறமைசாலிகள்.  சென்னையில் இப்படிப்பட்ட கூடல் நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.  இராமனுக்குப் பாலம் அமைக்கத் துணை சென்ற அணிலைப் போல நானும் அவர்களுக்குச் சிறிது உதவி செய்தேன் என்று நம்புகிறேன்!  பழைய மாணவர்கள் 120 பேரில் 55 பேர் உலகெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். ஓய்வு பெற்றிருந்த எங்கள் ஆசிரியர்களில் பலரையும் மீண்டும் அழைத்து வந்து சால்வை போர்த்திப் பெருமைப் படுத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.  அந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்கள். நிகழ்ச்சியின் படம் ஒன்று கீழே:

    அ.செ.தொ.நு.கல்லூரி ‘78 மாணவர்கள் ஆசிரியர்களைப் போற்றும் விழா

    எங்கள் ஆசிரியர்களை மீண்டும் பார்த்துப் போற்றும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.  32 ஆண்டுகளுக்குப் பின்னால் எங்களை அவர்களுக்கு அடையாளம் தெரிவதே பெரிய செய்தி.  சொல்லப் போனால் எங்கள் தோழர்களில் பலரையே எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அடையாளம் தெரிந்த பின்பு, 32 ஆண்டு இடைவெளியே இல்லாதது போலப் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். அதே அரட்டை. கவிஞர் கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை எல்லோரையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  விடிய விடிய உலகின் சிக்கல்களுக்குத் தீர்வு காண முயன்றோம்.  அன்று இருந்தது போல் இன்றும் உலகை மாற்ற எங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருந்தோம்.  அன்று எங்களுக்கு வாழ்க்கைக்கு ஏராளமாக நேரம் இருந்தது.  இன்று வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள்.  ஓரிரு நாள்களுக்கு அலுவல், குடும்பம், ஏனைய பணிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டுப் பழைய தோழர்களோடு இன்னும் வாழ்க்கையைத் தொடங்காத இளைஞர்கள் போலக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனதுக்கு இதமாக இருந்தது.  ஆண்டு முழுதும் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி நொடியில் பறந்து போய் விட்டது போல் இருந்தாலும், உள்ளம் நிறைவாக இருக்கிறது.  எனது தோழர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.

    ஊர் கூடித் தேர் இழுக்கும் பணியில் கயிறு நம்மைப் புண்படுத்தலாம்.  நாம் மிதி படலாம்.  தேர்ச்சக்கரம் நம்மை உரசலாம்.  ஆனால் வீதியெல்லாம் தேர் ஓடி நிலையில் சேரும்போது ஒரு நிறைவு இருக்கிறதே, அதில் பட்ட புண்கள் எல்லாம் மறந்து விடும்.  சோர்வு எல்லாம் நீங்கி விடும்.  மீண்டும் அடுத்த திருவிழா எப்போது என்று தேர் இழுக்க மனம் நாடும்.  அந்த நிறைவுக்காக இப்போது உடலிலும் உள்ளத்திலும் ரணமாக இருந்தாலும், இன்னொரு தேர் இழுத்துக் கொண்டிருக்கிறேன்.  :-). அது பற்றி இன்னொரு முறை...எழுதலாம் என்று எண்ணம்....  பார்ப்போம்.

    நிறைவாக, இந்த ஆண்டு பொங்கல் வாரத்துத் தமிழ்மணத் தாரகையாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் அமைப்புக் குழுவுக்கும், தமிழ்மணம் சுட்டியிலிருந்து எனது வலைப்பூவுக்கு வந்து எனது கருத்துகளைப் படித்து என்னோடு கருத்தாடும் புதிய வாசகர்களுக்கும் எனது நன்றிகள் பல.  உங்கள் அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகள்.  வரும் ஆண்டு உங்களுக்கும் நிறைவாக இருக்கட்டும்.